இன்றைய காலகட்டத்தில் எந்த ஒரு நிகழ்வையும் ஆடம்பரமாக நடத்தவே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். நடுத்தர குடும்ப மக்களையே இந்த ஆடம்பர கலாச்சாரம் விட்டு வைக்காத நிலையில், வி.ஐ.பி-க்கள் மற்றும் அதிகாரிகளைப் பற்றி சொல்லவே வேண்டாம்.
இதற்கிடையே தன்னுடைய மகன் திருமணத்தை வெறும் 18000 ரூபாயில் நடத்தி முடித்திருக்கிறார் ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரி.
ஆம்! ஆந்திர மாநிலம், விசாகப்பட்டிணத்தில் ’மெட்ரோ பாலிடன் ரீஜினல் டெவலப்மெண்ட்’ அதிகாரியாக இருப்பவர், பட்னால பசந்த் குமார் ஐ.ஏ.எஸ். இன்று இவருடைய மகனுக்கு திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. இதற்கு மணமகன், மணமகளுக்கான செலவு, சாப்பாட்டு செலவு என மொத்தம் 18,000 ரூபாயை தான் செலவு செய்திருக்கிறார் பசந்த்.
லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து தண்ணீராய் பணத்தை கரைக்கும் வி.ஐ.பி-க்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பசந்தின் இந்த செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஆந்திர மாநில கவர்னர் நரசிம்மன் தனது வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார்.
தவிர கடந்த 2017-ல் நடந்த மகள் திருமணத்தை வெறும் 16,000 ரூபாயில் பசந்த் நடத்தி முடித்தது குறிப்பிடத்தக்கது.