சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக அண்மையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த லெக்ஷ்மணா விக்டோரியா கௌரி பதவியேற்றார். ஆனால் இவரது நியமனத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மூத்த வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். சிறுபான்மையினருக்கு எதிராக கருத்து தெரிவித்தாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
விக்டோரியா கௌரி முன்பு பா.ஜ.க மகளிரணியான மகிளா மோர்ச்சாவின் மாநிலச் செயலாளராக இருந்தவர். அப்போது சமூக வலைதளங்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் பிரசாரங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புப் பிரசாரங்களைச் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, இவரை நீதிபதியாக நியமிக்கக் கூடாது என மூத்த வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வழக்கு தொடர்ந்தனர். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
பொருத்தமான நபரா?
இந்நிலையில், மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி ஜவர் சிர்கார் நேற்று (வியாழக்கிழமை) விக்டோரியா கௌரி நியமனம் குறித்து கேள்வி எழுப்பினார். வெறுப்புப் பேச்சு தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட விக்டோரியா கௌரி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமித்தது "பொருத்தமானதா" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், "பொருத்தமான" நபர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படுகிறார்கள் என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் எழுத்துப்பூர்வ பதிலையும் மேற்கோள் காட்டினார். சாதிக் கருத்துகள், சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளால் குற்றஞ்சாட்டப்பட்ட விக்டோரியா கௌரியின் நியமனம் உண்மையில் பொருத்தமானது என்று கேட்டார்.
அரசியலமைப்பின் 3 தூண்கள்
ரிஜிஜு பதில் அளிப்பதற்கு முன் அவைத் தலைவர் பியூஷ் கோயல் இதற்கு பதிலளித்துப் பேசினார். அப்போது, "விக்டோரியா கௌரி நீதிபதியாக பதவியேற்றுள்ளார். இதனால் மரியதையுடனும், கண்ணியத்துடனும் பேச வேண்டும். அவர் வழக்கமான நடைமுறைகளின் படியே நியமிக்கப்பட்டுள்ளார். அவதூறாகப் பேசக் கூடாது" என்று கூறினார்.
குற்றச்சாட்டுகள் பொது வெளியில் இருப்பதால் தான் இந்தக் கேள்வியை முன்வைத்ததாக சர்கார் தெளிவுபடுத்தினார். கொளரியின் நியமனத்துக்கு தமிழகத்தில் சில வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் என்றார். மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கரும், நீதித்துறை தனது கருத்துக்களில் மென்மையாக இருக்குமாறு சர்க்காரைக் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "அரசியலமைப்பின் 3 தூண்களான சட்டமன்றம், அரசு நிர்வாகம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்றும் இணைந்து செயல்பட வேண்டும். மூன்று பேரும் இறுதியில் ஒன்றுசேர்ந்து இலக்குகளை அடைய வேண்டும். இந்தப் பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு ஏற்கனவே வந்துவிட்டது. இந்தப் பிரச்சினை தவிர்க்கப்பட வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று தன்கர் கூறினார்.
இதைத் தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், "சில விஷயங்களில் நீதித் துறைக்கும், அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. நம் குடும்பத்தில், அரசியல் கட்சியில் என அனைத்திலும் கருத்து வேறுபாடு இருக்கும். அவ்வாறு இருந்தால்தான், எந்தப் பிரச்னைக்கும் தீர்வு ஏற்படும். இதுதான், நம் ஜனநாயகத்தின் சிறப்பு" என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/