ஆந்திர சட்டசபை முன்னாள் சபாநாயகரும், ஆறுமுறை தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி.யுமான கொடேலா சிவபிரசாத் ராவ், தனது ஐதராபாத் வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், ஆந்திராவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர சட்டசபை, அமராவதி மாவட்டத்தில் உள்ள வேலகபுடி பகுதியில் தயாராகி வந்தது. ஐதராபாத்தில் சட்டசபை இயங்கிவந்தபோது அங்கு பயன்படுத்தப்பட்டு வந்த பர்னிச்சர்கள் உள்ளிட்ட பொருட்கள் அமராவதிக்கு மாற்றப்பட இருந்தநிலையில், ரூ.1 கோடி மதிப்பிலான பர்னிச்சர் உள்ளிட்ட பொருட்களை, கொடேலா சிவபிரசாத் ராவ், தனது வீ்டு மற்றும் அலுவலகங்களுக்கு கொண்டு சென்றதாக ஆளும் ஜெகன் மோகன் ரெட்டி அரசால் வழக்குபதிவு செய்யப்பட்டது.
அதேபோல், சிவபிரசாத் ராவின் மகன் ஷிவராமும், அரசு பயிற்சி மையங்களில் உள்ள லேப்டாப்களை தனது சொந்த நிறுவனங்களுக்கு கொண்டு சென்று பயன்படுத்தியதாக அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இதுமட்டுமல்லாது வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையிலும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
திடீர் தற்கொலை : இந்நிலையில், கொடேலா சிவபிரசாத் ராவ், தனது ஐதராபாத் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சந்திரபாபு நாயுடு இரங்கல் : ராவின் மரணத்திற்கு முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, கொடேலா சிவபிரசாத் ராவின் தற்கொலை நிகழ்வை என்னால் நினைத்துக்கூட பார்க்க இயலவில்லை. மருத்துவத்துறையில் சாதித்த சிவபிரசாத் ராவ், தெலுங்கு தேசம் கட்சியிலும் முன்னணி தலைவராக விளங்கினார். அவரின் இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தித்துக்கொள்வதாக சந்திரபாபு நாயுடு அதில் குறிப்பிட்டுள்ளார்.
కోడెల శివప్రసాద్ గారి మరణవార్తను జీర్ణించుకోలేకపోతున్నాను. వైద్యవృత్తి నుంచి తెదేపాలో చేరి అత్యంత ప్రజాదరణ కలిగిన నాయకుడిగా ఎదిగారు. ఆయన మృతి పార్టీకి, ప్రజలకు తీరని లోటు. ఆయన ఆత్మకు శాంతి చేకూరాలని భగవంతుని ప్రార్థిస్తూ వారి కుటుంబసభ్యులకు నా ప్రగాఢ సానుభూతిని తెలియజేస్తున్నాను.
— N Chandrababu Naidu (@ncbn) September 16, 2019
முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இரங்கல் : கொடேலா சிவபிரசாத் ராவின் மரணத்திற்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர், தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, சிவ பிரசாத் ராவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.