காங்கிரஸின் எதிர்காலம் தொண்டர்கள் கையில் உள்ளது என கட்சியின் மூத்தத் தலைவர் சசிதரூர் கூறியுள்ளார்.
காங்கிரஸின் அகில இந்திய தலைமையை தேர்ந்தெடுக்கும் வாக்குப்பதிவு இன்று (அக்.17) நடைபெற்றது. கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணத்தில் இருப்பதால் அவர் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பலரும் தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சசிதரூர் தனது வாக்கினை திருவனந்தபுரத்தில் செலுத்தினார்.
தொடர்ந்து 66 வயதான சசி தரூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பாரத் ஜோடோ யாத்ராவைப் போலவே, இந்தத் தேர்தலும் கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
அடுத்த லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளவும், பா.ஜ.,வை எதிர்த்து போராடவும் புதிய ஆற்றல் தேவை. அடுத்த தேர்தலில் பாஜகவிடம் இருந்து பெரும் சவாலை சந்திக்க உள்ளோம். இந்தத் உள்கட்சி தேர்தல் அந்த நோக்கத்தை நிறைவேற்றியுள்ளதாக நான் நம்புகிறேன்” என்றார்.
தொடர்ந்து தம்மிடம் பிரியங்கா காந்தி பேசியதாக தெரிவித்த சசிதரூர், கட்சி தலைவருக்கான தேர்தல் 22 ஆண்டுகள் கழித்து நடைபெறுகிறது. இதில் பாரபட்சமான நிலை இருக்க கூடாது என்றே அனைவரும் விரும்புகின்றனர்” என்றார்.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு 80 வயதான கார்கேயும் போட்டியிடுகிறார். இவரே கட்சியின் அதிகாரப்பூர்வமற்ற வேட்பாளர் எனக் கூறப்படுகிறது. சசி தரூருக்கு தமிழ்நாட்டின் கார்த்தி சிதம்பரம் மற்றும் ஜம்மு காஷ்மீரின் சில தலைவர்கள் வெளிப்படையாக ஆதரவு அளித்துள்ளனர்.
நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த காங்கிரஸ் கட்சிக்கு நடைபெறும் தேர்தல் கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“