பல்வேறு நோய்களுக்கு தீர்வளிப்பதாக பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்களை விளம்பரம் செய்தது தொடர்பாக பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணா மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் அவரது பதஞ்சலி நிறுவனம் மீண்டும் சிக்கலில் சிக்கியுள்ளது. ஆட்சேபனைக்குரிய விளம்பரங்களை வெளியிட்டதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாததால், பிணையில் வரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்து கேரள மாநிலம், பாகல்லாடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி பாபா ராம் தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆதாரமற்ற கூற்றுகளுடன் கூடிய விளம்பரங்களை வெளியிட்டு பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்வதாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வழக்கு தொடரப்பட்டது. குறிப்பாக, தங்கள் நிறுவனத்தின் பொருட்கள் உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் கோவிட் தொற்று ஆகியவற்றை குணப்படுத்துவதாக விளம்பரம் செய்யப்பட்டது. இதற்கான விசாரணைக்கு சம்மன் அனுப்பப்பட்டும் சம்பந்தப்பட்ட நபர்கள் ஆஜராகாததால், வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கு விசாரணை பிப்ரவர் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்குகள் ஏற்கனவே பதஞ்சலி மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. கேரள மாநிலம், கோழிக்கோடு, உத்தரகாண்டில் உள்ள ஹரித்துவார் ஆகிய இடங்களிலும் பாபா ராம்தேவ் மற்றும் அவரது குழுவினருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, கேரளாவில் மட்டும் குறைந்தபட்சம் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் கோழிக்கோட்டில் 4 வழக்குகள், பாலக்காட்டில் 3 வழக்குகள், எர்ணாகுளத்தில் 2 வழக்குகள் மற்றும் திருவனந்தபுரத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பல விசாரணைகளில் பாபா ராம் தேவ் ஆஜராகவில்லை எனக் கூறப்படுகிறது.
மூலிகை மருந்துகள் முதல் டூத் பேஸ்ட் வரை பல்வேறு பொருட்களை பதஞ்சலி நிறுவனம் விற்பனை செய்கிறது. பதஞ்சலி நிறுவனத்திற்கு இது போன்ற சர்ச்சைகள் புதிது அல்ல. ஆயுர்வேத முறையில் பொருட்களை தயாரிப்பதாகக் கூறி, இந்திய சந்தையில் பெரும் இடத்தை பதஞ்சலி நிறுவனம் பிடித்தது. மருந்து பொருட்களில் தவறான தகவல்களை வெளிப்படுத்தி விளம்பரம் செய்வதில் இருந்து, இந்நிறுவனம் மீது பலர் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.