கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குஜராத் மாநில பால் கூட்டுறவு பிராண்டான அமுல், கர்நாடக சந்தையில் நுழைய முயற்சிப்பது அரசியல் பிரச்சனையாகி உள்ளது. கர்நாடக பால் கூட்டமைப்பு சார்பில் நந்தினி என்ற பெயரில் பால், தயிர், மோர் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பால் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு கர்நாடக பால் கூட்டமைப்பு பால், பால் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில், குஜராத்தை சேர்ந்த அமுல் நிறுவனம் கர்நாடகத்தில் ஆன்லைன் மூலமாக வீடுகளுக்கு பால், தயிர், மோர் விற்பனை செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. இது அம்மாநில விவசாயிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பா.ஜ.கவின் ஆதரவுடன் அமுல் கர்நாடக சந்தையில் நுழைவது, கன்னடர்களின் அடையாளத்துடன் நெருக்கமாகப் பிணைந்துள்ள கர்நாடக பால் கூட்டமைப்பு (கேஎம்எஃப்) பிராண்டான “நந்தினி”க்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.
பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க அரசு “மாநிலத்தின் பெருமையை” அழித்து வருகிறது என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா நேற்று (ஏப். 9) கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் எஸ்.டி.சோமசேகர் கூறுகையில், கே.எம்.எஃப் மற்றும் அமுல் பால் நிறுவனத்தின் விற்பனையை இணைக்கும் திட்டம் எதுவும் இல்லை. காங்கிரஸ்,
மதச்சார்பற்ற ஜனதா தளம் தேர்தலுக்கு முன் இதை அரசியல் பிரச்சினையாக மாற்றி வருகிறது என்று சாடினார்.
மேலும் அவர் கூறுகையில், கோடை காலத்தில் பால் உற்பத்தி சற்று குறைவாக உள்ளது மற்றும் இது வழக்கமானது. கர்நாடகாவில் 15 பால் சங்கங்கள் உள்ளன, அனைத்தும் லாபம் ஈட்டி வருகின்றன. அமுல் நிறுவனம் லிட்டருக்கு ரூ. 57 என்ற விலையில் ஆன்லைனில் பால் விற்பனை செய்கிறது. நந்தினி பால் விலை லிட்டருக்கு 39 ரூபாய் மட்டுமே. நந்தினி பொருட்களை தமிழகம் உட்பட பிற மாநிலங்களுக்கும் அனுப்புகிறோம்.
குஜராத்தின் அமுலைப் போலவே நந்தினி தயாரிப்புகளையும் உருவாக்க விரும்புகிறோம்,” என்றார்.
பிரச்சனையின் தொடக்கப் புள்ளி
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த டிசம்பரில் மாண்டியாவில் நடந்த பேரணியில், கர்நாடகாவின் ஒவ்வொரு கிராமத்திலும் 3 ஆண்டுகளுக்குள் முதன்மை பால்பண்ணைகள் அமைக்க அமுலும் நந்தினியும் இணைந்து செயல்படுவார்கள் என்று கூறினார். இதையடுத்து, கடந்த வாரம் அமுல் நிறுவனம் முதற்கட்டமாக பெங்களூருவில் பால் மற்றும் தயிர் விற்பனையைத் தொடங்குவதாக அறிவித்ததை அடுத்து இந்த பிரச்சனை வேகமெடுத்தது.
22,000 கிராமங்கள், 24 லட்சம் பால் உற்பத்தியாளர்கள், மற்றும் 14,000 கூட்டுறவு சங்கங்கள் என ஒவ்வொரு நாளும் தோராயமாக 84 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யும் கே.எம்.எஃப்-பின் மிகப்பெரிய வலையமைப்பைக் கருத்தில் கொண்டு, இன்றுவரை, மாநிலத்தில் எந்த அரசாங்கமும் கர்நாடக பால் கூட்டமைப்புக்கு விதிமுறைகள் விதிக்க முயற்சிக்கவில்லை. பெரும்பாலான பால் உற்பத்தியாளர்கள் பழைய மைசூரு பகுதிகளான மாண்டியா, மைசூரு, ராமநகரா மற்றும் கோலார் மற்றும் மத்திய கர்நாடகா மாவட்டமான தாவங்கரே ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த பகுதிகள் சுமார் 120-130 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி உள்ளது என்பதால் இது முக்கியமான தேர்தல் தொகுதியாக உள்ளது.
நந்தினி பின்னணி
பழைய மைசூரு பகுதிகளில் வொக்கலிகா சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர். இங்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்துகிறது. மத்திய கர்நாடகா லிங்காயத் சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்துகின்றனர். லிங்காயத்துகள் மாநிலத்தில் பாஜகவின் மிகப்பெரிய ஆதரவு தளமாக உள்ளனர்.
நந்தினி பால் கர்நாடகாவின் பாரம்பரியத்துடனும் கலாச்சாரப் பின்னணியுடனும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஏன் என்றால் நந்தினி பால் பிராண்டிற்கு பல தசாப்தங்களாக கர்நாடக மக்களால் என்றும் கொண்டாடப்படும் பிரபலமான நடிகர்களான டாக்டர் ராஜ்குமார், உபேந்திரா மற்றும் புனித் ராஜ்குமார் போன்றவர்களால் விளம்பரப்படுத்தப்பட்டள்ளது. கர்நாடக பால் கூட்டமைப்பின் முதல் பால்பண்ணை 1955-ல் குடகு மாவட்டத்தில் உருவாக்கப்பட்டது. பின்னர் 1984-ம் ஆண்டு கூட்டமைப்பின் புகழ் 14 மாவட்ட பால் சங்கங்கள் இருப்பதை உறுதி செய்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.