பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் அருண் ஜெட்லி, சுவாசக்கோளாறு பிரச்னை காரணமாக, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பா.ஜ. மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜெட்லிக்கு ( வயது 66) திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து சுவாசக்கோளாறும் ஏற்பட்டதை தொடர்ந்து உடனடியாக டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனை அறிக்கை : அருண் ஜெட்லி, உடல்நலக்குறைவு காரணமாக, இன்று ( 9ம் தேதி) காலை எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐசியூ வார்டில், டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல்நலக்குறைவு காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருண் ஜெட்லி, கடந்த மே மாதம் 23ம் தேதிதான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தார். உடல்நிலையை கருத்தில்கொண்டு, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில் இருந்த அருண் ஜெட்லி விலகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அருண் ஜெட்லிக்கு, கடந்த ஆண்டு மே மாதம் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்த நிலையில், இந்தாண்டு ஜனவரி மாதத்தில், கிட்னி குறைபாடு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தது நினைவிருக்கலாம்.
பிரதமர் மோடி ,அமித் ஷா மருத்துவமனை வருகை: எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருண் ஜெட்லியை காண பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மருத்துவமனைக்கு வந்து உடல்நலம் குறித்து விசாரித்துள்ளனர்.