ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி அமையவுள்ளதையும், அண்டை நாடுகளில் அது ஏற்படுத்தப் போகும் தாக்கத்தையும் இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் தலிபான்கள் மாறவில்லை என்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கரவாத நடவடிக்கைகள் இந்தியாவுக்குள் ஊடுருவக்கூடும் என கவலை தெரிவித்த அவர், இந்தியா அதை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக கூறினார்.
அப்சர்வர் ரிசர்வ் பவுண்டேஷன் நடத்திய கருத்தரங்கில் பிபின் ராவத், அமெரிக்க இந்தோ-பசிபிக் பிரிவு அட்மிரல் ஜான் அகிலினோ ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
பிபின் ராவத் கூறுகையில், "ஆப்கானை தாலிபான்கள் கைப்பற்ற சில மாதங்கள் ஆகும் என நினைத்தாம் ஆனால் இவ்வளவு விரைவாக கைப்பற்றுவர் என எதிபார்க்கவில்லை. ஆனால் இது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆப்கானில் ஊடுருவியுள்ள பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கவலை மத்திய அரசுக்குஉள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளை போல ஆப்கனில் இருந்து வரும் சவால்களையும் சமாளிக்க தயாராக உள்ளோம்.
20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை போல தான் தலிபான்கள் இப்போதும் இருக்கிறார்கள். ஆப்கானில் இருந்து வரும் செய்திகள் மற்றும் அறிக்கைகள் அனைத்தும் தாலிபான்கள் எந்த வகையான செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் என கூறுகின்றன" என்றார்.
ராவத்தின் கருத்துக்கள், தலிபான்களைப் பற்றி ஒரு மூத்த இந்திய அதிகாரியின் முதல் விமர்சனத்தை குறிக்கின்றன. இதுவரை, இந்திய அதிகாரிகள், உள்நாட்டிலோ அல்லது சர்வதேச அரங்குகளிலோ, தலிபான்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளாமல், ஆப்கானிஸ்தானில் இருந்து வரக்கூடிய சூழ்நிலைகள் மற்றும் சாத்தியமான அச்சுறுத்தல்கள் குறித்து கவலையை வெளிப்படுத்தினர்.
தனிப்பட்ட முறையில், தலிபான்களின் எழுச்சி இந்தியாவை, குறிப்பாக காஷ்மீரில் தாக்குதல் நடத்த விரும்பும் தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் என்று இந்திய அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பிரச்சினைகளுடன் ஆப்கானிஸ்தான் நிலைமையை ஒப்பிடக்கூடாது என ராவத் கூறினார்.. இரண்டுமே பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு ஏற்பட்ட சவால்கள்தான். ஆனால் அவை இரண்டு வெவ்வேறானவை. அந்த இரண்டு இணையான கோடுகள் சந்திக்க வாய்ப்பில்லை என தெரிவித்தார்.
ராவத் மேலும் கூறுகையில், "இந்தியா அனைத்து பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் எதிராக போராட தயாராக இருக்க வேண்டும், பயங்கரவாதிகள் இல்லாத சூழலை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளேன். ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி, பின்னர் இந்தியாவுக்குள் நுழையவும் வாய்ப்புள்ள எந்த பயங்கரவாத நடவடிக்கையும் நம் நாட்டில் பயங்கரவாதத்தை கையாளும் விதத்தில் கையாளப்படும் என்பதை உறுதி செய்வோம்" என்றார்.
குறைந்தபட்சம் பயங்கரவாதிகளை அடையாளம் காண்பதிலும், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த உலகளாவிய போரை எதிர்த்துப் போராடுவதற்கு சில உளவுத்துறையின் கருத்துக்களைப் பெறுவதிலும், மற்ற குவாட் நாடுகளின் (அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா) ஆதரவை இந்தியா வரவேற்பதாக ராவத் கூறினார்.
அட்மிரல் அகிலினோ கூறுகையில், "அமெரிக்கா தனது அனைத்து குடிமக்களையும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றுவதில் உறுதியாக இருக்கிறது. எங்கள் குடிமக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக இந்தியாவிற்கும் அமெரிக்க பாதுகாப்புத்துறைக்கும் இடையே நெருக்கமான ஒருங்கிணைப்பு உள்ளது" என கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.