மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி அந்தந்த மையங்களில் இன்று காலை 8:00 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
பகல் 12 மணி நிலவரப்படி, மத்தியபிரதேசத்தில் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் கடும் போட்டி நிலவுகிறது. காலையில் முன்னணியில் இருந்த காங்கிரசை பின்னுக்குத் தள்ளி பாஜக முன்னிலைப் பெற்றது.
தற்போது மீண்டும் காங்கிரஸ் இரண்டாவது முறையாக முன்னிலை பெற்றுள்ளது.
அதேபோல், ராஜஸ்தானிலும் பாஜக- காங்கிரஸ் இடையே போட்டி நிலவுகிறது.
மற்றபடி, சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பாஜக மிக மோசமாக தோல்வி அடைந்து இருக்கிறது.
இந்நிலையில், பாஜக சரிவு குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அனல் பறக்கும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். பாஜகவினரும், விடாமல் விமர்சனங்களுக்கு பதிலளித்து வருகின்றனர்.
5 மாநில தேர்தல் முடிவுகள் தோழமைக்கட்சிகளுக்கு உற்சாகம் தரும் வகையில் அமைந்துள்ளது. பிஜேபியின் கருவறைகளில் கருச்சிதைவு நடைபெற்றுள்ளது. பிஜேபிக்கு மாற்று காங்கிரஸ் என்பதும், மோடிக்கு மாற்று ராகுல் காந்தி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது - தமிழக காங். கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்று ஒருவருடம் ஆகிறது; அதற்கான வெற்றியாக தேர்தல் முடிவு அமைந்துள்ளது - சச்சின் பைலட், ராஜஸ்தான் காங்கிரஸ்.
மோடி அலை ஓயாது, ஓய வைக்கவே முடியாது. எந்த தோல்வியும் எங்களை துவளச்செய்யாது. வெற்றியால் பாஜக துள்ளிக்குதிப்பதும் இல்லை; தோல்வியால் துவள்வதும் இல்லை. வெற்றிகரமான தோல்வி இது - தமிழிசை சௌந்திரராஜன், தமிழக பாஜக தலைவர்.
அரையிறுதி ஆட்டத்தில், பாஜக அனைத்து மாநிலங்களிலும் ஒன்றுமில்லாமல் போய்விட்டது. 2019ல் நடக்கவுள்ள உண்மையான இறுதி ஆட்டத்திற்கான முன்னோட்டம் இது. ஜனநாயகத்தில், மக்கள் தான் என்றுமே ஆட்ட நாயகர்கள் என்பது நிரூபணமாகியிருக்கிறது. மூன்று மாநிலங்களிலும் பாஜகவை வீழ்த்தி வென்றவர்களுக்கு எனது வாழ்த்துகள் - மமதா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர்.
5 மாநில தேர்தல் நிலவரம், 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக அமைந்துள்ளது - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி.
5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு மிகப் பெரிய மரண அடி. நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டம் தான், இந்த தேர்தலில் பாஜக-வின் தோல்வி - மார்க். கம்யூ. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.
முன்னிலை நிலவரங்களை வைத்து முடிவை கூறிவிட முடியாது. வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு வாழ்த்துகள் - பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்..