ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று (மே 13) மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கிடையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ சிவக்குமார் வாக்காளர் ஒருவரைத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குண்டூர் மாவட்டம் தெனாலி தொகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. தெனாலி தொகுதியில் அத்தொகுதி எம்.எல்.ஏ சிவக்குமார் இன்று வாக்களிக்க சென்றுள்ளார். அப்போது அவர் வரிசையில் நிற்காமல் நேராக வாக்களிக்க சென்றுள்ளார். இதற்கு வரிசையில் காத்திருந்த வாக்காளர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஆத்திரமடைந்த சிவக்குமார் அந்த வாக்காளரை கன்னத்தில் அறைந்தார். மறுநொடியே பதிலுக்கு அந்த வாக்காளரும் எம்.எல்.ஏ-வை தாக்கினார்.
உடனே அங்கிருந்த எம்.எல்.ஏ சிவக்குமாரின் ஆதரவாளர்கள் அந்த வாக்காளரை சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்திற்கு ஆந்திரப் பிரதேச பா.ஜ.க கண்டனம் தெரிவித்துள்ளது. “குண்டூர் மாவட்டம் தெனாலியில் வாக்காளரை தாக்கியது வைகாபா வேட்பாளரா?, உங்களுக்கு ஜனநாயகத்தின் மீது மரியாதை இருக்கிறதா?” என்று பதிவிட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு ஒரே கட்டமாக திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 25 தொகுதிகளில் மக்களைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 175 தொகுதிகளில் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“