Congress presidential poll: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சசி தரூர் சிறந்த தேர்வு என ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் சைபுதீன் சோஸ் (Saifuddin Soz) தெரிவித்துள்ளார்.
இது குறித்து சைபுதீன் சோஸ், “சசி தரூர் நன்கு படித்தவர். அவருக்கு பரந்த உலக கண்ணோட்டம் உண்டு. அவர் கல்வியறிவு மட்டுமின்றி உலக அறிவோடு நன்கு ஆற்றல் மிக்கவர்” என்றார்.
இருப்பினும் தமக்கு காந்தியின் குடும்பத்தினரின் ஆதரவு பெற்றுள்ள மல்லிகார்ஜூன கார்கே மீது மதிப்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.
இரண்டு முறை மத்திய அமைச்சராக இருந்த சோஸ், தரூருக்குப் பின்னால் அணிவகுத்த முதல் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஆவார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக காந்தி அல்லாத குடும்பத்தினர் தலைமை பொறுப்பு வகிப்பது இது முதல் முறையல்ல.
கடந்த காலங்களில் பி.வி., நரசிம்ம ராவ் மற்றும் சீதாராம் கேஸ்ரி ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்புக்கு தேர்தல் நடத்தப்பட்டாலும் இது ராகுல் காந்திக்கு பெருமைதான். ராகுல் காந்தியின் கன்னியாகுமரி-காஷ்மீர் யாத்திரையால் பாரதிய ஜனதா திணறியது.
“ராகுல் காந்தி தொடர்ந்து மக்களை ஈர்த்துவருகிறார். அவரின் நடை பயணம் காங்கிரஸிற்கு புத்துயிர் அளித்துள்ளது” என்றார்.
இதையடுத்து, காங்கிரஸில் இருந்து மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ராஜினாமா செய்து, புதிய கட்சி தொடங்குவது குறித்து கேட்டதற்கு, காஷ்மீரில் அதிக பாதிப்பு இருக்காது எனப் பதிலளித்தார்.
இது குறித்து அவர், “காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சிக்கும், பிடிபிக்கும் அதிக தொண்டர்கள் உள்ளனர். நாங்களும் (காங்கிரஸ்) அந்த இடத்தில் வருகிறோம். என்னைப் பொறுத்தவரை மற்றவர்களுக்கு இங்கு செல்வாக்கு இல்லை” என்றார்.
பின்னர், மென்மையான இந்துத்துவாவைக் கடைப்பிடிப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டதற்கும் சோஸ் பதிலளித்தார்.
அதற்கு, “காங்கிரஸ் முற்றிலும் மதச்சார்பற்ற கட்சி. மதச்சார்பின்மை அதன் நிகழ்ச்சி நிரலின் மையத்தில் உள்ளது. ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் கொண்ட சில தலைவர்கள் இருக்கலாம்” என்றார்.
மேலும், “காங்கிரஸிற்கு ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் இல்லை” என்று நேரு கூட கூறினார் என்றும் சோஸ் சுட்டிக் காட்டினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“