2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவிற்கு எதிரான எதிர்க்கட்சி கூட்டணியை அர்த்தமுள்ளதாக்க காங்கிரஸ் முன்னோடியாக இருக்க வேண்டும் என்று அக்கட்சியின் தகவல் தொடர்பு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று (சனிக்கிழமை) ஸ்ரீநகரில் தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை காஷ்மீரில் நாளை நிறைவுபெறுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியில் ராகுல் நடைப்பயணத்தை தொடங்கினார். இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் யாத்திரையை முன்னெடுத்தது. பல மாநிலங்கள் வழியாக பல தரப்பு மக்கள், தலைவர்கள் கலந்து கொண்டு யாத்திரை நடைபெற்றது. பல்வேறு கட்சி தலைவர்கள், மதத் தலைவர்கள், மக்கள், பிரபலங்கள் என ஏராளமானோர் ராகுல் யாத்திரைக்கு ஆதரவு தெரிவித்தனர். நாளை ஸ்ரீநகரில் தேசியக் கொடியேற்றி யாத்திரையை நிறைவு செய்து பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் ராகுல் உரையாற்றுகிறார்.
ஜம்மு காஷ்மீரில் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சி தகவல் தொடர்பு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ், "பாரத் ஜோடோ யாத்ரா தேர்தல் ஆதாயத்தை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. யாத்திரைக்குப் பின் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படும்" என்றார்.
நாளை நிறைவு விழாவில் சில அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ளாதது குறித்து கேட்டபோது, "ஜனவரி 30-ம் நிகழ்வு கூட்டணியைக் கட்டியெழுப்புவதற்கான பயிற்சி அல்ல என்பதை நான் தெளிவாகக் கூறுகிறேன். பா.ஜ.கவின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை எதிர்க்கும் ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுக்கு இது ஒரு நல்லெண்ணத்தில் விடுக்கப்பட்ட அழைப்பு" என்று கூறினார்.
"எவ்வாறாயினும், எதிர்க்கட்சி கூட்டணியின் மையமாக காங்கிரஸ் தான் இருக்க முடியும். பாரத் ஜோடோ யாத்திரைக்குப் பிறகு அரசியல் பேச்சுவார்த்தைகள், தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை தொடங்குவோம். பா.ஜ.க-வை தோற்கடிப்பதற்கான எந்தவொரு எதிர்க்கட்சித் தளமும் இரண்டு யதார்த்தங்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் - அதை பொருத்தமானதாகவோ அல்லது அர்த்தமுள்ளதாகவோ மாற்றுவதற்கு காங்கிரஸ் இருக்க வேண்டும். பாஜக எதிர்ப்பு உணர்வைத் தாண்டி ஒரு ஆக்கபூர்வமான நிகழ்ச்சி நிரல் இருக்க வேண்டும்" என்றார்.
கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை யாத்திரை 4,080 கிலோமீட்டர் பயணத்தை நிறைவு செய்யும். யாத்திரை மொத்தம் 75 மாவட்டங்களை கடந்து ஒவ்வொரு நாளும் சராசரியாக 24-24 கிமீ நடந்துள்ளோம். தெற்கு காஷ்மீரில் வெள்ளிக்கிழமை பாதுகாப்பு குறைபாடுகளுக்குப் பிறகு அரசாங்கம் ராகுல் காந்தியின் பாதுகாப்பை பலப்படுத்தியது என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.