scorecardresearch

கேள்விகள் உண்டு; பதில் அளிக்க ஆள் இல்லை… எம்.பி.க்கள் வருகை குறைவால் பாஜக அதிருப்தி

பிரதமரின் எச்சரிக்கையையும் மீறி பாஜக உறுப்பினர்கள் அவையில் குறைவான அளவே இருந்தது பாஜக மூத்த தலைவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது என்று அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

 Liz Mathew

Absence of members from House : துறைசார் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் ஒதுக்கப்படும். பொதுவாக எழுத்துப்பூர்வம் மற்றும் வாய்வழி பதில்கள் இதர உறுப்பினர்கள் கேட்கும் கேள்விக்கு வழங்கப்படும். கேள்விகளை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே வழங்கிவிட வேண்டும். திங்கள் கிழமை அன்று நாடாளுமன்றம் வாய்வழி பதில்களுக்காக கேள்விகளை பட்டியலிட்ட போது, எந்தெந்த துறை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பதில் அளிக்க வேண்டுமோ அவர்களில் 14 பேர் நாடாளுமன்றத்திற்கு வருகை புரியாமல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பட்டியலிடப்பட்ட கேள்விகள் நிதி, கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு, சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட ஒன்பது துறைகள் தொடர்பானவை என்பது குறிப்பிடத்தக்கது.

நிறைய உறுப்பினர்கள் வருகை புரியாத நிலையில் 11.45 மணிக்கு முன்பாக வாய்வழி பதில்களுக்கு காத்திருந்த கேள்விகளை பட்டியலிட்டார் சபாநாயகர். அஜய் மிஸ்ரா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற நடைமுறைகள் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பாஜக உறுப்பினர்களின் வருகை குறைந்து வருவதற்கு ஏற்கனவே கடுமையான எச்சரிக்கையை அளித்திருந்தார் நரேந்திர மோடி. டிசம்பர் 7ம் தேதி அன்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மோடி, வருகை குறைவை சுட்டிக்காட்டி உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். இல்லையென்றால் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்று எச்சரிக்கை செய்தார்.

பாராளுமன்றத்தின் மக்களவை பாஜகவின் கொறடா ராகேஷ் சிங்கிற்கு வைக்கப்பட்டிருந்த கேள்விக்கு பதில் அளிக்க அவர் நாடாளுமன்றத்தில் இல்லாததை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டது பாஜக.

முக்கியமான மசோதாக்கள் இருந்தால் மட்டுமே உறுப்பினர்கள் வருவார்கள். ஆனால் மக்களால் தேர்வு செய்யப்பட்டிருக்கும் அவர்கள் கூட்டத்தொடர் முழுமையும் பங்கேற்க வேண்டும். அதனை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். குறிப்பாக பிரதமர் இது தொடர்பாக அறிவுறுத்திய பிறகு அதனை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் மேற்பார்வை செய்து வருகின்றோம். நானும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரும் இதற்கு தீர்வு காண முயற்சி செய்கிறோம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸிடம் சிங் தெரிவித்தார்.

சில வேலைக்காக நான் அவையில் இருந்து வெளியேறிய நேரத்தில் தான் கேள்வி கேட்கப்பட்டது. நான் அவைக்கு திரும்பிய போது என்னுடைய கேள்வி கேட்டு முடிக்கப்பட்டுவிட்டது. நான் சபாநாயகரிடம் மீண்டும் வாய்ப்பு கேட்டேன். ஆனால் ஒருவர் கேள்விக்கு பதில் அளிக்க அழைக்கப்பட்ட பிறகு அவர் பதில் சொல்லவில்லை என்றால் மறுமுறை வாய்ப்பு இல்லை. நான் நாடாளுமன்றத்திற்கு வழக்கமாக வந்து கொண்டிருக்கிறேன். ஒரு நாள் கூட வர தவறவில்லை என்றும் சிங் கூறினார்.

சுகந்தா மஜும்தார், வினோத் குமார் சோன்கர், எல் எஸ் தேஜஸ்வி சூர்யா, சங்கன்னா அமரப்பா, சுனில் குமார் சிங், ரக்ஷா நிகில் காட்சே, பிபி சௌத்ரி மற்றும் சஞ்சய் ஜெய்ஸ்வால் ஆகியோரும் சபையில் இல்லை.

காடுகள் அழிக்கப்படுவது தொடர்பாக தன்னுடைய கேள்வியை முன்வைத்த காங்கிரஸ் உறுப்பினர் கௌரவ் கோகாய், பாஜக உறுப்பினர்களின் வருகை குறைவு குறித்து சுட்டிக்காட்டினார். எதிர்க்கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்புகளை பதிவு செய்து வந்த நிலையில் தன்னுடைய கேள்வியை தொடராத கோகாய், பாஜக உறுப்பினர்கள் எங்கே, அவர்கள் எங்கே சென்றார்கள், கேள்விக்கு பதில் அளிக்க இங்கே ஒரு பாஜக எம்.பியும் இல்லை என்று கருவூல அமர்வை சுட்டிக்காட்டி பேசினார் அவர்.

பிரதமரின் எச்சரிக்கையையும் மீறி பாஜக உறுப்பினர்கள் அவையில் குறைவான அளவே இருந்தது பாஜக மூத்த தலைவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது என்று அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

நாடாளுமன்றத்தில் அமைந்திருக்கும் பாஜக கட்சி அலுவலகத்தில், பிரதமர் மோடி எச்சரிக்கை வழங்கிய நாளுக்கு முதல் நாள் பதிவான உறுப்பினர்களின் வருகை எண்ணிக்கை 240. நாடாளுமன்ற இணையத்தில் அந்த நாளின் மொத்த உறுப்பினர்களின் வருகை எண்ணிக்கை 344 ஆக இருந்தது.

இந்த எச்சரிக்கையை தொடர்ந்து அடுத்த சில நாட்களில் உறுப்பினர்கள் வருகை சற்றே அதிகரிக்க துவங்கியது. டிசம்பர் 7ம் தேதி அன்று வருகை புரிந்த பாஜகவினரின் எண்ணிக்கை 250. மொத்தமாக வந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 386. டிசம்பர் 8ம் தேதி அன்று 261 பாஜக உறுப்பினர்களும், 9ம் தேதி அன்று 262 உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

வருகைப் பதிவேட்டில் உள்ள எண்ணிக்கையே அவையில் இருக்க வேண்டும் என்று இல்லை என்று சுட்டிக்காட்டிய கட்சி தலைவர்கள், டிசம்பர் 8ம் தேதி அன்று காலை 11 மணி முதல் 11.30 மணி வரை பாஜக இருக்கைகளில் வெறும் 60-75 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். ஆனால் அன்று மதியம் அது 85 ஆக இருந்தது. அதே போன்று உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளம் மற்றும் சேவை நிபந்தனைகள்) திருத்த மசோதாவை தாக்கல் செய்யும் போது 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர் என்று தலைவர்கள் கூறுகின்றனர்.

பாஜக எம்பிக்கள் சபைக்குள் இல்லாதது கவலை அளிப்பதாக உள்ளது என்று தலைமைக் கொறடா சிங் ஒப்புக்கொண்டார். “சில உறுப்பினர்கள் தேர்தலுக்கு உட்பட்ட மாநிலங்களுக்குச் செல்ல அனுமதி பெற்றுள்ளனர்… ஆனால் அவையில் கலந்துகொள்வது முக்கியம், அது கவலைக்குரிய விஷயம் என்பது உண்மை. ஒவ்வொரு நாளும் எத்தனை எம்.பி.க்கள் ஆஜரானார்கள் என்பதை சரிபார்த்து பட்டியல் தயார் செய்வோம். எங்களிடம் ஒரு தரவுத்தளம் உள்ளது, ஆனால் அது கவனிக்கப்பட வேண்டும். அவர்கள் அவைக்கு வராமல் இருப்பதற்கு ஐந்து மாநிலங்களின் தேர்தலும் ஒரு முக்கிய காரணம் என்றும் சிங் குறிப்பிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: As 9 mps miss starred question bjp concerned over absence of members from house