அச்சுறுத்தி வரும் தொற்றுநோய்க்கு மத்தியில், கோவிட் தடுப்பூசி இயக்கங்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் கருத்துகளுடன் சுவரொட்டிகளை ஒட்டியதாக, டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 25 பேரில் பள்ளி படிப்பை பாதியில் கைவிட்ட 19 வயதான இளைஞர் ஒருவர், 30 வயதான இ-ரிக்ஷா டிரைவர், 61 வயதான மரச்சட்டங்களை தயாரிப்பவர், இவர்களும் அடங்குவர்.
டெல்லி போலீஸ் கமிஷனர் எஸ்.என். ஸ்ரீவாஸ்தவாவுக்கு சுவரொட்டிகளைப் பற்றி ஸ்பெசல் பிராஞ்ச் கொடுத்த தகவலின் படி மே 12 ஆம் தேதி முதல் தலைநகர் முழுவதும் இருந்து கைது நடவடிக்கை ஆரம்பமானது. அந்த சுவரொட்டிகளில், எங்கள் குழந்தைகளின் தடுப்பூசிகளை ஏன் வெளிநாடுகளுக்கு அனுப்பினீர்கள்? என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்தது.
சண்டே எக்ஸ்பிரஸ் கைது செய்யப்பட்டகளில் இருவர்களின் வீடுகளையும் பார்வையிட்டதுடன், தலைநகர் முழுவதும் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்ட காவல் நிலையங்களையும் கண்காணித்தது. கைது செய்யப்பட்டவர்களில் பலர் தினசரி கூலித் தொழிலாளர்கள் அல்லது வேலையற்ற இளைஞர்கள். அவர்கள், தங்கள் பிழைப்பிற்காக சுவரொட்டிகளையும் பதாகைகளையும் வைத்தனர். ஆனால் அவர்களுக்கு சுவரொட்டிகளின் உள்ளடக்கம் அல்லது அரசியல் பற்றி தெரியாது.
கிழக்கு டெல்லியில் உள்ள மண்டவாலி மாவட்டத்தில், கைது செய்யப்பட்ட நான்கு பேரில் ஒருவரான ராகுல் தியாகி (24), மே 11 அன்று ஆம் ஆத்மி கவுன்சிலர் திரேந்தர் குமார் அலுவலக ஊழியர்களால் 20 பேனர்கள் வழங்கப்பட்டதாகவும், அவற்றை கல்யாண்பூரியில் வைப்பதற்கு ரூ .600 தருவதாக வாக்குறுதியளித்ததாகவும் கூறினார்.
இது குறித்து, திரேந்திர குமாரிடம் கேட்டபோது குற்றச்சாட்டுகளை மறுத்தார். மேலும் அவர் "மக்களுக்காக உழைப்பதில்" மட்டுமே ஈடுபடுதாகக் கூறினார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆம் ஆத்மி கட்சி பதிலளிக்கவில்லை, ஆனால் சனிக்கிழமை இரவு சுவரொட்டிகளில் உள்ள அதே வரிகளை ட்வீட் செய்தது - “மோடி ஜி ஹமரே பச்சன் கி தடுப்பூசி விதேஷ் கியோன் பெஜ் தியா”.
"இதுவரை, 25 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் புகார்கள் வருவதால் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்" என்று ஒரு மூத்த அதிகாரி கூறினார்.
தியாகியை அவரது குடும்பத்தினர் வெள்ளிக்கிழமை அன்று பிணை எடுத்தனர். “எனது பெற்றோர் ஏமாற்றமடைந்துள்ளனர், மேலும் என்னை இனி வேலை செய்ய விடமாட்டார்கள். நான் இதை வாழ்வாதாரத்திற்காக மட்டுமே செய்கிறேன், ”என்று தியாகி கூறினார். கல்யாணபுரியில் இருந்து அவருடன் கைது செய்யப்பட்ட மற்ற மூன்று பேரும் காவல்துறை கஸ்டடியில் உள்ளனர்.
அவரைப் பொறுத்தவரை, கைது செய்யப்பட்ட மற்றொரு நபர், ராஜீவ் குமார் (19) இதே வேலையைச் செய்கிறார். மற்ற இருவர்களான, திலீப் திவாரி (35) மற்றும் சிவம் துபே (24), ஆகியயோருக்கு சுவரொட்டிகள் வழங்கப்பட்டதாகவும், ராஜீவ் மற்றும் தியாகிக்கு பதாகைகள் வழங்கப்பட்டன என்றும் தியாகி கூறினார்.
“வாக்குறுதியளிக்கப்பட்ட பணம் எனக்கு கிடைக்கவில்லை. போலீசார் சுவரொட்டிகளை எடுத்தனர், எனது பைக் இன்னும் காவல் நிலையத்தில் உள்ளது. ஊரடங்கின் போது எங்களால் சுவரொட்டிகளையும் பதாகைகளையும் வைக்க முடியாது என்று காவல்துறையினர் தெரிவித்தனர், ”என்று தியாகி கூறினார்.
தியாகியை "பேனர் மற்றும் போஸ்டர் வேலை செய்யும் சிறுவன்" என்று அக்கம்பக்கத்தினர் அங்கீகரிக்கின்றனர். “அவரது தந்தை ஒரு ஆட்டோ ரிக்ஷா டிரைவர், ஊரடங்கு அமல்பட்டதிலிருந்து அவரால் பணம் சம்பாதிக்க முடியவில்லை. அவர்கள் வாடகை செலுத்த வேண்டும், ராகுல் தனது வருமானத்தை தனது குடும்பத்திற்கு கொடுத்து வந்தார்.” என்று அவரது அத்தை நீலம் தியாகி கூறினார்.
டெல்லி முழுவதும் கைது செய்யப்பட்டவர்கள் காவல்துறையினரின் புகார்களின் பேரில் செய்யப்பட்டுள்ளனர். ஐபிசி பிரிவுகள் 188 (அரசு ஊழியரால் அறிவிக்கப்பட்ட உத்தரவை முறையாக கடைபிடிக்காதது), மற்றும் 269 (உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்று பரவ வாய்ப்புள்ள அலட்சிய செயல்), மற்றும் டெல்லி பொதுச்சொத்து உடைப்பு தடுப்பு சட்டம் மற்றும் தொற்றுநோய் சட்டத்தின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஒரு சிறிய தொகைக்கு சுவரொட்டிகளை அச்சிட அல்லது ஒட்டுவதற்காக இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் அவர்களை யார் நியமித்தார்கள் என்பதைக் கண்டறிய இன்னும் விசாரணை நடந்து வருகிறது. கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ராஜீவ் வசிக்கும் மண்டவாலியின் ஆஷா ராம் காலியில், ஒரு கடைக்காரர், அவரது தாயார் உடல்நிலை சரியில்லாததால் குடும்பம் பீகாரில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டதாக கூறினார். மேலும் “எனக்கு தெரிந்து ராஜீவ்க்கு எந்த அரசியல் தொடர்பும் இல்லை. விளம்பரங்கள் முதல் நிகழ்ச்சி சுவரொட்டிகள் மற்றும் அரசியல் முழக்கங்கள் உள்ள பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை அவர் வைக்கிறார், ”என்றார்.
மேற்கு டெல்லியின் கீர்த்தி நகரில் இருந்து கைது செய்யப்பட்ட 5 பேர் தேவேந்தர் குமார் (51), திலக் ராஜ் சாப்ரா (47), அனில் குலாட்டி (61), முராரி (45) மற்றும் ராகேஷ் குமார் (42) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நால்வரையும் வழக்கில் இணைத்து, ஒரு மூத்த அதிகாரி கூறினார்: “தேவேந்தர் ஒரு ஒப்பந்தக்காரர், அவருக்கு வேலைக்கு ரூ .15,000 கிடைத்தது. அவர் தனது அச்சகத்தை இயக்கும் சாப்ராவிடம் சுவரொட்டிகளை வைக்குமாறு கேட்டார். பின்னர் அவர்கள் குலாட்டி, ஒரு மர பிரேம் தயாரிப்பாளரான ராகேஷ், ஒரு ஆட்டோ டிரைவர் மற்றும் முராரி ஆகியோரை அணுகினர், அவர்கள் அந்த சுவரொட்டிகளை வைத்தனர். ”
சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் ராகேஷ் மற்றும் முராரி கைது செய்யப்பட்டனர், அதில் மின்சார கம்பத்தில் ஒரு அடையாள பலகையை அவர்கள் சரிசெய்ததைக் காட்டியது.
டெல்லியின் மங்கோல்பூரி பகுதியைச் சேர்ந்த ராகுல் குமார் (26), ராஜேஷ் சர்மா (38), அனில் குமார் (30) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஒரு விசாரணை அதிகாரி கூறினார்: “ராகுல் ஒரு விற்பனை முகவராக பணிபுரிகிறார், சுவரொட்டிகளை அச்சிடுவதற்கான ஒப்பந்தத்தை அவர் பெற்றார். ராஜேஷ் சர்மா அச்சிடும் கடையின் உரிமையாளர். அவர்கள் அனிலின் இ-ரிக்ஷாவை வேலைக்கு பயன்படுத்தியுள்ளனர். ”
துவாரகாவின் டாப்ரியிலிருந்து, மொஹமது சோஹைல் (26) மற்றும் மொஹமது அக்தர் (24) ஆகியோர் சுவரொட்டிகளை ஒட்டும்போது கைது செய்யப்பட்டனர். ஒரு அச்சகத்தின் உரிமையாளரால் அவர்கள் ரூ .300 க்கு பணியமர்த்தப்பட்டதாக ஒரு அதிகாரி கூறினார்.
இதேபோல், வடக்கு டெல்லியின் திமர்பூரிலிருந்து, தாரேக்ஸ்வர் ஜெய்ஸ்வால் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர். ஊரடங்கால் தனது வேலையை இழந்துவிட்ட ஜெய்ஸ்வால், காந்தகாரில் உள்ள சப்ஸி மண்டியில் உட்கார்ந்திருந்ததாகவும், ஒரு நபர் அவரை அணுகி, சுவரொட்டிகளை வைக்க ரூ .500 தருவதாக கூறியதாகவும் விசாரணை அதிகாரி ஒருவர் கூறினார்.
பஜான்புரா, கஜூரி காஸ் மற்றும் தயால்பூர் காவல் நிலையங்களிலும் மூன்று எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். “எல்லா வழக்குகளிலும், சஞ்சய் குமார் என்ற 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டான். அவருக்கு ரூ .400 கொடுத்த ஒருவர் சுவரொட்டிகளை ஒட்டுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அவர் யார் என்று போலீசார் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர், ”என்று ஒரு அதிகாரி கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.