மக்களிடையே இருக்கும் மத வேறுபாடுகள் எவ்வளவு பயனற்றது என்பதை நாவல் கொரோனா வைரஸ் பரவல் நினைவூட்டுவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். நோயில் இருந்து மீண்டவர், மற்றும் நோயாளியின் மதத்தின் அடிப்படையில் பிளாஸ்மா தெரபி சிகிச்சை முறை செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
டெல்லி எல்என்ஜேபி மருத்துவமனையில், சனிக்கிழமை இரவு வரை ஆபத்தான நிலையில் இருந்த ஒரு கொரோனா நோயாளி, பிளாஸ்மா தெரபி சிகிச்சைக்குப் பின் குணமாகி வருவதற்கான அறிகுறிகளை வெளிபடுத்தி வருவதாகவும் கெஜ்ரிவால் கூறினார்.
நோயில் இருந்து மீண்ட ஒரு இஸ்லாமியரிடமிருந்து எடுக்கப்பட்ட நோய் எதிர்ப்பு அணுக்கள், ஆபத்தான நிலையில் இருக்கும் ஒரு இந்து நோயாளியின் உயிரைக் காப்பாற்றும். இந்து ஒருவரிடமிருந்து எடுக்கப்பட்ட நோய் எதிர்ப்பு அணுக்கள் காரணமாக, இஸ்லாம் நோயாளியின் உயிரைக் காப்பாற்றும். சர்வ வல்லமை படைத்த கடவுள், மனிதர்களுக்குள் எந்த பேதமையையும் உருவாக்கவில்லை" என்று தெரிவித்தார்.
முன்னதாக, மருத்துவ பரிசோதனையின் ஒரு பகுதியாக பிளாஸ்மா சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட ஆறு பேரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிவதாக அதிகாரிகள் தெரிவித்தானர்.
பிளாஸ்மா தெரபி சிகிச்சை என்றால் என்ன? கொரோனா வைரஸ் நோய் பாதித்து, குணமானவரிடம் இருந்து ரத்தம் எடுக்கப்படும். அது பகுப்பாய்வு செய்து வைரஸை எதிர்க்கும் அணுக்கள் மட்டும் தனியே எடுக்கப்படும். கன்வலசன்ட் சீரம், அதாவது கோவிட்-19 பாதிப்புக்கு உள்ளாகி குணமடைந்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவரின் ரத்தத்தில் இருந்து பிரிக்கப்பட்ட இந்த அணுக்கள், கோவிட்-19 பாதித்த நோயாளிக்கு செலுத்தப்படும். நோயுற்றவர் மறைமுகமான நோய் எதிர்ப்பாற்றல் பெறுகிறார்.
கொரோனா பெருந்த்தொற்றுக்கு முன்னர், டெல்லியில் நடந்த வகுப்பு வாத கலவரத்தில் 50-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகினர். அதைத் தொடர்ந்து, நிஜாமுதீன் மார்க்கசில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் மாநாடு குறித்த செய்தி கொரோனா பெருந்தொற்றை வகுப்புவாத தோணியில் கொண்டு சென்ற ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் அசவுகரியத்தை ஏற்படுத்தியது.
ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை, டெல்லியின் அரசின் தினசரி கொரோனா தொற்று செய்தி குறிப்பில், தில்லி நிஜாமுதீன் மார்க்கசில் தங்கியிருந்தவர்கள் என்று தனியான வரிசை நிர்வகிக்கப் பட்டிருந்தது. பின்னர், பரவலான விமர்சனங்களுக்குப் பிறகு, கொரோனா வைரஸ் நோயாளிகளின் மத விவரங்களைத் தடுக்கும் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலுக்கு இணங்க, தப்லிக் ஜமாத் வழக்குகள் ‘சிறப்பு நடவடிக்கைகள்’ என்ற பிரிவின் கீழ் இணைக்கப்பட்டன.
"கொரோனா தொற்று இந்துக்கள், இஸ்லாமியர்கள என அனைவரையும் பாதிக்கிறது. நமது உடலின் நோய் எதிர்ப்பு அணுக்கள் மதங்களைப் பொருட்படுத்தாமல் உயிர்களைக் காப்பாற்றுகிறது. நாம் ஏன் இந்த பிரிவினையை உருவாக்கியுள்ளோம்? மத வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால், எந்த சக்தியும் இந்த நாட்டை தோற்கடிக்க முடியாது என்ற பாடத்தை இந்த பெருந்தொற்று காலத்தில் நாம் படிக்க வேண்டும். இன்னும், நமக்கிடையே தொடர்ந்து சண்டை நீடித்தால், நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது,”என்று கெஜ்ரிவால் தெரிவித்தார்.
புதிய பாதிப்புகள், இறப்பு விகிதங்கள் மற்றும் குணப்படுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில், நடந்து முடிந்த வாரத்தில் (ஏப்ரல் 19- 26) ஒப்பீட்டளவில் டெல்லி முன்னேற்றம் கண்டுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்கள் நேரலை சந்திப்பில் தெரிவித்தார்.
டெல்லியில், இதுநாள் வரையில் 2,625 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 54 பேர் உயிர் இழந்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.