Advertisment

இலவச தேர்தல் வாக்குறுதிகளுக்கு தடை? முடிவெடுக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

இலவசங்கள் தருவதாக கூறும் தேர்தல் வாக்குறுதிகளுக்கு தடை கோரிய மனு; நிதி ஆணையத்துடன் ஆலோசித்து உரிய முடிவு எடுக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

author-image
WebDesk
New Update
இலவச தேர்தல் வாக்குறுதிகளுக்கு தடை? முடிவெடுக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

Ananthakrishnan G

Advertisment

Ask finance panel if possible to check freebies: SC to government: அரசியல் கட்சிகள் பொதுப் பணத்தைப் பயன்படுத்தி இலவசங்களை விநியோகிப்பதை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதல்களைக் கோரும் மனுவின் மீது “தன் நிலைப்பாட்டை தெரிவிக்க மத்திய அரசு ஏன் தயங்குகிறது” என்று ஆச்சரியப்பட்ட உச்ச நீதிமன்றம், மாநிலங்களுக்கான வருவாய் ஒதுக்கீட்டை ஒழுங்குபடுத்துவதன் மூலம் இதை சரிசெய்ய முடியுமா என்பதை நிதி ஆணையத்துடன் ஆலோசிக்குமாறு மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேட்டுக் கொண்டது.

அரசாங்க கருவூலத்தை வீணடிப்பதால் இலவசங்களை வழங்குவதை நிறுத்துமாறு கோரிய மனுவை இந்திய தலைமை நீதிபதி என்.வி ரமணா தலைமையிலான நீதிபதிகள் கிருஷ்ணா முராரி மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்தப்போது, இந்தப் பிரச்னையில் ஏதாவது செய்ய நிதி ஆணையம் தான் பொருத்தமான அமைப்பாக இருக்கும் என்று மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் பரிந்துரைத்ததை அடுத்து "தயவுசெய்து நிதி ஆணையத்திடம் இருந்து உரிய வழியைத் தெரிந்துகொள்ளுங்கள்" என்று சொலிசிட்டர் ஜெனரல் கே.எம் நடராஜிடம் தலைமை நீதிபதி ரமணா கூறினார்.

இதையும் படியுங்கள்: பண்ணை வீட்டில் விபச்சாரம்… மேகாலயா பாஜக தலைவர் உ.பி.யில் கைது

அரசியல் கட்சிகள் பகுத்தறிவற்ற இலவசங்களை விநியோகிப்பதைத் தடுக்க எந்த அளவிற்கு தலையிட முடியும் அல்லது தலையிட முடியாது என்று கூறியதுடன், இந்த விஷயத்தில் குறைந்தபட்சம் ஒரு விவாதத்தைத் தொடங்க எந்த அதிகார அமைப்பை தலையிடச் செய்ய வேண்டும் என்பதைத் தெரிவிக்குமாறு ஏ.எஸ்.ஜி.,யிடம் பெஞ்ச் கேட்டுக் கொண்டது.

"பார்க்கலாம். நம்மால் ஏதாவது செய்ய முடியுமா இல்லையா என்பதை முதன்மையாகப் பார்ப்போம். அடுத்த வாரம், எப்போதாவது, நான் இந்த வழக்கைப் பட்டியலிடுவேன். இதற்கிடையில், நாங்கள் விவாதம் அல்லது ஏதாவது ஒன்றைத் தொடங்கக்கூடிய அதிகார அமைப்பு என்ன/யார் என்பதை நீங்கள் கண்டுபிடியுங்கள்,” என்று தலைமை நீதிபதி கூறினார்.

வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயாவின் மனு மீது இந்த ஆண்டு ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கும், இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்பியது.

நோட்டீசுக்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், அதை ஒழுங்குபடுத்தவோ அல்லது இதுபோன்ற தேர்தல் வாக்குறுதிகளை அளிக்கும் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கவோ அதிகாரம் இல்லை என்று கூறியது. தேர்தல் ஆணையம் ஒரு பிரமாணப் பத்திரத்தில், “தேர்தலுக்கு முன்போ அல்லது அதற்குப் பின்னரோ ஏதேனும் இலவசங்களை வழங்குவது/விநியோகிப்பது சம்பந்தப்பட்ட கட்சியின் கொள்கை முடிவாகும், அத்தகைய கொள்கைகள் நிதி ரீதியாக லாபகரமானதா அல்லது மாநிலத்தின் பொருளாதார ஆரோக்கியத்தில் அதன் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துமா என்பது ஒரு கேள்வி. அதை வாக்காளர்கள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்... வெற்றி பெற்ற கட்சி அரசாங்கத்தை அமைக்கும் போது எடுக்கக்கூடிய மாநில கொள்கைகள் மற்றும் முடிவுகளை இந்திய தேர்தல் ஆணையத்தால் கட்டுப்படுத்த முடியாது,” என்று கூறியது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை.

2019 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தின் எலுரு நாடாளுமன்றத் தொகுதியில் ஜனசேனா கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட பெண்டாபதி புல்லா ராவ் தாக்கல் செய்த இலவசங்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட இதேபோன்ற மனுவும் 2019 ஆம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த விஷயத்திலும் தேர்தல் ஆணையம் மேற்கூறிய நிலைப்பாட்டை எடுக்க, மத்திய அரசு இன்னும் பதில் தாக்கல் செய்யவில்லை.

செவ்வாயன்று, அஸ்வினி உபாத்யாயாவின் மனுவின் விசாரணையின் போது, ​​“இவை தரவுகளின் அடிப்படையில் பொருத்தமான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையத்தால் மட்டுமே தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள். அந்த அறிவிப்பில் பொதுத்தன்மை இருக்க முடியாது. இப்போது தேர்தல் ஆணையம் நீதிமன்றத்திடம் இருந்து ஒரு பொதுப் பிரகடனத்தைக் கோருகிறார்கள், ஆனால் நீதிமன்றம் அதைச் செய்ய முடியாது,” என்று பெஞ்சிடம் ஏ.எஸ்.ஜி நடராஜ் கூறினார்.

தலைமை நீதிபதி, “எங்களால் எதுவும் செய்ய முடியாத விஷயத்தில் நீங்கள் ஏன் முடிவெடுக்க கூடாது, ஏன் தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும்?” என்றார்.

தரவுகளின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என்று ஏ.எஸ்.ஜி மீண்டும் கூறியபோது, ​​தலைமை நீதிபதி, “நான் கேட்கிறேன், இது ஒரு தீவிரமான பிரச்சினையாக இந்திய அரசு கருதுகிறதா இல்லையா?” என்றார்.

“சந்தேகமில்லை, இது ஒரு தீவிரமான பிரச்சினை,” என்று ஏ.எஸ்.ஜி கூறினார், அதற்கு தலைமை நீதிபதி, “எனக்கு புரியவில்லை... உங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க, நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்?... நீங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுங்கள். பின்னர் இந்த இலவசங்களை தொடரலாமா வேண்டாமா என்பதை நாங்கள் முடிவு செய்வோம்” என்றார்.

ஏ.எஸ்.ஜி விரிவான எதிர் வாக்குமூலத்தை தாக்கல் செய்ய ஒப்புக்கொண்டார்.

இதற்கிடையில் இலவசங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்த அறிக்கையை கொண்டு வர சட்ட ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் உபாத்யாய் நீதிமன்றத்தை வலியுறுத்தினார்.

வாக்குறுதிகள் மற்றும் இலவசங்களை வழங்குவதைக் கட்டுப்படுத்த எதையும் செய்ய முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாட்டில் தான் உடன்படவில்லை என்றும் உபாத்யாய் கூறினார்.

பல்வேறு மாநிலங்களின் கடன் நிலைமையை சுட்டிக்காட்டிய உபாத்யாய், அவசரமாக ஏதாவது செய்யாவிட்டால் நாடு இலங்கை நிலைமையை நோக்கி செல்லும் என்று கூறினார்.

"ஆனால் இங்கே, இந்திய அரசு அதைக் கட்டுப்படுத்தும்," என்று தலைமை நீதிபதி கூறினார், மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் மாநிலங்கள் தங்கள் விருப்பப்படி கடன் வாங்க முடியாது என்று சுட்டிக்காட்டினார். வேறொரு வழக்குக்காக ஆஜரான கபில் சிபலை நோக்கி, “இந்த இலவசங்களைப் பற்றி உங்கள் பார்வை என்ன?” மற்றும் "எப்படி கட்டுப்படுத்துவது" என்று கேட்டார்.

“இது ஒரு தீவிரமான விஷயம். இது உண்மையிலேயே தீவிரமானது. தீர்வுகள் மிகவும் கடினமானவை, ஆனால் பிரச்சினை மிகவும் தீவிரமானது,” என்று கபில் சிபல் கூறினார். மேலும், “நிதி ஆணையம், பல்வேறு மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் போது, ​​மாநிலத்தின் கடனைக் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம், அதன் பின்னணியில், இலவசங்களின் பின்னணியில் மாநிலத்தின் பொருளாதாரம் பல ஆண்டுகளாக நிலைத்திருக்குமா என்பதைக் கண்டறியலாம்… இதுதான் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நடைமுறை. இந்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிடும் என்று எதிர்பார்க்க முடியாது. அது சாத்தியமில்லை." என்றும் கபில் சிபில் கூறினார்.

"ஆனால் குறைந்தபட்சம் யாராவது ஒரு வழியை யோசிக்க வேண்டும்," என்று தலைமை நீதிபதி கூறினார்.

“ஆமாம், நிதி ஆணையம் தான் அதைச் சமாளிப்பதற்குப் பொருத்தமான அதிகார அமைப்பு. அது ஒரு சுதந்திரமான அமைப்பு. வேண்டுமானால், நீங்கள் நிதி ஆணையக் குழுவை அதைக் கவனிக்க அழைக்கலாம்,” என்று கபில் சிபல் பரிந்துரைத்தார், அதைத் தொடர்ந்து பெஞ்ச் ஏ.எஸ்.ஜி.,யை நிதி ஆணையத்துடன் சரிபார்த்து அதைத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Supreme Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment