கடந்த 2002-ம் ஆண்டு நிகழ்ந்த குஜராத் கலவரத்தோடு, அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடியை தொடர்புபடுத்தி பிபிசி செய்தி நிறுவனம் ஆவணப்படம் தயாரித்தது. ‘இந்தியா: மோடிக்கான கேள்விகள்’ எனும் தலைப்பிலான இந்த ஆவணப்படம் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த ஆவணப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு இணைய பக்கங்களில் வைரலாகியது.
இதனையடுத்து, பிபிசி ஆவணப்படத்தைப் பகிர்ந்துள்ள சமூக ஊடக இணைப்புகளை (லிங்க்-குகளை) நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் தொடர்பாக, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியதற்காக உச்ச நீதிமன்றத்தை விமர்சித்து, ஆர்எஸ்எஸ்-ஐச் சேர்ந்த பத்திரிகையான பாஞ்சஜன்யா, “இந்தியாவை எதிர்க்கும் சக்திகள் உச்ச நீதிமன்றத்தை ஒரு கருவியாக பயன்படுத்துகிறன” என்று கூறியுள்ளது.
பாஞ்சஜன்யா ஆசிரியர் ஹிதேஷ் ஷங்கரின் தலையங்கம் வருமான வரித்துறையினர் பிபிசியின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் சோதனை நடத்துவதற்கு ஒரு நாள் முன்னதாக வெளியிடப்பட்டது. இந்தியில் வெளியிடப்பட்டுள்ள அந்த தலையங்கத்தில் தேசத்தின் நலனைக் காக்கவே உச்சநீதிமன்றம் உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. பிபிசி ஆவணப்படம் ‘உண்மை மற்றும் கற்பனை’ அடிப்படையிலானது என்றும், ‘இந்தியாவை களங்கப்படுத்தும்’ முயற்சி என்றும் அது குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், பிப்ரவரி 3-ம் தேதி உச்ச நீதிமன்றம் வெளியிட்ட நோட்டீஸைக் குறிப்பிட்டுள்ள தலையங்கம், “இந்தியர்கள் செலுத்தும் வரிகளால் நடத்தப்படும் உச்ச நீதிமன்றம் இந்தியாவுக்குச் சொந்தமானது; இந்தியாவிற்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் சட்டங்களின்படி செயல்படுவதே அதன் வேலை. நாட்டின் நலன் கருதி உச்சநீதிமன்றம் என்ற பெயரில் ஒரு வசதியை உருவாக்கி, அதை பராமரித்து வருகிறோம். ஆனால், இந்தியாவை எதிர்ப்பவர்களின் வழியைத் தெளிவுபடுத்தும் முயற்சியில் இது ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது” கூறியுள்ளது.
மனித உரிமைகள் என்ற பெயரில் பயங்கரவாதிகளைப் பாதுகாப்பதாகக் கூறப்படும் உதாரணங்களை மேற்கோள் காட்டி, அந்த தலையங்கம், “தேச விரோத சக்திகள் இந்தியாவின் ஜனநாயகம், தாராளமயம் மற்றும் நாகரீக அளவுகோல்களை தங்கள் சேவைக்காக பயன்படுத்துவதை நீங்கள் காண்பீர்கள். நிகழ்ச்சி நிரல்… (அவர்களின்) அடுத்த கட்டம், தேசவிரோத சக்திகளுக்கு நாட்டில் தவறான தகவல்களைப் பரப்புவதற்கு உரிமை இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவது; மதமாற்றத்தின் மூலம் நாட்டை பலவீனப்படுத்தும் உரிமை இருக்க வேண்டும். அது மட்டுமல்ல. இந்த உரிமைகளைப் பயன்படுத்த, அவர்கள் இந்திய சட்டங்களின் பாதுகாப்பைப் பெற வேண்டும்.” என்றும் கூறியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil