ஆந்திராவில் அக்டோபர் 29, 2023 அன்று நடந்த ரயில் விபத்தில் 14 பயணிகள் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். இந்த விபத்துக்கு ஓட்டுநர்களே காரணம் என தற்போது விசாரணையில் தெரிய வந்ததுள்ளது. ராயகடா பயணிகள் ரயிலின் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் இருவரும் விபத்தின் போது தங்கள் மொபைல் போனில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்ததே காரணம் என ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நேற்று (சனிக்கிழமை) தெரிவித்தார்.
அக்டோபர் 29, 2023 அன்று இரவு 7 மணியளவில் ஹவுரா-சென்னை வழித்தடத்தில் ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கண்டகபள்ளி என்ற இடத்தில் இந்த கோர விபத்து நடந்தது. ராயகடா பயணிகள் ரயில், விசாகப்பட்டினம் பலாசா ரயிலின் பின்னால் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
இந்திய ரயில்வே செய்து வரும் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பேசும் போது ஆந்திர ரயில் விபத்து குறித்து வைஷ்ணவ் குறிப்பிட்டார்.
வைஷ்ணவ் பி.டி.ஐ ஊடகத்திடம் கூறுகையில், "சமீபத்தில் ஆந்திராவில் நடந்த ரயில் விபத்தின் போது ஒரு ரயிலின் லோகோ பைலட் மற்றும் கோ-பைலட் இருவரும் கிரிக்கெட் போட்டி பார்த்துக் கொண்டிருந்தனர். இதனால் கவனச் சிதறல் ஏற்பட்டு விபத்து நடந்ததுள்ளது. இப்போது நாங்கள் அத்தகைய கவனச் சிதறலைக் கண்டறியும் வகையில் கருவிகளை நிறுவி வருகிறோம். மேலும் ஓட்டுநர்கள் மற்றும் உதவி ஓட்டுநர்கள் ரயிலை இயக்குவதில் முழுமையாக கவனம் செலுத்துவதை உறுதி செய்கிறோம்" என்று கூறினார்.
மேலும், “நாங்கள் பாதுகாப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். ஒவ்வொரு சம்பவத்திலும் மூல காரணத்தை கண்டறிய முயற்சி செய்து, அது மீண்டும் நடக்காமல் இருக்க ஒரு தீர்வைக் கொண்டு வருகிறோம்" என்றார்.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/india/andhra-train-collision-vaishnaw-says-driver-assistant-were-watching-cricket-on-phone-9192779/
தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர்களால் (CRS) நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை இன்னும் வெளியிடப்பட்ட வில்லை. இந்த நிலையில் விபத்து நடந்த ஒரு நாளுக்குப் பிறகு, முதற்கட்ட ரயில்வே விசாரணையில், ராயகட பயணிகள் ஓட்டுநர் மற்றும் உதவி ஓட்டுனர் ரயில் விபத்திற்கு காரணம் எனக் கண்டறியப்பட்டது. மேலும் இவர்கள் விதிமுறைகளை மீறி 2 ஆட்டோ சிக்னல்களை கடந்து சென்றதும் கண்டறியப்பட்டது. இந்த விபத்தில் இரு பணியாளர்களும் உயிரிழந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“