நாடுதழுவிய அளவில் பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் இணைக்கும் முயற்சியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னெடுத்து வருகிறார்.
இதன் முதல்படியாக, எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் டெல்லியில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங், சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சரத்பவார், தேவகவுடா, பரூக் அப்துல்லா, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், சீத்தாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். எனினும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
தேசிய அளவில் கூட்டணி அமைப்பதா? அல்லது மாநில அளவில் கூட்டணியா? என்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதுபோலவே பிரதமர் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது, முக்கியமான பிரச்சார யுக்திகள், பாஜக அரசுக்கு எதிராக மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவும், கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு தலைவர்களை அழைக்கவும் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றிருந்தார். முன்னதாக இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு முன்பாக, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை நேரில் சந்தித்து, அழைப்பிதழை ஸ்டாலின் வழங்கினார்.
அப்போது, காங்கிரஸ் மீதான எதிர்ப்பை விட்டுவிட்டு, கைக்கோர்த்து வாருங்கள் என கேஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் அட்வைஸ் கூறியிருக்கிறார்.
பொதுவாகவே, அரவிந்த் கேஜ்ரிவால் பாஜக, காங்கிரஸ் என இரு கட்சிகளையும் அதன் தலைவர்களையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். ராகுல் காந்தியின் கோவில் சுற்றுப்பயணத்தைக் கூட தனது ட்விட்டரில் கேஜ்ரிவால் விமர்சித்து இருந்தார்.
இந்த நிலையில், மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை கேஜ்ரிவாலிடம் வலியுறுத்திய ஸ்டாலின், 'காங்கிரஸுக்கு எதிரான நிலைப்பாட்டை விட்டு விடுங்கள். நாட்டுக்கு இப்போது மாபெரும் கூட்டணி(mahagatbandhan) தேவைப்படுகிறது. அதில் உங்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு' என்று அறிவுறுத்தி இருக்கிறார்.
சில வாரங்களுக்கு முன்பு தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லாவும் இதேபோன்றதொரு அறிவுரையை காங்கிரஸ் கட்சிக்கு வேறு தொனியில் வெளிப்படுத்தி இருந்தார். அதில், 'ஈகோவை நீங்கள் விடாமல் பிடித்துக் கொண்டிருந்தால், தொடர்ந்து தோற்பீர்கள்' என்று அறிவுறுத்தியிருந்தார்.
பாஜக மற்றும் மோடியை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய அளவில் திரண்டு வருகின்றன என்பதை ஸ்டாலினின் இந்த கன்வின்ஸ் மூலமே தெரிந்து கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.