Pawan Khera, Jignesh Mevani, Assam Police Tamil News: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (AICC) ஊடக மற்றும் விளம்பரத் துறையின் தலைவர் பவன் கேரா, இன்று சத்திஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடக்கவிருக்கும் காங்கிரஸ் கட்சியின் கூட்டத்திற்கு விமானத்தில் செல்லவிருந்தபோது கைது செய்யப்பட்டதற்கும், மற்றொரு காங்கிரஸ் தலைவரான ஜிக்னேஷ் மேவானி கடந்த ஏப்ரல் 2022ல் கைது செய்யப்பட்டதற்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன.
குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் சில மாதங்களில் நடைபெற இருந்த நிலையில், அப்போது சுயேச்சை எம்.எல்.ஏ.வாக இருந்த மேவானி, குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் இருந்து இரவு நேரத்தில் அசாம் காவல்துறையினரால் கவுகாத்திக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.

இதேபோல், பவன் கேரா அசாமின் டிமா ஹசாவோவின் ஹஃப்லாங் காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு அசாம் காவல்துறை அவரைக் கைது செய்துள்ளது. மேலும், “விசாரணைக்காக அவரை அழைத்து சென்றுள்ளோம்” என்று அசாம் போலீசார் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்துள்ளனர்.
பவன் கேராவைப் போலவே, ஏப்ரல் 22, 2022 அன்று கைது செய்யப்பட்ட ஜிக்னேஷ் மேவானிக்கு எதிரான வழக்கு, பிரதமர் நரேந்திர மோடியை அவமதித்ததாகக் கூறப்பட்டது. கோக்ரஜாரில் உள்ள உள்ளூர் பாஜக தலைவர் ஒருவர் மேவானியின் சமூக வலைதள பக்கத்தில் மோடி “கோட்சேவைக் கடவுளாகக் கருதுகிறார்” என்று கூறிய ட்வீட் குறித்து புகார் அளித்து இருந்தார்.
ஒரு உள்ளூர் நீதிமன்றம் மேவானியை மூன்று நாள் நீதிமன்றக் காவலில் வைத்தது, அதன் முடிவில் நீதிமன்றம் அதன் தீர்ப்பை அடுத்த நாளுக்கு ஒத்திவைத்தது, அவரை ஒரு நாள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியது. அசாம் காவல்துறை 10 நாட்கள் காவலில் வைக்க கோரிய நிலையில், அவருக்கு எதிரான “குற்றச்சாட்டுகளுக்கு முதன்மையான ஆதாரம்” இல்லை என்றும், முழு வழக்கும் “ஜோடிக்கப்பட்டது” என்றும் மேவானியின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
ஏப்ரல் 25 அன்று அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டாலும், பக்கத்து மாவட்டமான பார்பெட்டாவில் தாக்கல் செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் மேவானி மீண்டும் கைது செய்யப்பட்டார். கவுகாத்தியில் இருந்து கோக்ரஜாருக்கு அரசு வாகனத்தில் அவரைக் கொண்டு வரும் போது, மேவானி தனக்கு எதிராக “கொச்சை வார்த்தைகளை” பயன்படுத்தியதாகவும், தன்னைத் தாக்கியதாகவும், தள்ளும் போது தன்னை “தொடக்கூடாத” இடத்தில் தொட்டதாகவும் ஒரு பெண் ஆய்வாளர் மேவானி மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கினார்.
இறுதியாக, பார்பேட்டா மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி அபரேஷ் சக்ரவர்த்தி ஏப்ரல் 29 அன்று மேவானியை ஜாமீனில் விடுவித்தார். அவர் மீது மாநில காவல்துறை’தவறான எப்ஐஆர்’ பதிவு செய்தது, ‘நீதிமன்றம் மற்றும் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளது. இது (வழக்கு) குற்றம் சாட்டப்பட்டவர்களை நீண்ட காலத்திற்கு காவலில் வைக்கும் நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்டது. நீதிமன்றம் மற்றும் சட்டத்தின் செயல்முறையை துஷ்பிரயோகம் காவல்துறை செய்கிறது” என்று நீதிபதி அபரேஷ் சக்ரவர்த்தி தனது உத்தரவில் குறிப்பிட்டார்.
‘மாநிலத்தில் நடந்து வரும் காவல்துறையின் அத்துமீறல்களை’ மேற்கோள் காட்டிய நீதிபதி, காவல்துறை தன்னைத் தானே ‘சீர்திருத்திக் கொள்ள வேண்டும்’ என்று உத்தரவிடுமாறு கவுகாத்தி உயர் நீதிமன்றத்தை வலியுறுத்தினார்.
ஜாமீன் உத்தரவு மற்றும் பர்பேட்டா மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தின் அசாம் காவல்துறை தொடர்பான அவதானிப்புகள் ஆகிய இரண்டும் அசாம் மாநில அரசால் கவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மே 2 அன்று, உயர் நீதிமன்றம் சில அவதானிப்புகளுக்குத் தடை விதித்தது, அவை “பதிவில் எந்தப் பொருட்களும் இல்லாமல்” செய்யப்பட்டதாகக் கூறியது.
இந்த அவதானிப்புகளில் நீதிபதி சக்ரவர்த்தி, “சட்டம் ஒழுங்குப் பணியில் ஈடுபடும் ஒவ்வொரு காவல்துறையினரும் பாடி கேமராக்களை அணிய வேண்டும், குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்யும்போது அல்லது குற்றம் சாட்டப்பட்டவரை ஏதாவது ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லும்போது வாகனங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும்” என்று உயர்நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார். அல்லது பிற காரணங்களுக்காக, மேலும் அனைத்து காவல் நிலையங்களுக்குள்ளும் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.
“பாதிக்கப்பட்டவரின் சாட்சியம்”, “நீதிமன்றம் மற்றும் சட்டத்தின் செயல்முறையை தவறாகப் பயன்படுத்தி, குற்றம் சாட்டப்பட்டவரை நீண்ட காலத்திற்கு வைத்திருக்கும் நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்டது” என்பதை அறிந்ததாக நீதிபதி சக்ரவர்த்தி கூறியிருந்தார்.
மேவானி மீதான வழக்குகள் இன்னும் விசாரிக்கப்பட்டு கொண்டு தான் இருக்கின்றன; அவரும் தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்து கொண்டு தான் இருக்கிறார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil