அன்னா ஹசாரே இன்று முதல் டெல்லியில் போராட்டம் நடத்துகிறார். லோக்பால், விவசாயிகள் பிரச்சினை ஆகியவற்றை முன்னிறுத்தியே இந்தப் போராட்டம்!
அன்னா ஹசாரே, கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இறுதி கட்டத்தில் டெல்லியில் நடத்திய போராட்டம் மிக பிரபலமானது. மன்மோகன் அரசின் இமேஜ் வீழ்ச்சிக்கு அன்னா ஹசாரேவின் போராட்டத்திற்கு பெரும் பங்கு உண்டு, கட்சி சார்பற்ற முறையில் இவர் நடத்திய போராட்டத்தில் இளைஞர்கள் பெரும் அளவில் திரண்டனர்.
அன்னா ஹசாரே, பாஜக.வுக்கு ஆதரவாக அந்தப் புரட்சியை நடத்தியதாக அப்போதே விமர்சனங்கள் கிளம்பின. இதோ, பாஜக ஆட்சி நிறைவை நோக்கி நகரும் வேளையில் மீண்டும் போராட்டக் களம் வந்திருக்கிறார் அன்னா ஹசாரே. லோக்பால், லோக் ஆயுக்தா, விவசாயிகள் பிரச்சினை ஆகியவற்றை முன்வைத்து டெல்லியில் இந்தப் போராட்டம்!
அன்னா ஹசாரே இது குறித்து கூறுகையில், ‘ஜன் லோக்பால் அமைக்காதது குறித்து அமைதி போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு பலமுறை கடிதம் எழுதியும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல், விச்வாயிகள் பிரச்சினையிலும் மத்திய அரசு மெத்தன போக்குடன் நடந்து வருகிறது. எனவே, தியாகிகள் தினமான மார்ச் 23 ஆம் தேதி (இன்று) போராட்டத்தை தொடங்க உள்ளேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
அன்னா ஹசாரே போராட்டம் நடத்த இருப்பதால் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. முந்தைய போராட்டத்தைப் போல அவருக்கு ஆதரவாக இளைஞர்கள் திரள்வார்களா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.