மார்ச் மாதம் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஆனா ஹோரோடெட்ஸ்கா, இந்தியாவைச் சேர்ந்த டெல்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அனுபவ் பாஷினை மணம் முடிக்க திட்டமிட்டிருந்த நிலையில் தான் அவர்களின் எதிர்பார்ப்புகளையும் கனவையும் சீர் குலைத்தது ரஷ்ய படையெடுப்பு. தெற்கு டெல்லியில் மிகவும் எளிமையான முறையில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து வைத்திருந்தனர் இந்த ஜோடி.
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா படையெடுத்து வந்த போது அங்கிருக்கும் பதுங்குக் குழிகளில் தங்கியிருந்த ஆனா அனுபவிற்கு போனில் அழைப்பு விடுத்தார். அனுபவ், ஆனாவை பதுங்கு குழியிலேயே தங்கியிருக்குமாறு கூறிய போதும் அதனைக் கேட்காமல் இந்தியா வர முடிவு செய்திருக்கிறார் அப்பெண்.
இது குறித்து பேசிய போது, நாங்கள் இந்த படையெடுப்பு துவங்கியதில் இருந்து மூன்று முறை சண்டையிட்டுள்ளோம். முதலில் போர் சூழல் குறித்து அறிந்து கொண்ட அனுபவ் கீவை விட்டு வெளியேறுமாறு என்னிடம் கூறினார். ஆனால் நான் படையெடுப்பு நடக்காது என்று மறுத்துவிட்டேன். இரண்டாவது முறை, படையெடுப்பு ஆரம்பமானவுடன் கீவை விட்டு வெளியேறுமாறு அவர் என்னைக் கெஞ்சினார். அப்போது நான் என்னுடைய நகரை விட்டு செல்லவில்லை. நான் பங்கரில் தங்கியிருக்கும் போது என்னை அங்கிருந்து வெளியே வரவேண்டாம் என்று கூறினார். ஆனாலும் நான் சண்டையிட்டு, நீ காத்துக் கொண்டிரு நான் உனக்காக இந்தியா வருவேன் என்று ஆனா கூறியுள்ளார். கூறியதோடு நிறுத்திக் கொள்ளாமல் மார்ச் 17ம் தேதி அன்று டில்லிக்கு வந்தும் சேர்ந்தார் அப்பெண்.
மேல மேள, தாளங்கள் முழங்க ஆனாவை வரவேற்ற அனுபவ் அங்கேயே தன்னை திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்க இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையம் ஒரு அழகான காதல் காவியத்தின் ஒரு சிறிய பகுதியாக மாறியது.
“பயணத்தால் மிகவும் களைப்படைந்து போயிருந்தேன். இவர் இவை அனைத்தையும் செய்வார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினேன். அவருடன் இருப்பதற்காக நாடு தாண்டி வந்திருக்கிறேன். அவருடைய அம்மாவையும் நான் சந்தித்தேன் அவர் என்னை உற்சாகமாக வரவேற்றது மகிழ்ச்சி அளித்தது” என்றும் கூறினார் ஆனா.
கீவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் ஆனாவை அனுபவ் 2019ம் ஆண்டு சந்தித்துள்ளார். இந்தியாவில் விடுமுறை காலத்தை கழிக்க வந்த ஆனாவுடன் நண்பராக பேசி பழகிய காலம் அது என்று கூறுகிறார் அனுபவ். உக்ரைன் சென்ற ஆனா, கொரோனா தொற்றின் முதல் அலை ஆரம்பமாவதற்கு முன்பு மீண்டும் ராஜஸ்தானை சாலை மார்க்கமாக சுற்றிப்பார்க்க இந்தியா வந்தார். ஊரடங்கு சமயத்தில் பத்திரமாக அவர் சொந்த நாடு செல்ல தேவையான உதவிகள் அனைத்தையும் அனுபவ் செய்து கொடுத்தார். இருவருக்கும் இடையே நல்ல புரிதல் உருவானது. பிறகு 2021ம் ஆண்டு அவர்கள் துபாயில் சந்திக்க, அனுபவின் அம்மா, ஆனாவிடம் தன்னுடைய மகனை மணந்து கொள்வாயா என்று கேட்டிருக்கிறார். ஆனாவிற்கு அனுபவை பிடித்துப் போக “ஓகே” சொல்லியிருக்கிறார் அவர்.
”நாங்கள் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தோம். தேவையான அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து கொண்டிருந்த போது தான் போர் துவங்கியது என்று விவரிக்கிறார்" அனுபவ். உடுத்தி மாற்றிக் கொள்ள தேவையான ஆடைகளோடு கையில் ஒரு காஃபி மெஷினையும் எடுத்து வந்திருக்கிறார் ஆனா. தன்னுடைய பாட்டி கொடுத்த திருமண பரிசு என்கிறார் அவர். “இந்த போர் சூழலில் இதனை எடுத்துக் கொண்டு வரவேண்டுமா என்று நான் கேட்டேன். ஆனால் இது நம்முடைய திருமண பரிசு. என்னால் விட்டுவிட்டு வர இயலவில்லை” என்று ஆனா கூறியதாக அனுபவ் தெரிவிக்கிறார்.
தன்னுடைய தாயாருடன் லிவிவ் வந்த அவர் போலாந்து எல்லைக்கு சென்றார், பிறகு அங்கு இரண்டு வார காத்திருப்பிற்கு பிறகு இரண்டு ஆண்டுகளுக்கான இந்திய விசா வழங்கப்பட்டது. நார்வேக்கு சென்றுள்ள அவருடைய தாயார் அங்கிருந்து அவருடைய கணவர் வசிக்கும் மெக்ஸிகோவிற்கு பயணமாக உள்ளார். இந்த இக்கட்டான சூழலில் விசாவிற்காக எவ்வாறு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களின் உதவியை நாடினார் என்றும் போலாந்தில் உள்ள இந்திய தூதரக உதவியுடன் ஆனா எப்படி விசா பெற்றார் என்றும் அனுபவ் விளக்கினார்.
ஏப்ரல் 27ம் தேதி அன்று திருமணம் செய்ய முடிவு செய்துள்ளது இந்த ஜோடி. உக்ரைன் நாட்டில் தன்னுடைய பாட்டியிடம் விட்டுவிட்டு வந்த தன்னுடைய பாவோ என்ற நாயை அழைத்துவர திட்டமிட்டிருக்கிறார் ஆனா. போர் விரைவில் முடியவும் உக்ரைன் சென்று திரும்பிய பின்னர் தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் உக்ரைனில் செலவிட திட்டமிட்டுள்ளார் ஆனா
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.