என்ஆர்சி பட்டியலில் இருப்பவர்கள் வாக்கு செலுத்த முடியுமா? என்ன சொல்கிறது தேர்தல் ஆணையம்
Assam NRC list : அசாம் மாநிலத்தில் என்ஆர்சி பட்டியலில் இருப்பவர்கள் பெயரும் வாக்காளர் பட்டியலில் இருக்கும். ஆனால் Doubtful or ‘D’ வாக்காளர்களாகவே இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் என்ஆர்சி பட்டியலில் இருப்பவர்கள் பெயரும் வாக்காளர் பட்டியலில் இருக்கும். ஆனால் Doubtful or ‘D’ வாக்காளர்களாகவே இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசம் உள்ளிட்ட அண்டைமாநிலங்களிலிருந்து, இந்தியாவின் அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவில் குடியேறியுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens (NRC)) தயாரிக்கப்பட்டது. முதற்கட்டமாக வெளியிட்ட பதிவேட்டில் பலரின் பெயர்கள் விடுபட்டிருந்த நிலையில், இறுதி பதிவேடு, கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த பதிவேட்டில் 19 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. 3.11 லட்சம் பெயர்கள் இணைக்கப்பட்டிருந்தன.
நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில், இந்த என்ஆர்சி பட்டியலில் இருந்த நீக்கப்பட்டிருந்தவர்கள் வாக்கு அளிக்க அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது 19 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், இவர்கள் வரும் தேர்தல்களில் வாக்கு அளிக்க அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்த இந்திய தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி கூறியதாவது, என்ஆர்சி பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு குடியுரிமை பிரச்னை இருப்பதால், அவர்களால் தற்போதைக்கு தேர்தலில் வாக்கு அளிக்க முடியாது. இருந்தபோதிலும் அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட மாட்டாது. தங்களது குடியுரிமை குறித்த விவகாரத்தில் Foreigners’ Tribunal எடுக்கும் முடிவை தொடர்ந்து அவர்கள் வாக்கு அளிக்க அனுமதிக்கப்படுவரா என்பது தெரியவரும் என்று அவர் கூறினார்.