குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போதைக்கு, குஜராத்தில் பாஜக 99 இடங்களிலும், காங்கிரஸ் 81 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. அதேபோல், ஹிமாச்சல பிரதேசத்தில் பாஜக 40 இடங்களிலும், காங்கிரஸ் 22 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், மின்னணு வாக்கு இயந்திரங்களில் எந்தவித முறைகேடுகளும் நடைபெறவில்லை எனவும், அவற்றால் தேர்தல் முடிவுகளில் எவ்வித மாற்றமும் நிகழாது எனவும், தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி இன்று காலையில் (திங்கள் கிழமை) உறுதிபடுத்தியுள்ளார். ஏற்கனவே, மின்னணு வாக்கு இயந்திரங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் புகார் எழுப்பியிருந்த நிலையில், ஏ.கே.ஜோதி இவ்வாறு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
"மின்னணு வாக்கு இயந்திரங்களின் உண்மை தன்மை குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. ஏற்கனவே இதுகுறித்து ஊடகங்களுக்கு விளக்கம் அளித்திருக்கிறோம். குஜராத்தின் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபாட் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்மூலம், வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்திருக்கிறோம் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள முடியும். அதனால், இந்த புகாரில் எந்தவித உண்மையும் இல்லை.”, என ஏ.கே.ஜோதி தெரிவித்தார்.
முன்னதாக, குஜராத் இரண்டாம் கட்ட தேர்தலின்போது மெஹ்சானா தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஜிவபாய் படேல், 3 மின்னணு வாக்கு இயந்திரங்கள் புளூடூத் உடன் இணைக்கப்பட்டிருப்பதாக புகார் எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.