ஆரிய சமாஜ் தலைவர் சுவாமி அக்னிவேஷ் உடல்நலக் குறைவால் புதுடெல்லியில் உள்ள கல்லீரல் மற்றும் பிலியரி சயின்ஸ் இன்ஸ்டிடியூட்டில் இன்று காலமானார். அவருக்கு வயது 80.
ஆரிய சமாஜ் தலைவர் சுவாமி அக்னிவேஷ், சில மாதங்களாக கல்லீரல் பாதிப்பு நோயால் அவதிப்பட்டுவந்த நிலையில், அவருடைய பல உடல் உறுப்பு செயலிழக்கத் தொடங்கியது. அதனால், சுவாமி அக்னிவேஷ் உடல்நிலை செவ்வாய்க்கிழமை முதல் மோசமானதால் அவர் புதுடெல்லியில் உள்ள கல்லீரல் மற்றும் பிலியரி சயின்ஸ் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார்.
சுவாமி அக்னிவேஷ் உடல்நிலை செப்டம்பர் 11, வெள்ளிக்கிழமை மேலும் மோசமடைந்த நிலையில், மாலை 6:00 மணிக்கு அவர் மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவர்கள் அவருடைய உயிரைக் காப்பாற்ற முயற்சி செய்தலும், சிகிச்சை பலனின்றி மாலை 6.30 மணிக்கு உயிரிழந்தார். கல்லீரல் மற்றும் பிலியரி சயின்ஸ் இன்ஸ்டிடியூட் அன்பான தலைவர் அக்னிவேஷ் மறைவில் துக்கம் அனுசரிப்பதற்கு நாட்டு மக்களுடன் ஒன்றிணைகிறது என்று தெரிவித்துள்ளது.
சுவாமி அக்னிவேஷ் 1939ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட அக்னிவேஷ் ஆரிய சமாஜத்தில் இணைத்தார். துறவறம் மேற்கொண்டார்.
சுவாமி அக்னிவேஷ் 1977-ல் ஹரியானா மாநில சட்டமன்ற உறுப்பினரானார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார். போராட்டம் நடத்திய கொத்தடிமை தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறையினருக்கு எதிராக ஹரியானா அரசாங்கம் நடவடிக்கை எடுக்காததை எதிர்த்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
சுவாமி அக்னிவேஷ் காஷ்மீரில் அமைதியையும் மத நல்லிணக்கத்தையும் வளர்ப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டார். 2010-ல், அவருக்கு மாவோயிஸ்ட் தலைமைகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பணியை காங்கிரஸ் அரசாங்கம் வழங்கியது. இதையடுத்து, அவர் ஒரு ஆண்டு கழித்து அண்ணா ஹசாரே தலைமையிலான ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் சேர்ந்தார். அப்போது, அவர் ஒரு காங்கிரஸ் அமைச்சருடன் பேசுவதாகக் கூறப்பட்ட வீடியோ ஒன்று வெளியானதைத் தொடர்ந்து அவர் அந்த குழுவிலிருந்து பிரிந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த நேரத்தில்தான் சுவாமி அக்னிவேஷ் ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸில் விருந்தினராக கலந்துகொண்டார்.
சுவாமி அக்னிவேஷ் 2000ம் ஆண்டு முதல் 2014 வரை ஆர்யா சமாஜின் உலக கவுன்சில் தலைவராக இருந்தார். இவர் ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமர்நாத் கோயில் குறித்து தெரிவித்த கருத்துகள் இந்துத்துவ குழுக்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தியது. சுவாமி அக்னிவேஷ் அமர்நாத் பனி லிங்கத்தை அது வெறும் பனிக்கட்டி அது எந்த மத முக்கியத்துவத்தையும் கொண்டிருக்கவில்லை என்று கூறி கடவுள் சிவனை அமதித்ததாக குற்றம் சாட்டினர்.
2018 ஆம் ஆண்டு, ஜார்க்கண்டில் பாஜகவின் இளைஞர் பிரிவைச் சேர்ந்த எதிர்ப்பாளர்களால் அவர் தாக்கப்பட்டார். தாக்குதல் நடத்தியபோது எடுக்கப்பட்ட வீடியோவில், எதிர்ப்பாளர்கள் சுவாமி அக்னிவேஷை பாகிஸ்தான் முகவர் என்று அழைத்ததோடு திரும்பிச் செல் என்று கோஷமிட்டனர்.
இந்த சம்பவம் நடந்த ஒரு மாதத்திற்குப் பிறகு, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்துவதற்காக வரும் வழியில் சுவாமி அக்னிவேஷ் புதுதில்லியில் உள்ள தீன் தயால் உபாத்யாயா மார்க் பகுதியில் தாக்கப்பட்டார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"