ஆந்திர பிரதேச முதல்வராக ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டி செயல்பட்டு வருகின்றார். கடந்த 10 மாதங்களில் (ஏப்ரல் 2020 முதல் ஜனவரி 18, 2021 வரை) ஆந்திர அரசு சார்பாக மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளுக்கான சிமெண்ட், 'பாரதி சிமெண்ட் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தில் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் மட்டும் சுமார் 2,28,370.14 மெட்ரிக் டன் அளவுள்ள சிமெண்ட் மொத்தமாக கொள் முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் முதலமைச்சர் ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டியின் மனைவி ஒய்.எஸ் பாரதி 49% பங்குகளை கொண்டுள்ளார். மற்றும் இந்த நிறுவனத்தில் மீதமுள்ள 51 சதவீத பங்குகளை விகாட் எனும் பிரெஞ்சு நிறுவனம் வைத்துள்ளது.
இரண்டாவது அதிகமாக சிமெண்ட் கொள்முதல் செய்யப்பட்ட நிறுவனத்தில் இந்தியா சிமெண்ட்ஸ் உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து சுமார் 1,59,753.70 மெட்ரிக் டன் அளவுள்ள சிமெண்ட் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது ஆந்திர அரசு, பாரதி சிமெண்ட் நிறுவனத்தில் மேற்கொண்ட கொள்முதல் அளவை விட 30% குறைவாகவே காணப்படுகின்றது. பாரதி சிமெண்ட் நிறுவனத்தில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் ரூபாய் 95.32 கோடி மதிப்புள்ள பங்குகளை வைத்திருந்தது. ஆனால் அதை 2010-ம் ஆண்டு விகாட் நிறுவனத்திடம் விற்றுள்ளது.
பங்குகள் வாங்கியது விற்றது தொடர்பாக இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் என் சீனிவாசன், ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் சிலர் மீது மத்திய புலனாய்வு பிரிவினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். அதோடு ஏப்ரல் 2012-ம் ஆண்டு முதல் செப்டம்பர் 2014-ம் ஆண்டு வரை, டால்மியா சிமெண்ட்ஸ், இந்தியா சிமெண்ட்ஸ், ரகுராம் சிமெண்ட்ஸ் (பாரதி சிமெண்டின் முந்தைய பெயர்), மற்றும் பென்னா சிமெண்ட்ஸ் போன்ற நிறுவனங்களில் பங்குகள் வாங்கியது விற்றது பற்றியும் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.
முன்னாள் ஆந்திர பிரதேச முதல்வர் ஒய் எஸ் ராஜசேகர ரெட்டி தான் இந்த சிமெண்ட் நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் இடம் ஒதுக்கீடு செய்துள்ளார். அதோடு இந்த நிறுவனங்களுக்கு தேவையான தண்ணீர் வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார். மற்றும் இந்த நிறுவனங்களுக்கு ஏற்றவாறு குத்தகை தொகையையும், சட்டங்களையும் மாற்றி அமைத்துள்ளளார். அதற்கு பலனாக இந்த நிறுவனங்கள் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பங்குகளை ஒதுக்கியுள்ளன என்பது சிபிஐ விசாரணைக்கு பின் தான் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக ஆந்திர மாநில தொழில்துறை அமைச்சர் எம்.கெளதம் ரெட்டியிடம் கேட்ட போது, "அரசின் தேவைக்கு ஏற்ப சில சிமெண்ட் நிறுவனங்களால் உற்பத்தி செய்ய முடிவதில்லை. அதோடு அவர்கள் விநியோகம் செய்வதிலும் சிக்கல்கள் அதிகமாக காணப்படுகின்றன" என்று கூறுகிறார்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளும் கட்டுமான பணிகளுக்கான பொருட்களை கொள்முதல் செய்ய ஒய் எஸ் ஆர் நிர்மான் எனும் இணையத்தில் தான் பதிவு செய்ய வேண்டும். இந்த இணைய பக்கம் பங்குதாரர்கள், சிமெண்ட் உற்பத்தியாளர்கள், மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் என அனைவரையும் இணைக்கும் வகையில் உள்ளது. ஜெகன் மோகன் ரெட்டியின் அரசு தான், அரசு துறைகள் வாங்கும் சிமென்டின் விலையை நிர்ணயம் செய்யும். 50 கிலோ எடை கொண்ட சிமெண்ட் மூட்டையை ரூ.225 என அரசு துறைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
அரசு துறைகள் கட்டுமான பொருள்கள் வாங்குவதற்கான கொள்முதல் விபரங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்புகின்றன. மாவட்ட ஆட்சியர்கள் ஒய் எஸ் ஆர் நிர்மான் பக்கத்தின் மூலம் ஆந்திர பிரத்தேச சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு (ஏபிசிஎம்ஏ) ஆர்டர்களை அனுப்புகின்றன. பின்னர் ஆந்திர பிரதேச சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் (ஏபிசிஎம்ஏ), அதன் 23 விநியோகஸ்தர்களுக்கு ஆர்டர்களை பிரித்து அனுப்புகின்றது.
"அரசு மேற்கொள்கின்ற கொள் முதலுக்கும் ஒய்.எஸ் ஜெகன் மோகன் ரெட்டியின் மனைவி ஒய்.எஸ் பாரதிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அதோடு கடந்த ஆட்சியில் ஒரு சிமெண்ட் மூட்டையின் விலை ரூ.200 என்று கொடுத்து வாங்கினோம்" என பாரதி சிமெண்ட் நிறுவனத்தின் இயக்குனர் எம் ரவீந்தர் ரெட்டி கூறியுள்ளார். இவர் ஏபிசிஎம்ஏ-யின் துணைத் தலைவராக செயல்பட்டபோது, தனக்கு விருப்பமான நிறுவனங்களுக்கும் மட்டும் ஆர்டர்களை பிரித்து அனுப்பியது தொடர்பாக, இவர் மீது நிறைய குற்றச்சாட்டுகள் உள்ளன.
"பாரதி சிமென்ட்ஸ் அல்லது இந்தியா சிமென்ட்ஸ் இது போன்ற பெரிய ஆர்டர்களைப் பெறுவதற்கு காரணம், அந்த நிறுவனங்களின் சந்தை மதிப்பு அதிகமாக உள்ளது. மற்ற சிறிய நிறுவனங்களால் அரசின் கொள்முதல் தேவையைப் பூர்த்தி செய்ய முடிவதில்லை. மற்றும் அரசு நிர்ணயிக்கும் விலை மிகக் குறைவு என்பதால் சிறிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவத்திலை" என்று பெயர் சொல்ல விரும்பாத ஏபிசிஎம்ஏ -யின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குறைந்த கொள்முதல் ஆர்டர்களைப் பெற்ற ஒரு சில சிமெண்ட் நிறுவனங்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன.
"பாரதி சிமெண்ட் நிறுவனம் மற்ற சிமெண்ட் நிறுவங்களைச் சேர்த்துக் கொண்டு ஒரு கூட்டமைப்பு போல் செயல்படுகின்றன. அதோடு ரூபாய் 220 முதல் 250 வரை விற்கப்பட்ட 50 கிலோ சிமெண்ட் மூட்டை கடந்த சில மாதங்களாக ரூபாய் 350 முதல் 400 வரை விற்கப்படுகின்றன. இந்த நிறுவங்கள் அரசுக்கு குறைந்த விலையிலும், சந்தையில் அதிக விலைக்கும் விற்கின்றனர். அதை எப்படி சாதாரண மக்களால் வாங்க இயலும்"என்று தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
"பாரதி சிமெண்ட் நிறுவனம் இப்படி விலையேற்றம் செய்வதால், அந்த நிறுவனத்தில் 49% பங்குகளை கொண்டுள்ள முதலமைச்சரின் குடும்பத்தினரே பயனடைகிறார்கள்" என்று தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் கொம்மரெட்டி பட்டாபி கூறுகின்றார்.
“சிமெண்டின் விலை பல காரணிகளால் உயர்கின்றன. எங்களிடம் 5 மில்லியன் டன் கொள்ளளவு கொண்ட சிமெண்ட் ஆலை உள்ளது. எனவே நாங்கள் அரசு தரும் ஆடர்களை பெறுகின்றோம். குறைவான விலையில் அரசுக்கு கொடுப்பது ஒரு வகையில் நஷ்டம் தான்.ஆனால்
வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுப்பது போன்ற சமூக பொறுப்பை இதன் மூலம் நாங்கள் செய்கின்றோம்" என்று பாரதி சிமெண்ட் நிறுவனத்தின் இயக்குனர் ரவீந்தர் ரெட்டி கூறுகின்றார். அதோடு தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தும் பேசியுள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சி கூறும் குற்றச்சாட்டு பற்றி தொழில்துறை அமைச்சர் எம்.கெளதம் ரெட்டி கேட்டபோது,"சிமெண்ட் விலை உயர்விற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதோடு விலையை கட்டுக்குள் கொண்டுவர எங்களால் ஆணையிட முடியாது" என்று கூறியுள்ளார்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.