டெல்லி சென்ற அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று சந்தித்துப் பேசினார். இதையடுத்து, அமித்ஷா தனது எக்ஸ் வலைதளத்தில், 2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று பதிவிட்டுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்ற நிலையில் டெல்லியில் திறந்துவைத்த அதிமுக அலுவலகத்தை அவர் பார்வையிட்டார். மேலும் நேற்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்ததும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோர் டெல்லி சென்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு திடீரென மத்திய அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.
அப்போது, தமிழகத்தின் அரசியல் நிலவரம், கூட்டணி மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்டவை தொடர்பாக இருவரும் பேசியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து அமித்ஷா தனது எக்ஸ் வலைதளத்தில், "2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்" என்று குறிப்பிட்டுள்ளார்.