ஆந்திர மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்க வலியுறுத்தி சந்திர பாபு நாயுடு இன்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார். இந்தப் போராட்டம் அவரின் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
2014ம் ஆண்டில் ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிந்தது. அப்போது தெலுங்கானா என்ற தனி மாநிலம் ஒன்று உருவானது. தெலுங்கானா மாநில பிரிவினைக்கு பின்னர் ஆந்திர மாநிலத்துக்கு 6 அம்ச திட்டத்தின் அடிப்படையில் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். இந்த அறிவிப்பை 20.6.2014ல் பாராளுமன்ற மாநிலங்களவையில் ஒருங்கிணைந்த ஆந்திர மாநில பிரிவினை மசோதாவில் அறிவித்தார். பின்னர் நாடாளுமன்ற தேர்தலின்போது பாஜகவும் சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக வாக்குறுதி அளித்தது.
இரு கட்சிகளும் வாக்குறுதி அளித்த நிலையில் இன்னும் ஆந்திராவுக்குச் சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கப்படவில்லை. இதனைக்கண்டித்து, சந்திரபாபுநாயுடு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாகச் சமீபத்தில் அறிவித்தார். அதேபோல், சமீபத்தில் முடிவடைந்த பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்விலும் ஆந்திர மாநில எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பாராளுமன்றம் முடங்கியது.
மேலும் மத்திய அரசைக் கண்டித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பிக்கள் 5 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அதேபோல், மத்திய அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இரண்டு மந்திரிகளும் ராஜினாமா செய்தனர். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து உடனே அமைக்கக் கோரி அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக, அவரின் பிறந்தநாளான இன்று மத்திய அரசைக் கண்டித்து ஆந்திராவில் உண்ணாவிரத போராட்டத்தை காலை துவங்கினார். விஜயவடாவில் துவங்கியுள்ள ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியினரும் ஈடுபட்டு உள்ளனர்.