சபரிமலை குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நாடு முழுவதிலும் உள்ள கோவில்களின் தனிப்பட்ட வழிப்பாட்டு முறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் சபரிமலை ஐயப்பன் கோவிலை வர்த்தக நோக்கத்தில் பயன்படுத்த திட்டம் தீட்டப்படுவதாகவும் ஆர்எஸ்எஸ் நிர்வாகி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, 'சபரிமலை பண்பாட்டை காக்கும் குடிமகன்களின் கூட்டம்' எனும் நிகழ்வில் பேசிய ஆர் எஸ் எஸ் அறிவுசார் பிரிவின் தலைவர் ஜே நந்தகுமார், "இது போன்றதொரு தீர்ப்பு மற்ற இடங்களுக்கும் பரவினால், பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஐயப்பன் கோவிலை குறி வைத்து திரைக்கு பின்னால் சதி நடப்பதாகவும் அவர் கூறியுள்ளார். "சபரிமலை கோவிலுக்கு செல்வதற்காக விமான நிலையம் அமைக்க திட்டங்கள் தீட்டப்பட்டு உள்ளது. வருடத்திற்கு 365 நாளும் சபரிமலை ஐயப்பன் கோவில் திறந்து இருந்தால் தான், விமான நிலையம் கட்டுவதில் லாபம் இருக்க முடியும். ஆகையால், புனித இடம் என்ற நிலையில் இருந்து சுற்றுலாத்தலமாக சபரிமலையை உருவாக்குவதே சிலரின் நோக்கமாக உள்ளது" என்றார்.
மேலும், தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், பெருவாரியான மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார். சபரிமலை கலாச்சாரத்தை காக்கும் பொருட்டு நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, காவல்துறை பக்தர்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்தியது என்றும், 10,000க்கும் அதிகமான பக்தர்கள் மீது வேண்டுமென்றே வழக்கு பதியப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.