/indian-express-tamil/media/media_files/2025/09/16/prawn-export-2025-09-16-08-15-33.jpg)
நாட்டின் இறால் ஏற்றுமதியில் 80 சதவீதமும், கடல்சார் ஏற்றுமதியில் 34 சதவீதமும் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து வருகிறது, இதன் ஏற்றுமதி ஆண்டுக்கு சுமார் ரூ.21,246 கோடி மதிப்புடையது. Photograph: (File Photo)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த வரிகளால், ஆந்திரப் பிரதேசத்தின் இறால் ஏற்றுமதியில் சுமார் ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், சுமார் 50% ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 2,000 ஏற்றுமதி கண்டெய்னர்களில் தற்போது ரூ.600 கோடிக்கு அதிகமான வரிச் சுமை விழுந்துள்ளதால், மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இந்த ஏற்றுமதி நெருக்கடியிலிருந்து மாநிலத்தைக் காக்க மத்திய அரசின் தலையீட்டைக் கோரியுள்ளார்.
டிரம்ப், ஏற்கனவே அறிவித்திருந்த 25% வரியுடன் கூடுதலாக 25% வரியை விதித்தார். மேலும், 5.76% சரிகட்டு வரி மற்றும் 3.96% எதிர்ப்பு வரி ஆகியவையும் விதிக்கப்பட்டதால், அமெரிக்க வரிகள் 59.72% ஆக அதிகரித்தன.
சந்திரபாபு நாயுடு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் ஆகியோருக்கு தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதங்களில், ஜி.எஸ்.டி (சரக்கு மற்றும் சேவை வரி)-யில் சலுகை அளிக்குமாறும், ஆந்திராவின் அக்வா விவசாயிகளுக்கு (நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மீன் மற்றும் இறால் வளர்ப்போர்) இழப்பீட்டை ஈடுகட்ட மத்திய அரசின் நிதித் திட்டங்களை வழங்குமாறும் அவர் வலியுறுத்தினார். மேலும், அமெரிக்காவிற்கு வெளியே உள்ள சந்தைகளை கண்டறியவும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஆந்திரப் பிரதேசம் நாட்டின் இறால் ஏற்றுமதியில் 80% மற்றும் கடல்சார் உணவு ஏற்றுமதியில் 34% பங்களிக்கிறது. இதன் வருடாந்திர மதிப்பு சுமார் ரூ.21,246 கோடி ஆகும். மாநிலத்தில் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் இறால் ஏற்றுமதி மற்றும் அதைச் சார்ந்த தொழில்களை நம்பியுள்ளனர்.
இந்த வரிகளால் அக்வா விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருவதைச் சுட்டிக்காட்டிய சந்திரபாபு நாயுடு, தனது அரசாங்கம் ஏற்கனவே பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை அறிவித்துள்ளதாகக் கூறினார். ஒரு கிலோ இறால் தீவனத்தின் விலையை ரூ. 9 குறைத்ததுடன், மின்மாற்றிகளின் விலைக்கு மானியம் வழங்குவது போன்ற பிற நடவடிக்கைகளையும் பரிசீலித்து வருவதாகக் கூறினார்.
மேலும், அவர் மத்திய அரசிடம், ஏற்றுமதியாளர்கள் மற்றும் அக்வா நிறுவனங்களுக்கு வங்கிகள் ஆதரவு அளிக்க உதவ வேண்டும் என்றும், கடன் மற்றும் வட்டித் திருப்பிச் செலுத்துவதற்கு 240 நாட்கள் கால அவகாசம், வட்டி மானியங்கள், உறைந்த இறாலுக்கான 5% ஜி.எஸ்.டி-யை தற்காலிகமாக நீக்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். ஏற்றுமதியை அதிகரிக்க, ஐரோப்பிய ஒன்றியம், தென் கொரியா, சவூதி அரேபியா மற்றும் ரஷ்யாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்தி, அமெரிக்காவிற்கு அப்பால் ஏற்றுமதிச் சந்தைகளைப் பல்வகைப்படுத்துவதிலும் கவனம் செலுத்துமாறு மத்திய அரசை அவர் கேட்டுக்கொண்டார்.
இடைக்கால நிதி உதவி, வரிச் சலுகை திட்டங்கள் பற்றிய தெளிவு ஆகியவற்றையும் முதலமைச்சர் கோரினார். ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடல் உணவை வழங்க ஏற்றுமதியாளர்கள் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.