உயர்பதவி வகிப்பவர்களுக்கே ‘கௌரவ’ டாக்டர் பட்டம்: இந்தியன் எக்ஸ்பிரஸ் புலனாய்வில் அம்பலம்

உயர் பதவிகளை வகித்து வரும் அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கே பெரும்பாலும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி வருவது ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ புலனாய்வில் தெரியவந்துள்ளது.

பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி), தேசிய அங்கீகாரம் மற்றும் ஆய்வுக் கவுன்சில் (என்ஏஏசி) ஆகிய உயர் அமைப்புகளில், உயர் பதவிகளை வகித்து வரும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கே பெரும்பாலும் இந்திய பல்கலைக்கழகங்களால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி வருவது ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ மேற்கொண்ட புலனாய்வு மூலம் தெரியவந்துள்ளது.

கௌரவ டாக்டர் பட்டங்கள் மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது:

1. இலக்கியம், தத்துவம், கலை, இசை, கல்வி ஆகிய துறைகளில் சிறந்து விளன்கியவர்கள்

2. அறிவியல், தொழில்நுட்பம், திட்டம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துபவர்கள்

3. சட்டத்தில் சிறந்து விளங்கிய வழக்கறிஞர்கள், நீதிபதிகள்

கௌரவ டாக்டர் பட்டத்தை பெறுபவர்கள் அப்பட்டத்தின் மூலம் பணம், பொருள் லாபத்தை பெற முடியாவிட்டாலும், சமூகத்தில் பெரும் நம்பிக்கையையும் செல்வாக்கையும் பெறுவர்.

1997-2017 வரையிலான 20 ஆண்டுகளில் யார், யாருக்கெல்லாம் இந்திய அரசு பல்கலைக்கழகங்களால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது என்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்துகொள்ள முயற்சித்தது. இதனால், இதுதொடர்பான பல்வேறு கேள்விகளுக்கான பதில்களை 470 பல்கலைக்கழகங்களிடம் ஆர்டிஐ மூலம் கோரியது. அந்த 20 ஆண்டுகளில் 160 பல்கலைக்கழகங்கள் 1,400 பேருக்கு 2,000 கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்கியுள்ளது. 126 பல்கலைக்கழகங்கள் யாருக்கும் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கவில்லை. 184 பல்கலைக்கழகங்கள் எந்தவித பதிலையும் தெரிவிக்கவில்லை.

மேலும், இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த புலனாய்வு மூலம், இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர்களான பிரதீபா பாட்டில், பிரணாப் முகர்ஜி ஆகியோரும், மத்திய பல்கலைக்கழகங்களில் உயர் பதவிகளை வகித்தபோதுதான், அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது.

அதேபோல், இந்திய அறிவியல் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரும், விஞ்ஞானியுமான கோவர்த்தன் மேத்தா தேசிய அங்கீகாரம் மற்றும் ஆய்வுக் கவுன்சிலின் (என்ஏஏசி) நிர்வாக குழு தலைவராக 2006-2012 காலகட்டத்தில் இருந்தார். அந்த 6 ஆண்டு காலகட்டத்தில், கோவர்த்தன் கர்நாடகா முதல் காஷ்மீர் வரை உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் 18 கௌரவ டாக்டர் பட்டங்களை பெற்றது இந்த புலனாய்வு மூலம் அம்பலமாகியுள்ளது.

அதேபோல், பொருளாதார அறிஞர் சுக்டோ தோரட் யுஜிசி தலைவராக இருந்த சமயத்தில், 2006-2011 வரையில் 7 கௌரவ டாக்டர் பட்டங்களை பெற்றிருக்கிறார்.

மேலும், யுஜிசி தலைவராக இருந்த 1999-2002 வரையில் ஹரி கௌதம் என்பவர் 4 கௌரவ டாக்டர் பட்டங்களும், 2002-2005 வரை தலைவராக இருந்த அருண் நிகாவேகர் இரண்டு கௌரவ டாக்டர் பட்டங்களையும், 2013-2017 காலகட்டத்தில் வேத் பிரகாஷ் என்பவர் 3 கௌரவ டாக்டர் பட்டங்களையும் பெற்றது ஆர்டிஐ மூலம் நிரூபணமாகியுள்ளது.

இந்திய மருத்துவ கவுன்சிலின் தலைவராக கேத்தன் தேசாய் இருந்தபோது, அவருக்கு தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தால் 2009-ஆம் ஆண்டு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டே தேசாய் ஊழல் குற்றச்சாட்டால் சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.

வேளாண் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வி துறையின் செயலாளராக எஸ்.ஐயப்பன் என்பவர் 2010-2016 காலகட்டத்தில் செயலாற்றியபோது, பல்வேறு வேளாண் மற்றும் கால்நடைத் துறை அமைச்சகத்தால் 5 கௌரவ டாக்டர் பட்டங்களை பெற்றுள்ளார்.

எஸ்.ஐயப்பனுக்கு முன்பு அத்துறையின் செயலாளராக 1997-2003 வரை செயலாற்றிய மங்கள ராய் என்பவர், 2 கௌரவ டாக்டர் பட்டங்களை பெற்றிருக்கிறார். அதேபோல், பயிர் அறிவியல் துறையின் துணை இயக்குநராக 1997-2003 காலகட்டத்தில் செயலாற்றியபோது, ஏற்கனவே கௌரவ டாக்டர் பட்டத்தை பெற்றிருக்கிறார் மங்கள ராய்.

மங்கள ராய்க்கு முன்பாக வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வி துறையின் செயலாளராக 1992-2001 காலகட்டத்தில் இருந்த ஆர்.எஸ்.பரோடா 2 கௌரவ டாக்டர் பட்டங்களை பெற்றிருக்கிறார்.

தேசிய அறிவுசார் ஆணையத்தின் தலைவராக 2005-2009 காலகட்டத்தில் இருந்த சாம் பிட்ரோடா 5 கௌரவ டாக்டர் பட்டங்களை பெற்றது ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது. இவர் அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்குக்கு கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி தொடர்பாக ஆலோசனை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஸ்வேஷ்வரய்யா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (2014), மைசூரு பல்கலைக்கழகம் (2014), கோலாபூர் பல்கலைக்கழகம் (2013), ராஜீவ் காந்தி விஷ்வவித்யாலயா (2013), ஐஐடி கோரக்பூர் (2011) ஆகிய கல்வி நிறுவனங்களில் இவர் கௌரவ டாக்டர் பட்டங்களை பெற்றிருக்கிறார்.

1998-2004 வரை மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷி 2 கௌரவ டாக்டர் பட்டங்களையும், 2004-2009 வரை அத்துறை அமைச்சராக இருந்த மறைப்த அர்ஜூன் சிங் ஒரு கௌரவ டாக்டர் பட்டத்தையும் பெற்றிருக்கிறார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அத்துறை அமைச்சராக 2006-2011 காலகட்டத்தில் பதவி வகித்த புரந்தரேஸ்வரி 2 கௌரவ டாக்டர் பட்டங்களையும் பெற்றார். இவர் தற்போது பாஜகவில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்கலைக் கழகங்கள் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்குவதற்கு அதிகாரம் பெற்றிருக்கின்றன. அதற்கான இறுதி ஒப்புதல்கள் அப்பல்கலைக்கழகங்களின் வேந்தர்களால் வழங்கப்படுகின்றன.

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தான் அப்பதவி வகித்தபோது, மத்திய பல்கலைக்கழகங்களின் பாவையாளராக இருந்தார். அப்போது கோவா பல்கலைக்கழகம் (2017), அசாம் பல்கலைக்கழகம் (2012), கொல்கத்தா பல்கலைக்கழகம் (2014) ஆகிய பல்கலைக்கழகங்களிலிருந்து 3 கௌரவ டாக்டர் பட்டங்களை பெற்றிருக்கிறார்.

அதேபோல், முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டில், பத்மாவதி மருத்துவ பல்கலைக்கழகம் (2008), வட மஹராஷ்டிரா பல்கலைக்கழகம் (2012), கோவா பல்கலைக்கழகம் (2009) ஆகிய பல்கலைக்கழகங்களில் 3 கௌரவ டாக்டர் பட்டங்களை பெற்றார்.

பல்கலைக் கழகங்கள் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்குவதற்கு அதிகாரம் பெற்றிருந்தாலும், அதிகார அரசியலுக்கு உட்படாமல் இருக்க வேண்டும் என, பல்கலைக்கழகம் ஒன்றின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சமூகத்தில் உயர் பதவியில் வகிப்பவர்கள், கல்வித்துறையில் அதிகாரம் படைத்தவர்கள் இத்தகைய பட்டங்களை பெற்றுக்கொள்ளக் கூடாது என, உத்தரபிரதேச தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் துர்க் சிங் சௌஹான் கூறினார். மேலும், உயர் பதவியில் வகிப்பவர்களுக்கு இத்தகைய பட்டங்களை வழங்குவதன் மூலம், பல சமயங்களில் துணை வேந்தர்கள் ஆதாயம் அடைய வாய்ப்புண்டு எனவும் அவர் தெரிவித்தார்.

இத்தகைய பட்டங்களை பெறுபவர்கள் பலரும் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் எந்த சாதனையையும் படைத்திருக்க மாட்டார்கள் எனவும், தங்களின் உயர் பதவிகள் காரணமாகவே பட்டங்களை பெறுவர் எனவும் கல்வி துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து என்ஏசிசி அமைப்பின் முன்னாள் தலைவர் கோவர்த்தன் மேத்தாவிடம் கேட்டபோது, தான் கௌரவ டாக்டர் பட்டம் வாங்கியதில் எந்தவித பிரச்சனையும் இல்லை என தெரிவித்தார்.

யுஜிசி தலைவராக இருக்கும்போதே கௌரவ டாக்டர் பட்டம் பெற்றது குறித்து சுக்டோ தோரட்டிடம் கேள்வி எழுப்பியதற்கு, பட்டம் வழங்கும் கல்வி நிறுவனம், பட்டத்தை பெறுபவர் என இரண்டு தரப்பும் அடிப்படை விதிகளை மீறாமல் இருக்க வேண்டும் எனவும், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் வழங்கிய பட்டங்களை தான் மறுத்துவிட்டதாகவும் கூறினார்.

வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வி துறையின் முன்னாள் செயலாளர் ஐயப்பன் கூறியதாவது: “இந்த பட்டங்கள் சில சாதனைகளை புரிந்ததற்காக வழங்கப்பட்டன. இதுகுறித்து, நான் எந்தவித கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை”.

அத்துறையின் மற்றொரு முன்னாள் செயலாளரான மங்கள ராய், இத்தகைய பட்டங்களை வழங்கும் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் உதாரணங்கள் உள்ளன என ஒப்புக்கொண்டார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

×Close
×Close