அகிலேஷ் யாதவின் உறவினரும், முலாயம்சிங் யாதவின் மருமகளுமான அபர்ணா யாதவ் பாஜகவில் இணைந்தார். அவர் பாஜக சார்பில் உபி.,யில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ச்சியாக உத்தரப் பிரதேச பாஜகவிலிருந்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்து கொண்டிருந்த சமயத்தில், அபர்ணா யாதவ் இன் வருகை கட்சிக்கு அம்மாநில தேர்தல் களத்தில் புதிய நம்பிக்கை வந்துள்ளது.
முலாயம் சிங் யாதவின் இளைய மகன் பிரதிக்கின் மனைவி அபர்ணா, டெல்லியில் உள்ள தேசிய தலைமையகத்தில் உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் கட்சியின் மாநில தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
2017-ல் லக்னோ கன்டோமெண்ட் தொகுதியில் அபர்ணா யாதவ் போட்டியிட்டு பாஜகவின் ரீட்டா பகுகுணாவிடம் தோல்வி அடைந்தார்.
இதுகுறித்த ஸ்வதந்திர தேவ் சிங் கூறுகையில் " சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங்கின் மருமகள் அபர்ணாவை பாஜக வரவேற்கிறது" என தெரிவித்தார்.
பாஜகவில் இணைந்தது குறித்து பேசிய அபர்ணா, "நாட்டிற்கான தனது கடமைகளை நிறைவேற்றுவதற்காக பாஜகவில் இணைந்துள்ளேன். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை மற்றும் பாஜகவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டேன். பாஜக கட்சியில் என்னால் முடிந்ததைச் செய்வேன்" என தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்காக செயல்படும் அமைப்பை நடத்தி வரும் அபர்ணா, கடந்த காலங்களில் மோடியை வெளிப்படையாக புகழ்ந்த நிகழ்வுகளும் உள்ளன.
முன்னதாக மௌரியா பேசுகையில், "சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவால் தனது குடும்பத்தையோ, மாநிலத்தையோ அல்லது கட்சியையோ கவனித்துக் கொள்ள முடியவில்லை. பாஜக அரசு எந்த ஒரு திட்டத்தையோ, திட்டத்தையோ தொடங்கும் போதெல்லாம், அதைத் தான் தொடங்கியதாகக் கூறுகிறார்.
அவர் பல கோரிக்கைகளை முன்வைத்தாலும், சட்டசபை தேர்தலில் போட்டியிட ஒரு இடத்தைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. பாஜக ஏற்கனவே முதல் பட்டியலில் தன்னையும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் வேட்பாளர்களாக அறிவித்துவிட்டதாக" தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஸ்வதந்திரா, "சமாஜ்வாதி கட்சியின் அராஜகத்தால், மேற்கு உத்தரப் பிரதேசத்தில் எந்த மகளோ, மகனோ, விவசாயிகளோ நிம்மதியாக வாழ முடியவில்லை.
யாராவது காவல் துறையை அணுகியிருந்தால், உடனடியாக அவர்களுக்கு மியாஜானிடமிருந்து அழைப்பு வருகிறது. முன்பு, மாநிலத்தை ஆண்ட அசம் கானால், அப்பகுதியில் பயங்கரமான சூழல் நிலவியது. ஆனால், தற்போது பாஜக ஆட்சியில், மக்கள் நல்லாட்சியை பார்த்துள்ளனர்.பாஜக அரசின் நல்லாட்சியால் அபர்ணா யாதவ் செல்வாக்கு பெற்றுள்ளார்" என்றார்.
இந்த மாத தொடக்கத்தில், பாஜகவின் மூன்று அமைச்சர்கள், பதினொரு எம்எல்ஏக்கள் கட்சியை விட்டு வெளியேறியதும், அவர்களில் பெரும்பாலோர் சமாஜ்வாதியில் சேர்ந்ததும் பாஜகவுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. குறிப்பாக, ஓபிசி மற்றும் தலித்தகளுக்காக நிற்கும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அபர்ணா பாஜகவில் இணைந்தது மூலம் சமாஜ்வாதி கட்சிக்கு தக்க பதிலடி கொடுக்க முடியும் என பாஜக தலைவர்கள் கூறுகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil