நிற்காமல் சென்ற கார்... ஆப்பிள் நிறுவன அதிகாரி சுட்டுக் கொலை!

நாங்கள் காரை நிறுத்தச் சொல்லி விவேக்கிடம் செய்கை காண்பித்தோம். ஆனால், அவர் ரிவர்ஸ் எடுத்து, எங்கள் பைக் மீது மோதினார்

ஆப்பிள் நிறுவன அதிகாரி சுட்டுக் கொலை : உத்தரப்பிரதேசத்தில் ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிர்வாகி ஒருவர்,  இரண்டு போலீஸ் கான்ஸ்டபிள்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆப்பிள் நிறுவனத்தில் நிர்வாகியாக பணிபுரிந்தவர் விவேக் திவாரி. இவர், ஆப்பிள் நிறுவனத்தின் iPhone X மொபைல் அறிமுக விழாவில் கலந்து கொண்ட பின், லக்னோவில் நேற்று நள்ளிரவு கோமதி நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் தன்னுடன் பணிபுரியும் பெண் அதிகாரி சனா கான் என்பவருடன் எஸ்யுவி காரில் வந்துக் கொண்டிருந்தார்.

அப்போது, மீரட் காவல் நிலையத்தைச் சேர்ந்த பிரஷாந்த் சௌத்ரி, சந்தீப் என்ற 2 போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்த விவேக் திவாரியையும் தடுத்து நிறுத்தியதாகவும், அதற்கு அவர் காரை நிறுத்தாமல் சென்றதாகவும் கூறப்படுகிறது. அதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது.

இதில் படுகாயமடைந்த விவேக் திவாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட இரு போலீசாரும் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் கான்ஸ்டபிள் பிரஷாந்த் சௌத்ரி கூறுகையில், “நாங்கள் காரை நிறுத்தச் சொல்லி விவேக்கிடம் செய்கை காண்பித்தோம். ஆனால், அவர் ரிவர்ஸ் எடுத்து, எங்கள் பைக் மீது மோதினார். தொடர்ந்து மூன்றாவது முறை அவர் மோதியபோது தான், தற்காப்பிற்காக சுட்டேன்” என்றார்.

விவேக் ஓட்டி வந்த கார்

விவேக் ஓட்டி வந்த கார்

ஆனால், கான்ஸ்டபிள் பிரஷாந்த் சௌத்ரிக்கு எதிராக ஆதாரங்கள் இருப்பதாக மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் (SSP) கலாநிதி கைதானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அந்த கான்ஸ்டபிள்க்கு எதிராக எங்களிடம் ஆதாரம் உள்ளது. விவேக் காரை ரிவர்ஸ் எடுத்த போது, கார் மோதி அவர்களது பாதத்தில் காயம் ஏற்பட்டதாக கூறியிருக்கின்றனர். அவர் காரை ரிவர்ஸ் எடுத்த போது சுட்டுள்ளனர். தொடர்ந்து அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது திட்டமிடப்பட்டு நடந்த சம்பவம் அல்ல. இது என்கவுண்ட்டரும் அல்ல” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், “இது என்கவுண்ட்டர் அல்ல. தேவைப்பட்டால், சிபிஐ விசாரணை கோரப்படும்” என்றார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close