படேல் இனத்தலைவர் ஹர்திக் படேல் போன்று தோற்றமளிக்கும் ஒருவர், பெண் ஒருவருடன் நெருக்கமாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியான நிலையில், இச்செயல் பாஜகவின் கீழ்த்தரமான அரசியல் பிரச்சாரம் என ஹர்திக் படேல் குற்றம்சாட்டியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலுக்காக அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஹர்திக் படேல், தன் மீது பாலியல் குற்றச்சாட்டை எழுப்பி, அதுகுறித்த பாலியல் சிடியை வெளியிட பாஜக திட்டமிட்டுள்ளது என கடந்த வாரம் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஹர்திக் படேல் போன்று தோற்றமளிக்கும் நபர் பெண் ஒருவருடன் ஹோட்டல் அறையில் நெருக்கமாக அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் நேற்று (திங்கள் கிழமை) வெளியானது. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்திக் படேல், இச்செயல் பாஜகவின் கீழ்த்தரமான அரசியல் பிரச்சாரம் என கூறினார்.
இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டதாவது, “இது கீழ்த்தரமான அரசியலின் துவக்கம். அவர்கள் என்னை அவதூறு செய்யலாம். ஆனால், அதனால் எனக்கு பாதிப்பில்லை. ஆனால், இச்செயல் குஜராத் பெண்களை அவமதிப்பது போல் உள்ளது.”, என தெரிவித்திருந்தார். மேலும், “யார் எதை செய்ய வேண்டும் என நினைக்கிறார்களோ அதை செய்யட்டும். நான் இதிலிருந்து பின் வாங்க போவதில்லை. நான் வளர்கிறேன். என்னை அவமதிக்க பல கோடி ரூபாயை பாஜக செலவிட திட்டமிட்டுள்ளனர்”, எனவும் அவர் பதிவிட்டார்.
மேலும், “எனக்கு கருத்து வேறுபாடுகளை தாண்டி பாஜகவில் நிறைய நண்பர்கள் உள்ளனர். அவர்கள் என்னைப் போன்று தோற்றமளிக்கும் நபர், வெளிநாட்டு பெண்ணுடன் இருப்பதுபோல் வீடியோவை பாஜக தயார் செய்து வைத்திருப்பதாக ஏற்கனவே என்னிடம் தெரிவித்தனர்.”, என இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு அளித்த பேட்டியில் கூறினார்.
இதனிடையே, இந்த சிடியை வெளியிட்டது பாஜகதான் என்ற குற்றச்சாட்டை அக்கட்சி மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.