எஸ்.பி வேடம் போட்ட தலைமைக் காவலர்: ஐபோன், வாட்ச் பறிமுதல்; ரூ.10 கோடி கேட்டு தமிழர் உட்பட 3 பேரை மிரட்டிய போலீஸ்

பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து ஐபோன், ஆப்பிள் வாட்ச் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களையும் காவலர் பால்விந்தர் பறித்ததாக எஃப்.ஐ.ஆர்-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து ஐபோன், ஆப்பிள் வாட்ச் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களையும் காவலர் பால்விந்தர் பறித்ததாக எஃப்.ஐ.ஆர்-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
SSP Noida

கன்னா எஸ்.எஸ்.பி ஜோதி யாதவ் இந்த வழக்கை விசாரிக்க ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்.ஐ.டி) அமைத்துள்ளார். Photograph: (Express)

விரைவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கனவு, முதலில் நொய்டாவைச் சேர்ந்த 3 வணிகர்களுக்கு ஒரு பயங்கரமான கனவாக மாறியது. துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட அவர்கள், லூதியானாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பொய் வழக்குப் போடுவதாக மிரட்டப்பட்டனர். ஆனால், கதை முழுவதும் வெளிச்சத்துக்கு வந்தபோது, இரண்டு காவலர்களும் மற்றவர்களும் சட்டத்தின் பிடியில் சிக்கி, பி.என்.எஸ்-ன் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

செப்டம்பர் 15 மற்றும் 16-ம் தேதி இரவுகளுக்கு இடையே, உதவி துணை ஆய்வாளர் (ஏ.எஸ்.ஐ) குல்தீப் சிங் மற்றும் தலைமைக் காவலர் பல்விந்தர் சிங், இவர்களுடன் 4 கூட்டாளிகள், நொய்டாவுக்கு சென்று, தாங்கள் பஞ்சாபில் இருந்து வந்த உயர் போலீஸ் அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஒரு போலி சோதனையை நடத்தினர். வணிகர்களைக் கடத்திய அந்தக் கும்பல், அவர்களை விடுவிக்க "சமரசம்" செய்வதற்காக அவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து ரூ.10 கோடி கேட்டு மிரட்டியதாக, கன்னா சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் கூறுகிறது.

பணம் பறிக்கும் தொகைக்கான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தபோது, நொய்டாவைச் சேர்ந்த 3 பேரும் கன்னாவில் உள்ள சைபர் போலீஸ் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். பஞ்சாப் போலீஸ் அதிகாரிகள் இருவரும், கன்னா சைபர் க்ரைம் பிரிவுப் பொறுப்பாளர் நர்பிந்தர் பால் சிங்கிடம், அவர்கள் வழக்கமான சைபர் மோசடி பேர்வழிகள் என்றும், நொய்டாவில் ஒரு போலி அழைப்பு மையத்தை நடத்தி வருவதாகவும் கூறி, அவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.

எஃப்.ஐ.ஆர்-ல் குறிப்பிட்டுப்படி, பல்விந்தர் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து ஐபோன், ஆப்பிள் வாட்ச் மற்றும் பிற மதிப்புமிக்கப் பொருட்களையும் பறித்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment
Advertisements

ஏ.எஸ்.ஐ குல்தீப் சிங் பதான்கோட்டில் உள்ள அரசு ரயில்வே காவல் நிலையத்தில் (ஜி.ஆர்.பி) பணியமர்த்தப்பட்டுள்ளார். தலைமை காவலர் பல்விந்தர் சிங், ஃபரீத்கோட் எஸ்.பி. (விசாரணை) சந்தீப் வதேராவிடம் துப்பாக்கி ஏந்திய காவலராக இணைக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும், எஃப்.ஐ.ஆர்-ல் குறிப்பிட்டுள்ளபடி, போலி சோதனையின்போது பல்விந்தர் தன்னை காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி) என்று அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும், குல்தீப் டி.ஐ.ஜி என்று காட்டிக்கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது. ஒரு கூட்டாளியான ககன்தீப் சிங் (எ) ஆப்பிள், துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) என்று நடித்தார்.

துணை ஆய்வாளர் நர்பிந்தர் பால் சிங்கின் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்-ன் படி, “பல்விந்தர் தனது துப்பாக்கியை மற்றொரு கூட்டாளியான கரன்தீப் சிங்கிடம் கொடுத்துள்ளார், அவர் தனது துப்பாக்கி ஏந்திய காவலராக நடித்துள்ளார்.”

எஸ்-ஐ நர்பிந்தர் பால் தனது வாக்குமூலத்தில், ஒரு போலி அழைப்பு மையத்தைக் கண்டறியத் தனக்குத் துல்லியமான தகவலைத் தருவதாக பல்விந்தர் சிறிது காலமாகச் சொல்லி வந்ததாகவும், இரண்டு முறை தன்னைச் சந்தித்தபோதும் எந்த ஆதாரத்தையும் அல்லது உறுதியான சான்றையும் கொடுக்கவில்லை என்றும் கூறினார். இருப்பினும், செப்டம்பர் 16-ம் தேதி மாலை, நொய்டாவைச் சேர்ந்த 3 பேர் – தருண் அகர்வால் மற்றும் ஹீரத் ஷா (குஜராத் பூர்வீகம்) மற்றும் துரை ராஜ் (தமிழ்நாடு பூர்வீகம்) – காவல் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டனர்.

அந்த மூவரும் "வழக்கமான சைபர் க்ரைம் மோசடி பேர்வழிகள் என்றும், நொய்டாவில் ஒரு போலி அழைப்பு மையத்தை நடத்தி வருவதாகவும்" பல்விந்தர் கூறினார். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு நர்பிந்தரிடம் கேட்டுள்ளார். “அந்த மூன்று பேரைக் கைது செய்வதற்கு முன் நொய்டாவில் உள்ள உள்ளூர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தீர்களா என்று நான் கேட்டபோது, ​​அவர்கள் இல்லை என்றனர். அந்த மூவரும் என்ன குற்றம் செய்தார்கள் என்பதற்கு எந்த அடிப்படை ஆதாரத்தையும் அல்லது திருப்திகரமான பதிலையும் அவர்களால் கொடுக்க முடியவில்லை” என்று எஸ்.ஐ நர்பிந்தர் கூறினார்.

போலீசார் தருண் அகர்வாலை விசாரித்தபோது, அந்தக் கும்பல் தங்களை பஞ்சாபைச் சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்தி, அவர்களை மிரட்டி, நொய்டாவில் இருந்து கடத்தி, ஒரே இரவில் லூதியானாவுக்கு ஓட்டிச் சென்று, பின்னர் விடுவிப்பதற்காக அவர்களின் குடும்பங்களிடம் ரூ.10 கோடி கேட்டதை அவர் விவரித்தார்.

எஃப்.ஐ.ஆர்-ல் குறிப்பிட்டுள்ளபடி, அகர்வால் தனது வாக்குமூலத்தில், செப்டம்பர் 15 இரவு 10 மணியளவில் அந்தக் கும்பல் தங்கள் நொய்டா அலுவலகத்தை அடைந்ததாகவும், அவர்களில் 4 பேர் உள்ளே நுழைந்ததாகவும் கன்னா போலீசாரிடம் கூறினார்.

“பல்விந்தர் சிங் தன்னை எஸ்.பி. என்றும், ககன்தீப் டி.எஸ்.பி என்றும், ஆயுதம் வைத்திருந்த கரன்தீப், தான் எஸ்.பி. பல்விந்தரின் துப்பாக்கி ஏந்திய காவலர் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார். அடையாளம் தெரியாத நான்காவது நபர் எங்கள் ஊழியர்கள் அனைவரின் லேப்டாப்கள் மற்றும் ஃபோன்களைப் பறிமுதல் செய்து, எங்களை எஸ்.யு.வி-யில் அமருமாறு உத்தரவிட்டார். எங்கள் மீது சண்டிகர் போலீசில் ஒரு புகார் நிலுவையில் உள்ளதாக அவர்கள் கூறினர்,” என்று அகர்வால் கூறினார்.

ஒரே இரவில் வாகனத்தை ஓட்டிச் சென்ற அந்தக் கும்பல், அதிகாலை 4 மணியளவில் மூவரையும் லூதியானாவில் உள்ள சானேவாலில் உள்ள ஜிமிந்தர் தாபாவுக்கு அழைத்துச் சென்று, அவர்கள் விடுவிக்கப்பட வேண்டுமானால் பணம் செலுத்துமாறு அவர்களின் குடும்பங்களுக்குத் தொலைபேசியில் அழைக்கத் தொடங்கியது.

அகர்வால் தனது வாக்குமூலத்தில் மேலும் கூறியது: “பிறகு அவர்கள் டி.ஐ.ஜி வந்துவிட்டார், நாங்கள் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை அவர் முடிவு செய்வார் என்றனர். குல்தீப் சிங் தன்னை டி.ஐ.ஜி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். நாங்கள் ரூ.10 கோடி கொடுக்க வேண்டும் என்றனர். எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என்று என் குடும்பத்தினர் தொலைபேசியில் அவர்களிடம் கூறினர்.”

சற்று நேரத்தில், குல்தீப் சிங் அந்த மூவரிடம் ரூ.5 கோடிக்கு "விஷயத்தை முடித்துக்கொள்ள" முன்வந்தார். அகர்வாலின் சகோதரர் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்று கூறிய பிறகு, அந்தத் தொகை ரூ.2 கோடியாகக் குறைக்கப்பட்டது. இருப்பினும், அகர்வாலின் குடும்பத்தினர் தங்களால் ரூ.10 லட்சத்திற்கு மேல் கொடுக்க முடியாது என்று அவர்களிடம் தெரிவித்தனர்.

பின்னர் அந்த மூவரும் லூதியானாவின் சானேவால் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு “பல்விந்தர் சில வெள்ளைத் தாள்களுடன் வெளியே வந்து, ரூ.70 லட்சத்திற்கு விஷயத்தை முடித்துக்கொள்ள முன்வந்தார்” என்று எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கரன்தீப் தனது ஃபோனையும் பறித்து, தனது கணக்கிலிருந்து கிரிப்டோகரன்சியான USDT 3650 மற்றும் 999 (இரண்டு தவணைகளில்) வலுக்கட்டாயமாக மாற்றியுள்ளார் என்றும் அகர்வால் மேலும் கூறினார். இதன் மதிப்பு தோராயமாக ரூ.4 லட்சம் ஆகும்.

“எனது கணக்கின் ரகசிய எண்களைப் பகிர மறுத்தபோது, அவர்கள் என்னைத் தாக்கினர். அவர்கள் ஃபோனில் இருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள கிஃப்ட் கார்டுகளையும் மாற்றினர். பின்னர் பல்விந்தர் எனது ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்சைப் பறித்துத் தன்னுடன் வைத்துக் கொண்டார்” என்று அகர்வால் கூறினார்.

இந்தச் சதி முழுவதுமாக வெளிப்படுவதற்கு முன், அந்தக் கும்பல் நொய்டா ஆட்களை கன்னா சைபர் க்ரைம் காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்தது.

எஸ்-ஐ நர்பிந்தர் கூறுகையில், குல்தீப் மற்ற கும்பல் உறுப்பினர்களுடன் நொய்டாவுக்குச் சென்றார், ஆனால் "சோதனையின்போது" அலுவலகத்திற்குள் நுழையவில்லை. "பின்னர் அவர் ஒரு டாக்ஸி மூலம் லூதியானாவுக்குத் திரும்பி வந்து டி.ஐ.ஜி-ஆக நடித்தார். அவர்கள் அனைவரும் சிவில் உடையில் இருந்தனர். ஆனால், துப்பாக்கி ஏந்திய காவலர்களாக நடித்தவர்கள் கருப்புச் சட்டை அணிய வைக்கப்பட்டனர்” என்று எஸ்.ஐ கூறினார்.

குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு எஸ்.யு.வி வாகனங்களும் - ஒரு எம்.ஜி ஹெக்டர் மற்றும் கியா செல்டோஸ் - பல்விந்தருக்குப் பழைய "அறிமுகமானவர்" ஆன கரன்தீப் சிங்குக்கு சொந்தமானவை. பல்விந்தர் இந்த கார்களை கடந்த காலங்களில் வாகனங்களைக் கடன் வாங்கியுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

“தமிழர் உட்பட மூன்று பாதிக்கப்பட்டவர்களும் மொழி தடையையும் எதிர்கொண்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் பஞ்சாபியில் விவாதித்த பல விஷயங்கள் அவர்களுக்குப் புரியவில்லை. அவர்கள் டிஜிட்டல் கிரிப்டோகரன்சி வர்த்தகத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். பல்விந்தர் மற்றும் குல்தீப் ஏன் அந்த மூன்று நபர்களைக் குறிவைக்க நொய்டா சென்றார்கள் என்பது அவர்களின் கைதுக்குப் பின்னரே தெளிவாகும்” என்று துணை ஆய்வாளர் கூறினார்.

கன்னா டி.எஸ்.பி (விசாரணை) மோஹித் சிங்லா கூறுகையில், சிறிது காலமாக, ஒரு சட்டவிரோத அழைப்பு மையம் பற்றித் தான் "தகவல் கொடுப்பதாக" பல்விந்தர் நர்பிந்தரிடம் சொல்லி வந்தார், ஆனால் "உறுதியான ஆதாரம் எதுவும் கொடுக்கவில்லை."

"நர்பிந்தர், மூத்த அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து உத்தியோகபூர்வ சோதனை நடத்தப்படுவதற்கு சரியான ஆதாரத்தை அளிக்குமாறு அவரிடம் கூறியிருந்தார், ஆனால் அன்று அவர் மூன்று பேருடன் காவல் நிலையத்திற்கு வந்து அவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு கோரினார். அந்த நபர்களைக் கைது செய்ய எங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. இன்னும், அந்த மூவரும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்களா என்று சரிபார்க்க நொய்டா போலீசாருக்கு நாங்கள் எழுதியுள்ளோம். நர்பிந்தர் தலைமையிலான எங்கள் குழு அன்று வேறு ஒரு சோதனைக்காக குர்கான் சென்றிருந்தது” என்று டி.எஸ்.பி கூறினார்.

குல்தீப், பல்விந்தர் மற்றும் நான்கு கூட்டாளிகள் - கரன்தீப் சிங் (ஷிம்லாபுரி), ககன்தீப் சிங் (எ) ஆப்பிள் (ஜுஜ்ஹார் நகர்), மணி (கியாஸ்புரா) - (இவர்கள் மூவரும் லூதியானாவைச் சேர்ந்தவர்கள்), மற்றும் ஒரு அடையாளம் தெரியாத கூட்டாளி மீது பி.என்.எஸ் பிரிவுகளின் கீழ் 319 (ஆள்மாறாட்டம் மூலம் மோசடி), 140 (கடத்தல்), 3(5) (பொதுவான நோக்கத்துடன் செய்யப்பட்ட குற்றச் செயல்) மற்றும் 318(4) (மோசடி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ககன்தீப் மற்றும் கரன்தீப் ஆகிய இருவருக்கும் முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

ஃபரீத்கோட் எஸ்.பி. (விசாரணை) சந்தீப் வதேராவிடம் தொடர்பு கொண்டபோது: “பல்விந்தர் செப்டம்பர் 10-ம் தேதிக்குப் பிறகு சில குடும்பப் பிரச்சினைகளைக் காரணம் காட்டி பணிக்கு வரவில்லை. அவர் இந்தியா ரிசர்வ் பட்டாலியனைச் (IRB) சேர்ந்தவர், தனது பட்டாலியனுக்குத் திரும்பிச் சென்றிருக்க வேண்டும். சிறப்பு விசாரணைக் குழு இந்த வழக்கை பாரபட்சமின்றி விசாரிக்க வேண்டும்” என்று கூறினார்.

இதற்கிடையில், கன்னா எஸ்.எஸ்.பி ஜோதி யாதவ், இந்த வழக்கை விசாரிக்க எஸ்.பி அளவிலான அதிகாரி தலைமையிலான ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்துள்ளார்.

Noida

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: