மக்களவை தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கியதை எதிர்த்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் அசோக் லவாசாவின் மனைவி, மகன், சகோதரி உள்ளிட்டோர் வருமானவரித்துறையின் கிடுக்கிப்பிடியில் சிக்கியுள்ளனர். இதை மோடி தலைமையிலான மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாகவே கருதுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
அசோக் லவாசாவின் மனைவி நாவல் சிங்கால் லவாசா மீது வருமானவரித்துறை கடந்த ஆகஸ்ட் முற்பகுதியில்,நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனிடையே, லவாசாவின் சகோதரி சகுந்தலா லவாசாவுக்கு மாத இறுதியில் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்நிலையில், லவாசாவின் மகன் அபிர் லவாசாவுக்கும், வருமானவரித்துறை தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நூரிஷ் ஆர்கானிக் புட்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக அபிர் லவாசா உள்ளார். இந்த நிறுவனத்தின் வரவு செலவு குறித்த விபரங்களை, வருமானவரித்துறை கேட்டுள்ளது. பங்குச்சந்தையில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பங்குகளை அபிர் லவாசா வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமல்லாது அசோக் லவாசா மற்றும் நாவல் லவாசாவுக்கு குர்கானில் 4 மாடி கட்டடம் ஒன்று உள்ளது. இந்த கட்டடத்தை கட்டிய ருபாலி பில்ட்வெல் பிரைவேட் லிமிடெட் நிறுவன அதிகாரிகளிடமும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அசோக் லவாசாவுக்கு குர்கானில் 3 புராபர்டிகளும், நொய்டாவில் 1 புராபர்டியும் உள்ளது.
நூரிஷ் ஆர்கானிக் புட்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக அபிர் லவாசா, 2017ம் ஆண்டு முதல் பதவிவகித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம், மொரீசியசை சேர்ந்த ஷாமா கேப்பிடல் நிறுவனம், அபிர் லவாசாவுக்கு ரூ.7.25 கோடி வழங்கியுள்ளது. இந்த பணத்தில், அபிர் லவாசா, 50 ஆயிரம் பங்குகளை வாங்கியுள்ளார். அதன் தற்போதைய மதிப்பு ரூ.1.5 கோடி ஆகும். இந்த கணக்கு நடைமுறைகளில் சிக்கல்கள் தொடர்ந்ததையடுத்து, இதுகுறித்து விளக்கம் பெற, அபிர் லவாசாவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் மோடி, அப்போதைய பா.ஜ., தலைவர் அமித் ஷா தேர்தல் விதிகளை மீறியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு அசோக் லவாசா உள்ளிட்ட தேர்தல் ஆணையர்கள் விசாரணை வந்தது. மூன்று தலைமை தேர்தல் ஆணையர்களில் மற்ற இருவர் மோடி உள்ளிட்டோர் மீது எவ்வித குற்றமும் இல்லை என்று தீர்ப்பளித்த நிலையில், அசோக் லவாசா மட்டும், அந்த உத்தரவுகளுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.