அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு நுழைந்து இன்று பெரும் பிரபலங்களின் வயிற்றில் புளியை கரைத்துக் கொண்டிருக்கிறது #MeToo. பிரபலங்களால் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து பெண்கள் இந்த ஹேஷ்டேக்கில் போட்டுடைக்க, என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி போயிருக்கின்றனர் குற்றத்திற்கு ஆளாகி இருப்போர்.
இந்த மீ டூ மூலம் பாலிவுட் முன்னணி திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள் மீது பாலியல் புகார் எழுந்தது. ஒரு படி மேலே போய் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் எம்.ஜே. அக்பர், ஊடகவியலாளராக இருந்த காலத்தில் பெண்களிடத்தில் தவறாக நடந்த கொண்ட அனுபவங்களை பகிரங்க குற்றச்சாட்டுகளாக பெண் ஊடகவியலாளர்கள் முன் வைத்தனர்.
இதையடுத்து, மீ டூ புகார்களை விசாரிக்க தனிக்குழுவை அமைத்தது மத்திய அரசு.
தமிழகத்தைப் பொறுத்தவரை கவிஞர் வைரமுத்து, பாடகர் கார்த்திக், நடிகர் ராதாரவி என்று லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. பல பெண்களின் புகார் பட்டியலை பாடகி சின்மயி தனது ட்விட்டரில் வாசித்துக் கொண்டிருக்கிறார்.
இன்றைய தேதியில், பல பிரபலங்கள் சின்மயி ட்விட்டர் அக்கவுன்ட்டை ஒருவித பயத்துடன் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதே நிதர்சனம்.
ஆனால், இதுவரை சாட்டப்பட்ட எந்த குற்றச்சாட்டிற்கும் ஆதாரம் இல்லை. இதனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாமாக ஒப்புக் கொண்டாலே ஒழிய, அவர்களுக்கு தண்டனை கிடைக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. குற்றம் எப்போது நடந்தது என்பது சட்டத்திற்கு முக்கியமல்ல. அது எப்போது நடந்திருந்தாலும் தண்டனை உண்டு. ஆனால், அதற்கு ஆதாரம் வேண்டும்.
இந்தச் சூழ்நிலையில், இந்தியாவின் அடையாளமாக பார்க்கப்படும் நடிகர் அமிதாப் பச்சன் மீதும், பிசிசிஐ-யின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரி மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
பிரபல சிகை அலங்கார நிபுணர் சப்னா பவ்நானி என்பவர் தான் அமிதாப் பச்சன் மீது பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். சமீபத்தில் Me Too வலைத்தள பதிவிற்கு அமிதாப் பச்சன் ஆதரவு அளித்திருந்தார். அதனை ஒரு செய்தியாளர் டுவிட்டரில் பகிர, அதை ரீ ட்வீட் செய்த சிகை அலங்கார நிபுணர் சப்னா பவ்நானி, "இது மிகப்பெரிய பொய். அமிதாப் அவர்களே! பிங்க் திரைப்படம் வெளியாகிக் கடந்து சென்று விட்டது. அதேபோல் போராளியாக காட்டிக் கொள்ளும் உங்களது முகமும் வெட்டவெளிச்சமாகும். உங்களது உண்மை மிக விரைவில் வெளிவரும். உங்கள் கைகளை தற்போது கடித்துக் கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில் உங்கள் விரல் நகங்கள் எப்போதோ காணாமல் போயிருக்கும். பச்சன் குறித்து ஏராளமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அவை அனைத்தும் படிப்படியாக வெளிவரும் என்று குறிப்பிட்டுள்ளார்".
அதேபோல், பிசிசிஐ அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோஹ்ரி மீது மீ டூ மூலம் ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். பெயர் வெளியிடாத அந்தப் பெண் அளித்த புகாரை எழுத்தாளர் ஹர்னித் கவுர் வெளியிட்டுள்ளார்.
பிசிசிஐ அமைப்பின் சிஇஒவாக பணியாற்றும் முன், ராகுல் ஜோஹ்ரி 2001 முதல் 2016-ம் ஆண்டுவரை பல்வேறு சேனல்களில் பணியாற்றியுள்ளார். அவ்வாறு டிஸ்கவரி சேனலில் பணியாற்றியபோது, ஒரு பெண்ணிடம் ராகுல் ஜோஹ்ரி தவறாக நடந்துள்ளதாக அந்த எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து பிசிசிஐ சிஇஓ ராகுல் ஜோஹ்ரி விளக்கம் அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள நிர்வாகக் குழு உத்தரவிட்டுள்ளது.