இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு அம்சங்கள் கசிவு விவகாரம் தொடர்பாக, ராணுவ வீரர்கள், ஒரேநேரத்தில் அதிகம் பேர் தகவல்களை பெறும் வகையிலான வாட்ஸ்அப் குரூப், இமெயில், சாட் வசதி உள்ளவைகளில் பங்கெடுத்துக்கொள்ள தடைவிதிக்கப்படுவதாக ராணுவ உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
விரைவில் மேற்கொள்ளப்பட உள்ள ஆபரேசனுக்கான மேப்பை, போட்டோஎடுத்து, பிரிகேடியர் தலைமையகத்தில் உள்ள உயர் அதிகாாரிக்கு வாட்ஸ்அப்பில் அனுப்புமாறு, பிரிகேடியருக்கு உயர் அதிகாரி உத்தரவிட்டதை தொடர்ந்து அவரும் அனுப்பியுள்ளார். பின் உயரதிகாரி, அந்த மேப்பை, பட்டாலியன் வீரர்களுக்கு அனுப்பியுள்ளார். இந்த ரகசிய ஆபரேசன் மேப், சில நாட்களில் பொதுமக்கள் அனைவரும் கையிலும் இருந்ததை கண்டு ராணுவம் அதிர்ச்சியுற்றது.
இது முதல் சம்பவமல்ல. இதுபோன்று பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ரகசிய ஆவணங்கள், வாட்ஸ்அப் மூலமாக பலமுறை பொதுவெளியில் கசிந்துள்ளது. பாதுகாப்பு குறித்த ரகசிய தகவல்கள் பொதுவெளியில் கசிவதை தடுக்கும் நடவடிக்கைகளை இந்திய ராணுவம் துரிதப்படுத்தியுள்ளது.
ராணுவம் அதிரடி உத்தரவு : ஒரேநேரத்தில் அதிகம் பேர் தகவல்களை பெறும் வகையிலான வாட்ஸ்அப் குரூப், இமெயில், சாட் வசதி கொண்ட குரூப்களில் ராணுவ வீரர்கள் இடம்பெறக்கூடாது. இதை அவர்கள் மீறினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒருவரிடம் மட்டுமே தகவல்களை பரிமாறிக்கொள்ளும் வசதியினை பயன்படுத்திக்கொள்ளலாம், ஆனால், அதிலும் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு ராணுவ உயர் அதிகாரி தெரிவித்துள்ளதாவது, ராணுவ வீரர்களுக்கு சமூகவலைதளஙகள் பயன்படுத்துவது குறித்த வழிமுறை மற்றும் விழிப்புணர்வு நடைமுறைகள் குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். ராணுவத்தின் புதிய நடைமுறைகள், புதிய உத்திகள் போன்றவைகளை, ராணுவ வீரர்களுக்கு வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களின் மூலமே பகிர்ந்துகொள்கிறோம்.
வாட்ஸ்அப் குரூப் உள்ளிட்டவைகளில், பகிரப்படும் தகவல்கள் என்கிரிப்ட் முறையில் பாதுகாக்கப்பட்டு அனுப்பினாலும் தொழில்நுட்ப வல்லுனர்களாக திகழ்பவர்கள் சிலரால், அந்த விசயங்கள் கூட பொதுவெளியில் கசிவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இருந்தபோதிலும், ராணுவ வீரர்கள், வாட்ஸ்அப் குரூப்களில் அதிகளவில் ஈடுபடுவதை தவிர்க்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்