பஞ்சாப் ரயில் விபத்து : எந்த விதிமுறைகளையும் நாங்கள் மீறவில்லை - ரயில்வே திட்டவட்டம்

விபத்திற்கு பொறுப்பேற்க முடியாது. ஆனால் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பினை தருவோம்

பஞ்சாப் ரயில் விபத்து ரயில்வே விளக்கம் : அமிர்தசரஸ் அருகே தசரா அன்று, ராவண வத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள் பொதுமக்கள். ராவணனை எரிக்கும் போது நிகழ்ச்சியினை கண்டு களிப்பதற்காக பலர் ரயில்வே ட்ராக்கில் ஏறி நின்றார்கள். அச்சமயம் அவ்வழியே வந்த டீசல் மல்டிபிள் யூனிட் ரக ரயில் அங்கிருந்த மக்கள் மீது வேகமாக ஏறிச் சென்றது. இந்த கோர விபத்தில் 59 பேர் பலியாகி உள்ளனர். இது குறித்த விரிவான செய்தியைப் படிக்க

ரயில் ஓட்டுநரின் விளக்கம்

இது குறித்த விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார் பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங். நேற்று ஏற்கனவே “எங்களிடம் தசரா நிகழ்வு குறித்து எந்த தகவலும் அளிக்கப்படாத நிலையில் நாங்கள் எப்போதும் போல் ரயிலை இயக்கினோம்” என குற்றச்சாட்டுக்கு மறுப்பு கூறியிருந்தது ரயில்வே.

தற்போது அந்த வண்டியை இயக்கிய ஓட்டுநர் அரவிந்த் குமார் “நான் மக்கள் கூட்டத்தைப் பார்த்தவுடன் எமெர்ஜென்சி ப்ரேக்கினை போட்டு வண்டியை நிறுத்த எவ்வளவோ முயற்சி செய்தேன். இருந்தும் வண்டி சரியான நேரத்தில் நிற்கவில்லை. அதன் பின்னர், அங்கிருந்த பொது மக்கள் ரயில் மீது கற்களை தூக்கி எறிந்து தாக்குதல்கள் நடத்தினார்கள். என்னுடைய பயணிகளின் உயிரைக் காப்பாற்ற வேகமாக வண்டியை இயக்கினேன்” என தன் தரப்பு விளக்கித்தினை அளித்திருக்கிறார் அரவிந்த் குமார்.

பஞ்சாப் ரயில் விபத்து ரயில்வே விளக்கம்

அரவிந்த் குமாரின் கருத்தானது, அந்த விபத்தினை நேரில் கண்டவர்களின் சாட்சியங்களுக்கு முற்றிலும் முரணாக இருக்கிறது. ஆனால் ரயில்வேயில் இருக்கும் யார் மீதும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க இயலாது. காரணம், ரயில் அதற்கான தடத்தில் ஒழுங்காக சென்று கொண்டிருந்தது. ரயில்வே கிராஸ்ஸிங்கில் மக்களுக்கு அனுமதி இல்லை என்பதை அனைவரும் அறிந்திருக்கும் பட்சத்தில் ரயில்வே மீது குறை சொல்வது நியாயமில்லை என்று ரயில்வே தரப்பு கூறியிருக்கிறது. ரயிலில் செல்பவர்களுக்கோ, ரயிலுக்கோ ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருந்தால் மட்டுமே ரயில் விபத்து என்று கூற இயலும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது ரயில்வே.

விதிமுறை மீறல்கள்

இந்த விழாவில் கலந்து கொண்ட அனைத்து உள்ளூர்வாசிகளுக்கும் இந்த பகுதியில் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு முறை ஒரு ரயில் வருமென தெரியும். எந்த விதிமுறை மீறல்களையும் ரயில்வே செய்யவில்லை. மாநில அரசின் விசாரணைக்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பினைத் தருவோம் என வடக்கு ரயில்வேயின் ஜெனரல் மேனேஜர் விஷ்வேஷ் ச்சௌபே தெரிவித்திருக்கிறார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

அமிர்தசரஸ் ஸ்டேசன் டிரைக்டர் அம்ரித் சிங் கூறுகையில் “இந்த விபத்திற்கும் நிச்சயம் ரயில்வே துறை பொறுப்பேற்றுக் கொள்ள இயலாது. 200 பேர் மட்டுமே கூடியிருக்க இயலும் ஒரு பகுதியில் 2000க்கும் மேற்பட்டோர் குழுமியிருந்திருக்கின்றனர். மேலும் தசரா விழா கொண்டாடுவதற்கு எந்த விதமான அனுமதியையும் முனிசிபல் கமிசனிடம் இருந்து வாங்கவில்லை. விழாவினை ஏற்பாடு செய்திருந்தவர்களும் பொதுமக்களும் தான் விதிகளை மீறினார்கள். ரயில்வே இல்லை என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

விபத்தினை ஏற்படுத்திய இந்த அமிர்தசரஸ் டிஎம்யூ (DMU 74643) ரயில் மனன்வாலா ரயில் நிலையத்தில் இருந்து 8 நிமிடங்கள் தாமதமாக எடுக்கப்பட்டு சரியாக 7 மணிக்கு அமிர்தசரஸ் வந்தடைந்திருக்கிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close