ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஞாயிற்றுக்கிழமை, முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, எம்.எல்.ஏ.,க்களுக்கு லஞ்சம் கொடுக்கும் பா.ஜ.க.,வின் முயற்சிகளை எதிர்த்து 2020 இல் தனது அரசாங்கத்தைக் காப்பாற்ற உதவினார் என்று கூறினார். சில மணிநேரங்களுக்குப் பிறகு, வசுந்தரா ராஜே முதலமைச்சரின் அறிக்கையை பொய் மற்றும் தனக்கு எதிரான சதி என்று நிராகரித்தார்.
வசுந்தரா ராஜேவின் கோட்டையான தோல்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், 2020 நெருக்கடியின் போது, அதாவது சச்சின் பைலட் மற்றும் அவரது 18 எம்.எல்.ஏ.க்கள் அசோக் கெலாட்க்கு எதிராக கிளர்ச்சி செய்தபோது, வசுந்தரா ராஜே மற்றும் பா.ஜ.க தலைவர் கைலாஷ் மேக்வால் குதிரை பேரத்திற்கு எதிராகப் பேசியதாக அசோக் கெலாட் கூறினார். மேலும், ராஜ்யசபா தேர்தலின் போது எதிர்க்கட்சிகளுடன் முறித்துக் கொண்டு காங்கிரசுக்கு ஆதரவளித்த பா.ஜ.க எம்.எல்.ஏ ஷோபராணி குஷ்வாஹாவையும் அசோக் கெலாட் பாராட்டினார்.
இதையும் படியுங்கள்: மசாலா தோசை.. டெலிவரி பாயுடன் பைக் பயணம்; பெங்களூருவில் ராகுல் காந்தி பரப்புரை
மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, தர்மேந்திர பிரதான் மற்றும் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் தனது அரசாங்கத்தை கவிழ்க்க "சதியில்" ஈடுபட்டதாக அசோக் கெலாட் குற்றம் சாட்டினார்.
“....கைலாஷ் மேக்வால் மற்றும் வசுந்தரா ஜி, பண பலத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை கவிழ்க்கும் பாரம்பரியம் எங்களிடம் இல்லை என்று கூறினர். ஷோபராணி ஜி இருவரது கருத்தின்படியும் மற்றும் அவரது மனசாட்சிப்படியும் அத்தகையவர்களை ஆதரிக்க விரும்பவில்லை. அதனால்தான் எங்கள் அரசு பிழைத்தது,” என்று முதல்வர் அசோக் கெலாட் கூறினார்.
இதற்கு ஒரு நள்ளிரவு அறிக்கையில், வசுந்தரா ராஜே பதிலளித்தார்: “முதலமைச்சர் என்னைப் புகழ்வது அவரது பெரிய சதி. 2023 தேர்தலில் வரலாறு காணாத தோல்வியைத் தவிர்க்க, அவர் இட்டுக்கட்டப்பட்ட கதைகளை உருவாக்குகிறார்.”
லஞ்சம் வாங்குவது குற்றம் என்றும், எம்.எல்.ஏ.,க்கள் பணம் வாங்கியிருந்தால் அவர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்றும் வசுந்தரா ராஜே கூறினார். மேலும், “அவரது சொந்தக் கட்சியில் நடக்கும் கலகம் காரணமாக அவர் இதுபோன்ற பொருத்தமற்ற அறிக்கைகளை வெளியிட்டார். குதிரை பேரத்தைப் பொறுத்த வரையில், அசோக் கெலாட் தான் அதன் பின்னணியில் இருந்தவர்,” என்றும் அவர் கூறினார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நியாயமற்ற முறையில் அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார், "அவரது நேர்மை மற்றும் நாணயம் நன்கு அறியப்பட்டவை" என்று வசுந்தரா ராஜே கூறினார்.
அசோக் கெலாட்டின் அறிக்கைகள் மற்றும் அதற்கு வசுந்தரா ராஜேவின் பதில்கள் முன்னாள் துணை முதல்வரான சச்சின் பைலட், வசுந்தரா ராஜே தலைமையிலான முந்தைய பா.ஜ.க அரசாங்கத்தின் ஆட்சியின் போது நடந்த ஊழல் வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்திய ஒரு நாளுக்குப் பிறகு வந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சியில், "அமித் ஷாவிடம் பணத்தை திருப்பித் தருமாறு" "பணம் வாங்கிய" காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம், தான் கேட்டுக் கொண்டதாக அசோக் கெலாட் கூறினார்.
ராஜ்யசபா தேர்தலின் போது ஷோபராணி குஷ்வாஹா காங்கிரஸை ஆதரித்தபோது, “பா.ஜ.க திகைத்துப் போனது, ஆனால் கைலாஷ் மேக்வாலுக்குத் தெரியும், வசுந்தரா ஜி சிந்தியாவுக்குத் தெரியும்” என்றும் முதல்வர் அசோக் கெலாட் கூறினார். அசோக் கெலாட் இவ்வாறு பேசிய நிகழ்ச்சியில் ஷோபராணி குஷ்வாஹா கலந்து கொண்டார்.
அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் கிளர்ச்சி செய்து அவருக்கு விசுவாசமான 18 எம்.எல்.ஏ.,க்களுடன் ஹரியானாவின் மானேசர் மற்றும் டெல்லியில் ஒரு மாதத்திற்கும் மேலாக முகாமிட்ட பிறகு 2020 அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. கட்சி மேலிடத்தின் தலையீட்டால் நெருக்கடி முடிவுக்கு வந்தது. இதையடுத்து துணை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார்.
அப்போது, நெருக்கடி குறித்து வசுந்தரா ராஜே பகிரங்கமாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. மேலும், தனது அரசாங்கத்தை கவிழ்க்க பா.ஜ.க முயற்சிப்பதாக அசோக் கெலாட் குற்றம் சாட்டியபோது, வசுந்தரா ராஜேவின் விசுவாசியான கைலாஷ் மேக்வால், எம்.எல்.ஏ.க்களின் குதிரை பேரத்திற்கு எதிராகப் பேசினார்.
”நெருக்கடி ஏற்பட்ட போது, அமித் ஷா, தர்மேந்திர பிரதான் மற்றும் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் சேர்ந்து சதி செய்தனர். ராஜஸ்தானில் பணத்தை விநியோகம் செய்தனர். அவர்கள் பணத்தை திரும்பப் பெறவில்லை. அவர்கள் ஏன் பணத்தை திரும்பப் பெறவில்லை என நான் கவலைப்படுகிறேன்?” என்று அசோக் கெலாட் தோல்பூரில் தெரிவித்தார்.
“பணம் வாங்கிய எங்கள் எம்.எல்.ஏ.,க்களிடம், நீங்கள் ரூ. 10 கோடி, ரூ. 20 கோடி வாங்கியிருந்தாலும், செலவு செய்திருந்தாலும், அதை அமித் ஷாவிடம் திருப்பித் தரச் சொன்னேன். நீங்கள் அவருடைய பணத்தை வைத்திருந்தால், அவர் உங்களைப் பிடித்துக் கொள்வார். அவர் குஜராத்தைப் போல மிரட்டுவார், பயமுறுத்துவார்... மகாராஷ்டிராவில் சிவசேனாவை மிரட்டி கட்சியை இரண்டாகப் பிரித்தார்,” என்று அசோக் கெலாட் கூறினார்.
அப்போது பா.ஜ.க தனது அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்தது என்றும், எம்.எல்.ஏ.,க்களை வளைக்க பணம் செலவழிக்கப்பட்டது என்றும் அசோக் கெலாட் கூறியுள்ள நிலையில், பா.ஜ.க மற்றும் கலகம் செய்த எம்.எல்.ஏக்கள் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.
கடந்த காலத்தில், அசோக் கெலாட்டின் குற்றச்சாட்டுகளை "அடிப்படையற்றது" என்று சச்சின் பைலட் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு, சச்சின் பைலட்டை "துரோகி" என்று அசோக் கெலாட் அழைத்தார்.
ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சி (RLP) நிறுவனர் ஹனுமான் பெனிவால் போன்ற அரசியல்வாதிகள் நீண்ட காலமாக அசோக் கெலாட் மற்றும் வசுந்தரா ராஜே இடையே "கூட்டு" இருப்பதாக குற்றம் சாட்டினர் மற்றும் 2020 இல் வசுந்தரா ராஜே முதலமைச்சருக்கு உதவியதாக குற்றம் சாட்டினர். கடந்த மாதம், ஜெய்ப்பூரில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில், அசோக் கெலாட் மற்றும் வசுந்தரா ராஜே இடையேயான கூட்டு பற்றிய எதிர்ப்பாளர்களின் "கருத்தை உடைக்க", முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல் வழக்குகளில் தீர்க்கமாக செயல்பட வேண்டும் என்று சச்சின் பைலட் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.
அசோக் கெலாட் மற்றும் வசுந்தரா ராஜே இருவரும் கூட்டு என்ற இத்தகைய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.
இதற்கிடையில், 2020 அரசியல் நெருக்கடியின் போது தனது அரசாங்கத்தை காப்பாற்றியதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் டேனிஷ் அப்ரார், சேத்தன் துடி மற்றும் ரோஹித் போஹ்ரா ஆகியோரை முதல்வர் பாராட்டினார். “நீங்கள் கட்சிக்கு விசுவாசமாக இருந்தீர்கள், கட்சி உங்களை ஒருபோதும் மறக்க முடியாது. என் வழியில் இருந்தால், மூன்று இளைஞர்களும் என்னுடன் அமைச்சர்களாக ஆகியிருப்பார்கள். எங்களை ஆதரித்து அரசாங்கத்தைக் காப்பாற்ற உதவிய சுயேட்சை நண்பர்கள், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 6 பேர் ஆகிய மூவரையும் சில அரசியல் காரணங்களால் அமைச்சர்களாக்க முடியவில்லை என்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது. என்னை ஆதரித்த 102 பேர்தான் உண்மையான தகுதியுடையவர்கள். ஒரு பெரிய துரோகம் நடக்கப் போகிறது என்பதை சரியான நேரத்தில் எனக்குத் தெரிவித்தவர்கள்தான் உண்மையான தகுதியுடையவர்கள், ”என்று அசோக் கெலாட் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.