சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு உட்பட மொத்தம் 6 வழக்குகளின் விசாரணை டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரவின் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு (எஸ்ஐடி) மாற்றப்பட்டுள்ளது.
அக்டோபர் 2 ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஆர்யன் கான், தற்போது ஜாமீனில் உள்ளார். அவரை விடுவிக்க 25 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும், அதில் சமீர் வான்கடேவுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. குறிப்பாக, மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக், சமீர் வான்கடே மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதுதொடர்பாக நமது தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்துடன் பேசிய வான்கடே, “மும்பை உயர்நீதிமன்றத்தில், இந்த வழக்குகளை மத்திய ஏஜென்சியால் விசாரிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
எனவே, இவ்வழக்குகளில் இருந்து நீக்கப்பட்டதாகவோ அல்லது பணியிட மாற்றப்பட்டதாகவோ கிடையாது. தற்போதும், மும்பை மண்டல பிரிவின் இயக்குநராக தான் உள்ளேன்” என தெரிவித்தார்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட என்சிபி துணை இயக்குநர் ஜெனரல் எஸ் கே சிங், “மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரித்து வந்த ஆர்யன் கான் வழக்கு, மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக்கின் மருமகன் அர்மான் கோலி தொடர்புடைய வழக்கு உள்பட 6 வழக்குகளும் டெல்லி எஸ்ஐடிக்கு மாற்றப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் விரிவடைவதாலும், அவற்றை ஆழமாக விசாரிக்க வேண்டும் என்பதாலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எந்த அதிகாரியும் அல்லது அதிகாரிகளும் அவர்களின் தற்போதைய பணிகளில் இருந்து நீக்கப்படவில்லை. ஏதேனும் குறிப்பிட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் வரை அவர்கள் தொடர்ந்து சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு உதவுவார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை செல்லும் எஸ்ஐடி குழுவினர், அனைத்து விதமான பிராசஸை முடித்துகொண்டு, இன்று விசாரணையை தொடங்குவார்கள் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீர் வான்கடே மாற்றம் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட மாலிக், ” ஆர்யன் கான் வழக்கு உட்பட 5 வழக்குகளில் இருந்து சமீர் வான்கடே நீக்கப்பட்டுள்ளார். மொத்தம் 26 வழக்குகள் விசாரிக்கப்படவுள்ளது. இது ஆரம்பம் தான். இந்த சிஸ்டத்தை சுத்தம் செய்திட இன்னும் நிறைய செய்ய வேண்டும், அதை நிச்சயம் செய்வோம்” என குறிப்பிட்டிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil