ஜம்மு காஷ்மீரில் உள்ள தோடா மாவட்டத்தின் தேசா வனப் பகுதியில் திங்கள்கிழமை இரவு பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் மேஜர் பதவியில் உள்ள அதிகாரி உட்பட நான்கு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
காடுகளுக்குள் மறைந்திருந்த பயங்கரவாதிகளை தேடிச் சென்றதில் 5 வீரர்களுக்கு புல்லட் காயங்கள் ஏற்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இதில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
நக்ரோட்டாவை தளமாகக் கொண்ட ஒயிட் நைட் கார்ப்ஸ், ஆரம்ப அறிக்கைகளை மேற்கோள் காட்டி, இந்த சம்பவத்தையும் உயிரிழப்புகளையும் உறுதிப்படுத்தியது, ஆனால் காயமடைந்தவர்கள் பற்றிய விவரங்களைத் தெரிவிக்கவில்லை. எனினும் அந்தப் பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: Army officer among four soldiers killed in encounter in Jammu and Kashmir’s Doda
காடுகளுக்குள் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து என்கவுன்டர் தொடங்கியது.
பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர், இரு தரப்பினருக்கும் இடையே சுமார் அரை மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. அதன்பிறகு, பயங்கரவாதிகள் தரப்பில் இருந்து துப்பாக்கிச் சூடு எதுவும் நடக்கவில்லை.
ஜம்மு பகுதியில் பல்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாலும், பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் தொடர்வதாலும், காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“