Advertisment

மகாராஷ்டிரா எம்.வி.ஏ கூட்டணி சீட் பகிர்வு; உத்தவ் பிரிவு ஆதிக்கம்; 3 இடங்களை விட்டுக்கொடுத்த காங்கிரஸ்

மகாராஷ்டிராவில் எதிர்கட்சி கூட்டணியான மகா விகாஸ் அகாடி சீட் பகிர்வு ஒப்பந்தம்; அதிக இடங்களில் போட்டியிடும் சிவசேனா உத்தவ் பிரிவு; கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்த காங்கிரஸ்

author-image
WebDesk
New Update
mva maharashtra

மகா விகாஸ் அகாடி கூட்டணி சீட் பகிர்வு ஒப்பந்தம் முடிவானது (எக்ஸ்பிரஸ் புகைப்படம் – சங்கதீப் பானர்ஜி)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Alok Deshpande 

Advertisment

நீண்ட இழுபறிக்குப் பிறகு, மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி (MVA) எதிர்க்கட்சி கூட்டணி செவ்வாயன்று மக்களவைத் தேர்தலுக்கான சீட் பகிர்வு ஒப்பந்தத்தை அறிவித்தது. மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், என்.சி.பி (சரத்சந்திர பவார்) 10 தொகுதிகளிலும் போட்டியிடும்.

ஆங்கிலத்தில் படிக்க: As MVA works out seat-sharing, the takeaways: Good deal for Uddhav, Congress cedes three seats

2022 இல் சிவசேனா கட்சி பிளவுபட்டு, அதன் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவிடம் இழந்தாலும், உத்தவ் தாக்கரே சீட் பகிர்வில் மேலாதிக்கத்தை தக்க வைத்துக் கொண்டார். கொங்கன், மேற்கு மகாராஷ்டிரா, மராத்வாடா, வடக்கு மகாராஷ்டிரா மற்றும் விதர்பா ஆகிய மாநிலத்தின் ஐந்து மண்டலங்களிலிருந்தும் சிவசேனா உத்தவ் பிரிவு களத்தில் இருக்கும். மும்பை, கொங்கன் மற்றும் வடக்கு மகாராஷ்டிரா என பாரம்பரியமாக சிறப்பாகச் செயல்பட்டு வந்த பிராந்தியங்களையும் சிவசேனா உத்தவ் பிரிவு தக்கவைத்துக் கொண்டுள்ளது.

NCP (SP) கட்சி குறைவான இடங்களில் போட்டியிட முன்னுரிமை அளித்துள்ளது, ஆனால் வெற்றிக்கான அதிக வாய்ப்பு உள்ள இடங்களை தேர்வு செய்துள்ளது. கூட்டணி கட்சிகளுடன் கடுமையாக பேரம் பேசுவதற்குப் பதிலாக, சரத் பவார் தலைமையிலான கட்சி, கடந்த ஆண்டு பிளவுபட்ட போதிலும், கணிசமான இருப்பையும், செல்வாக்கு மிக்க தலைவர்களையும் கொண்டுள்ள தொகுதிகளை தன்னுடன் வைத்திருக்கிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு NCP உடனான சீட் பகிர்வு ஒப்பந்தத்தில் 26 இடங்களைப் பெற்ற காங்கிரஸ், 25 இடங்களில் போட்டியிட்டது, பகுஜன் விகாஸ் அகாடிக்கு ஒன்றைக் கொடுத்தது. இம்முறை, கூட்டணி கட்சிகளுக்கு இடம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில், காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. ஆரம்பத்தில் காங்கிரஸுக்கும் மற்ற இரு கட்சிகளுக்கும் இடையே 10 இடங்களுக்கு மேல் கருத்து வேறுபாடுகள் நீடித்ததாகக் கூறப்பட்டது. இறுதியில், காங்கிரஸ் சாங்லி மற்றும் மும்பை தெற்கு-மத்திய பகுதிகளை சிவசேனாவிற்கும் (உத்தவ் பிரிவு) பிவாண்டி தொகுதியை என்.சி.பி (சரத்பவார் பிரிவு) கட்சிக்கும் விட்டுக்கொடுத்த பிறகு சீட் பகிர்வு ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டது.

பிளவுபடாத என்.சி.பி.,யுடன் முந்தைய கூட்டணியில் பெரிய கூட்டணி கட்சியாக இருந்த பழம்பெரும் கட்சியான காங்கிரஸ், இப்போது மும்பையில் இரண்டு இடங்களில் மட்டும் போட்டியிடுகிறது. பிவாண்டி தொகுதியும் போய்விட்டதால், கொங்கன் பிராந்தியத்தில் காங்கிரஸ் போட்டியிடவில்லை. காங்கிரஸின் முக்கிய கவனம் விதர்பாவில் உள்ளது, அங்குள்ள 10 தொகுதிகளில் காங்கிரஸ் ஏழு தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி மேற்கு மகாராஷ்டிராவில் மூன்று தொகுதிகளில் போட்டியிடுகிறது, மேலும் மராத்வாடாவில் உள்ள லத்தூர், நாந்தேட் மற்றும் ஜல்னா ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிடும் அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கிளர்ச்சியை சந்திக்குமா?

இந்த ஒப்பந்தம் உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகளை கட்சித் தலைமையின் மீது அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது, சாங்லியில் சில தலைவர்களால் கிளர்ச்சி ஏற்படக்கூடும் என்று கூறுகிறார்கள். சாங்லி தொகுதியில், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் வசந்ததாதா பாட்டீலின் பேரன் விஷால் பாட்டீலின் வேட்புமனுவை உள்ளூர் தலைமை வலியுறுத்தியது. இத்தொகுதி காங்கிரஸின் கோட்டையாக இருந்தது, ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு முதல்முறையாக 2014 இல் பா.ஜ.க அந்த தொகுதியைக் கைப்பற்றியதால் காங்கிரஸ் அங்கு தோற்றது.

தொகுதிப் பங்கீடு விவாதம் இழுபறியில் இருந்ததால், முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான விஸ்வஜீத் கடமும், விஷால் பாட்டீலும் மூன்று முறை டெல்லி சென்று காங்கிரஸ் மேலிடத்தை சந்தித்தனர். கடந்த வாரம், உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் சிவசேனா (உத்தவ் பிரிவு) தலைவர் சஞ்சய் ராவத்தின் சுற்றுப்பயணத்தை புறக்கணித்ததால், கூட்டணி கட்சிகளுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டது. சாங்லியில் உள்ள உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள், தங்கள் கருத்தை வலியுறுத்தும் வகையில், சிவசேனாவுக்கு சாங்லியில் எந்த இருப்பும் இல்லை என்றும், அதற்கு தொகுதியை வழங்குவது வீண் என்றும் கூறினர்.

பேச்சுவார்த்தை மேசையில் வலுவான தலைமை இல்லாததே கட்சியின் இடங்கள் சுருங்குவதற்கு காரணம் என்று சாங்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டினர். டெல்லியில் உள்ள உயர்நிலைக் குழுதான் இறுதி அழைப்பை எடுக்கும் என்று மாநிலத் தலைமை கூறியதாக அந்த தலைவர்கள் தெரிவித்தனர்.

“உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவாருடன் நீங்கள் பேச்சுவார்த்தை நடத்தும்போது, ஒருவர் இராஜதந்திர ரீதியாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். வெறும் பகிரங்க அறிக்கைகள் மட்டும் போதாது” என்று ஒரு காங்கிரஸ் தலைவர் கூறினார். விஷால் பாட்டீல் சுயேட்சையாக போட்டியிடலாம் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் காங்கிரஸ் கட்சியே வேறு யாரையாவது வேட்பாளராக நிறுத்தலாம் என்றும், கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே நேரடி சண்டைக்கு களம் அமைக்கலாம் என்றும் மற்றொரு பிரிவினர் கூறியுள்ளனர்.

முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் சிட்டிங் எம்.பி ராகுல் ஷெவாலேவுக்கு எதிராக மும்பை தெற்கு-மத்திய தொகுதியில் அனில் தேசாய் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் மும்பை காங்கிரஸ் தலைவர்களும் சிவசேனா (உத்தவ் பிரிவு) மீது அதிருப்தி அடைந்துள்ளனர். மும்பை காங்கிரஸ் தலைவர் வர்ஷா கெய்க்வாட் இத்தொகுதிக்கான முக்கிய போட்டியாளர்களில் ஒருவர். பிவாண்டியில், உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் NCP (SP) கட்சி வேட்பாளருக்கு வேலை செய்ய மாட்டோம் என்று கூறியுள்ளனர். கோலாப்பூர், ராம்டெக் மற்றும் அமராவதியை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக்கொடுத்துள்ளதாகவும், சாங்லி மற்றும் மும்பை தெற்கு-மத்திய தொகுதிகளில் போட்டியிடுவதில் தவறில்லை என்றும் சிவசேனா (உத்தவ் பிரிவு) உள்விவகாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில், உத்தவ் தாக்கரே, சரத் பவார் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் ஆகியோர் இந்த முடிவு ஒருமனதாக இருப்பதாகவும், மகா விகாஸ் அகாடி கூட்டணியில் எந்த வேறுபாடும் இல்லை என்றும் கூறினர்.

“இறுதியில், நாங்கள் எங்காவது விவாதங்களை முடித்துவிட்டு பிரச்சாரத்தைத் தொடங்க வேண்டியிருந்தது. லட்சியம் கொள்வதில் குற்றமில்லை. எவ்வாறாயினும், யாரை தோற்கடிக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதன் மூலம் நாம் ஒன்றிணைந்து வெற்றிபெற வேண்டும். நாங்கள் ஒன்றாக வேலை செய்யத் தொடங்கியுள்ளோம்,” என்று உத்தவ் தாக்கரே கூறினார்.

சரத் பவார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சாங்லி அல்லது வேறு எந்த தொகுதியிலும் எந்த வித்தியாசமும் இல்லை. அனைத்து முடிவுகளும் ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளன” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Maharashtra Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment