கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்குலிக்கும், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் குணால் கோஷ், சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அப்போது, “மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பெயரை கூற சி.பி.ஐ. அதிகாரிகள் அழுத்தம் கொடுக்கின்றனர் என்றார். இதனை விசாரித்த அபிஜித் கங்குலி, “குணாலுக்கு எதிராக ஆதாரங்கள் இருக்கும்பட்சத்தில் அவரிடம் விசாரணை நடத்தலாம். தேவைப்பட்டால் அபிஷேக் பானர்ஜியையும் விசாரிக்கலாம்” என்றார்.
இதற்கு பதில் கொடுத்துள்ள குணால், “நீதிபதி தனது பதவியை விட்டுவிட்டு நேரடி அரசியலுக்கு வர வேண்டும்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.
மேலும், அபிஷேக் பானர்ஜியை சிக்க வைக்க பாரதிய ஜனதா, காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் முயற்சிக்கின்றன” என்றும் குற்றஞ்சாட்டினார்.
இது மட்டுமின்றி நீதிபதி கங்குலிக்கும், மம்தா அரசுக்கும் இடையே மோதல் போக்கு முற்றிவருகிறது. அண்மையில் ஆசிரியர்கள் நியமன ஊழல் தொடர்பாக சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட்டார்.
மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ், “நீதித்துறை மற்றும் நீதிபதிகள் மீது திரிணாமுல் காங்கிரஸாகிய நாங்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். இதை யார் செய்தார்கள், இதன் பின்னணி என்ன என்று தெரியாமல் கருத்து சொல்வது சரியல்ல” என்றார்.
தொடர்ந்து, பாரதிய ஜனதா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் அவர் கடுமையாக சாடினார். இந்நிலையில் நீதித்துறை, திரிணாமுல் காங்கிரஸ் மோதல் குறித்து பேசிய கட்சியின் மூத்தத் தலைவர் ஒருவர், “கடந்த ஆண்டில், ஒவ்வொரு நீதித்துறை உத்தரவும் எங்களுக்கு எதிராக சென்றது உண்மைதான். ஆனால், நீதித்துறையைத் தாக்குகிறோம் என்று அர்த்தமில்லை. இது எங்கள் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துகிறது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“