புதுச்சேரி மாநில அனைத்து பட்டியலின மக்கள் இயக்கம் சார்பில் பத்மஸ்ரீ விருதாளர் தவில் இசை வித்வான் தட்சணாமூர்த்திக்கு பாராட்டு விழா மறைமலை அடிகள் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம்மேக்வால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பத்மஸ்ரீ விருதாளர் தட்சிணாமூர்த்தியை பாராட்டி பொன்னாடை அணிவித்து பரிசையும், பாராட்டு மடலையும் வழங்கினார்.
இந்த விழாவில் புதுச்சேரி சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ராமலிங்கம், கல்யாணசுந்தரம் சிவசங்கரன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம்மேக்வால் பத்மஸ்ரீ விருதாளர் தவில் இசை வித்வான் தட்சிணாமூர்த்தியுன் இணைந்து ஓம் நமசிவாயம் என்ற பாடலை பாடி விழாவிற்கு வந்தவர்கள் அனைவரையும் மகிழ்வித்தார்.
அப்போது மத்திய அமைச்சரின் பாடலை கேட்டு அரங்கத்தில் இருந்த அனைவரும் கைத்தட்டி அவருடன் சேர்ந்து பாடலை பாடினார்கள். முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம்மேக்வால், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையானது அந்தந்த மாநில தாய் மொழிகளை மேம்படுத்துவதாக அமைந்துள்ளது.
அதன்படி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட அனைத்து மாநிலத் தாய் மொழிகளிலும் கற்பதற்கான முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்தி போன்ற குறிப்பிட்ட மொழியை மாநிலங்களில் திணிப்பதாக கூறுவது சரியல்ல என தெரிவித்தார்.