யாகா நிதன் என்ற மூதாட்டியின் கடைசி ஆசை அவர் இறக்கும் போது தன் கிராமத்தில் இருக்க வேண்டும் என்பதுதான்.
ஆனால் அருணாச்சலப் பிரதேசத்தின் சியாங் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமமான மெஸ்ஸிங்கிற்கு வாகனம் ஓட்டக்கூடிய சாலைகள் இல்லாததால், அவரது குடும்பத்தினர் அவரின் கடைசி ஆசையை எப்படி நிறைவேற்றுவது என்று தவித்தது. இந்த மாத தொடக்கத்தில், கிழக்கு சியாங் மாவட்டத்தின் தலைமையகமான பாசிகாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையின் மருத்துவர்கள் 67 வயதான அவர் நீண்ட காலம் வாழ முடியாது என்று கூறியதை அடுத்து, உறவினர்களும் அண்டை வீட்டினர்களும் அவரை வீட்டிற்குத் திரும்ப உதவினர், அதாவது ஒரு மூங்கில் ஸ்ட்ரெச்சரில் அவரை பல கிலோமீட்டர்கள் வழுக்கும் மலைப் பக்கங்களிலும், பாய்ந்து செல்லும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட மெலிந்த மூங்கில் பாலங்கள் மீதும் சுமந்து சென்றனர்.
இதையும் படியுங்கள்: கரைபுரண்டு ஓடும் வெள்ளம்: சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகள்: ஹிமாச்சலில் என்ன நடக்கிறது?
மூதாட்டி தான் பிறந்த கிராமத்தில் காலமானார், மறுநாள் அடக்கம் செய்யப்பட்டார். அவரது இறுதிப் பயணத்தை ஆவணப்படுத்தும் வீடியோ ஒன்று மாநிலத்தில் ஒரு பரபரப்பை உருவாக்கியுள்ளது, மேலும் அந்த வீடியோவால் ஈர்க்கப்பட்ட கவனம், உள்ளூர்வாசிகளுக்கு தங்கள் நீண்ட கால கோரிக்கையான தங்கள் கிராமத்திற்கு சாலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது.
யாகா நிதனின் இளம் உறவினரான தாலுங் பாபோ யூடியூப்பில் பகிர்ந்த காணொளியில், யிபுக்கில் இருந்து மெஸ்ஸிங்கிற்கான பயணத்தின் கடின நிலப்பரப்பை விவரித்தார். யாகா யிபுக்கிற்குக் கொண்டு வரப்பட்ட பிறகு, சுமார் எட்டு பேர் கொண்ட ஒரு குழு, யாகாவைத் தூக்கிக்கொண்டு, அவரை வீட்டிற்குத் திரும்ப அழைத்துச் சென்றது.
தூறல் பெய்து கொண்டிருந்தது, அதனால் மூதாட்டி நீல நிற தார்பாயால் மூடப்பட்டிருந்தார், அந்த மூங்கில் ஸ்ட்ரெச்சரை ஆண்கள் தலையில் சுமந்தபடி சென்றனர்.
இந்த பயணம் ஜூலை 3 ஆம் தேதி நடந்தது என்று யாகாவின் மகன் தன்யுப் நிய்தன் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார். தன்யுப், சியாங் மாவட்டத்தின் தலைமையகமான போலெங்கில் வசிக்கிறார், ஒரு கிராமவாசி அவரது தாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக நகரத்திற்குச் சென்று கூறியதை அடுத்து தன்யுப் தனது கிராமத்திற்கு வந்தார்.
"நாங்கள் மூதாட்டியை பாசிகாட்டில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம், ஆனால் அடுத்த நாள், அவர் பிழைக்க மாட்டார் என்று மருத்துவர்கள் எங்களிடம் சொன்னார்கள். எனவே, நாங்கள் அவரை மீண்டும் போலெங்கிற்கு அழைத்துச் சென்று இறுதி பிரார்த்தனை செய்தோம். அங்கு, மூதாட்டி தனது சொந்த வீட்டை விட்டு வெளியிடத்தில் இருக்க விரும்பவில்லை என்று கூறினார். அவர் தன் 'பஸ்தியில்' இருக்க விரும்பினார், அவருடைய வீட்டின் முன் அடக்கம் செய்ய விரும்பினார்," என்று அவர் கூறினார்.
அவளை யிபுக் (Yibuk) கிராமத்திற்கு அழைத்துச் சென்ற பிறகு, யிபுக், லிஸ்ஸிங் (Lissing) மற்றும் மெஸ்சிங்கில் (Messing) வசிப்பவர்கள் அவரை அங்கிருந்து 15 கிமீ தொலைவில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் செல்ல உதவியதாக அவர் கூறினார்.
ஆளும் பா.ஜ.க.,வின் உள்ளூர் எம்.எல்.ஏ ஓஜிங் தாசிங், இந்த கிராமங்களின் சிறிய மக்கள்தொகை மற்றும் கடினமான நிலப்பரப்பு இப்பகுதியில் சாலை இணைப்பை அடைவதை சவாலாக ஆக்கியுள்ளது என்றார்.
மேலும், “பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா மூலம் சாலை அமைப்பதற்கு விண்ணப்பித்துள்ளோம். ஆனால் இந்த கிராமங்கள் மிகவும் சிறியவை. மெஸ்ஸிங்கில் வெறும் ஒன்பது வீடுகளும், லிஸ்ஸிங்கில் வெறும் 11 வீடுகளும் உள்ளன. திட்டத்திற்குத் தகுதிபெற, குறைந்தபட்சம் 250 மக்கள்தொகை இருக்க வேண்டும். மேலும் நிலப்பரப்பு காரணமாக, இது மிகவும் செலவு மிகுந்தது. இங்கு 100 மீட்டர் சாலையை அமைப்பதற்கு 30-40 லட்சம் ரூபாய் செலவாகும்,'' என்றும் எம்.எல்.ஏ கூறினார்.
இச்சம்பவத்தையடுத்து, தலையீடு கோரி, முதலமைச்சருக்கு மனு அனுப்பி உள்ளதாகவும் எம்.எல்.ஏ கூறினார்.
இந்த கிராமங்களில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் வயதானவர்கள், பெரும்பாலான இளைய தலைமுறையினர், இந்த கிராமங்களுக்குப் பதிலாக போலெங்கில் வசிக்கத் தேர்வு செய்கிறார்கள். யுபிக், லிஸ்ஸிங், மெஸ்ஸிங் ஆகிய கிராமங்களில் தொலைபேசி அல்லது இணைய இணைப்பு இல்லை.
“என் அம்மாவின் மரணத்தால், எங்கள் கிராமத்தில் உள்ள வீடும் காலியாகிவிட்டது. நானும் என் தந்தையும் போலெங்கில் வசிக்கிறோம். கோழிகள் மற்றும் பன்றிகளை கவனித்துக்கொண்டு என் அம்மா அங்கு (மெஸ்ஸிங்கில்) வசித்து வந்தார்," என்று தன்யுப் கூறினார்.
சியாங் துணை கமிஷனர் அதுல் தாயெங் கூறுகையில், இந்த இரண்டு கிராமங்களைத் தவிர, மாவட்டத்தில் இன்னும் ஐந்து இணைக்கப்படாத கிராமங்கள் உள்ளன. ஆனால், எல்லைச் சாலைகள் அமைப்பின் கீழ் சாலை அமைக்கும் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, என்று கூறினார்.
"இந்தப் பகுதியில், 1.5 கோடி ரூபாய் செலவில், பாறைகள் நிறைந்த சாலைப் பணி, ஓரிரு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது, ஆனால், கடினமான நிலப்பரப்பு காரணமாக, தாமதமாகி வருகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு எம்.எல்.ஏ முதலமைச்சரிடம் பேசியதால், அதிக நிதி அல்லது திட்டங்களுக்கு அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறோம், ”என்று துணை கமிஷ்னர் கூறினார்.
யாகாவின் இளம் உறவினரால் படம்பிடிக்கப்பட்ட வீடியோ, அவர்கள் ஒரு செங்குத்தான மலைப்பகுதியில், மெல்லிய மண் பாதையில் ஸ்ட்ரெச்சரை எடுத்துச் செல்வதில் இருந்து தொடங்குகிறது. ஸ்ட்ரெச்சரைச் சுமந்து வருபவர்களுக்கு பாதையை சரி செய்து ஒரு மனிதர் வழி நடத்தினார். அடுத்ததாக, வெளிர் நீல-பச்சை சிமாங் ஆற்றின் வலுவான நீரோட்டங்கள் விரைந்தும் செல்லும் நிலையில், அதற்கு மேலே ஆறு மூங்கில் குச்சிகளால் கட்டப்பட்ட ஒரு குறுகிய பாலத்தின் மீது ஆண்கள் ஸ்ட்ரெச்சரை எடுத்துச் செல்வதை வீடியோ காட்டியது.
“சுதந்திரம் கிடைத்து இத்தனை வருடங்கள் ஆகிறது, ஆனால் இங்கே, நமக்குச் சரியாகச் சுதந்திரம் கிடைக்கவில்லை... இதைப் பாருங்கள்! மற்றவர்கள் ‘டிஜிட்டல் இந்தியா’ செய்துவிட்டு இங்கு எங்களைப் பார்க்கிறார்கள்,” என்று பாபோ, மற்றவர்கள் பாலத்தைக் கடக்கும்போது வீடியோவில் குரல் கொடுத்தார்.
அடுத்த கட்டமாக ஸ்ட்ரெச்சர் ஒரு வனப்பகுதி வழியாக கொண்டு செல்லப்பட்டது. ஒரு காட்டைக் கடக்கும்போது, ஒரு திசையில் லிஸ்சிங் கிராமமும் மறுபுறம் மெஸ்ஸிங்கும் இருப்பதை பாபோ சுட்டிக்காட்டினார்.
பின்னர் அவர்கள் ஆற்றின் மீது ஒரு தொங்கு பாலத்தை அடைந்தனர், அதை ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே கடக்க முடியும். பாலத்தின் குறுக்கே ஸ்ட்ரெச்சரை கொண்டு சென்ற பிறகு, படிகளில் நடப்பது மற்றொரு பெரிய போராட்டமாக இருந்தது. ஏனெனில் ஒரு மூங்கில் மரக் கட்டையில் கால்களை ஊன்றி நடக்க வேண்டும். இறுதியாக மெஸ்ஸிங்கை அடைவதற்கு முன்பு குழு மற்றொரு மரப் பாலத்தைக் கடக்கச் சென்றது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.