இந்தியாவின் வடமாநிலங்களான மேகாலயா, திரிபுரா மற்றும் நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான காலம் முடிவடைய உள்ளது. இதனை தொடர்ந்து அந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தி புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும்.
மேகாலயாவில் காங்கிரஸ் ஆட்சியும், திரிபுராவில் கம்யூனிஸ்ட் ஆட்சியும், நாகலாந்தில், நாகலாந்து மக்கள் முன்னணி ஆட்சியும் நடந்து வருகிறது.
இந்த நிலையில், 3 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்த அப்டேட்ஸ் இங்கே,
மதியம் 12.11 - மூன்று மாநிலங்களிலும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. திரிபுரா மாநிலத்தில் பெப்ரவரி 18, 2017ல் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. மேகாலயா மற்றும் நாகலாந்தில் பெப்ரவரி 27ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. மூன்று மாநிலங்களுக்கும் சேர்த்து மார்ச் 3, 2018ல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அதே நாள் அறிவிக்கப்படுகிறது.
மதியம் 12.06 - தேர்தல் வாக்குப்பதிவின் போது, VVPAT மற்றும் EVM ஆகிய சாதனங்கள் மூன்று மாநிலங்களிலும் பயன்படுத்தப்படும் என தேர்தல் ஆணையர் தெரிவித்தார். கடந்த 20 ஆண்டுகளாக இங்கு தேர்தலின் போது EVM பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது முதன் முதலாக VVPAT சாதனம் பயன்படுத்தப்படுகிறது.
இதன் மூலம் வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். வாக்குப் பதிவு இயந்திரத்தில் நாம் வாக்களித்ததும் ஒரு அச்சிட்ட காகிதம் வெளியே வரும். அதில் நாம் யாருக்கு வாக்களித்தோம் என்பது பதிவாகி இருக்கும். இந்த சீட்டை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது. குறிப்பிட்ட கால இடைவெளியில் அந்தச் சீட்டு அருகே உள்ள பெட்டிக்குள் விழுந்துவிடும். இது வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரம் என அழைக்கப்படுகிறது.
மதியம் 12.04 - தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் தேதி மற்றும் பிற விவரங்கள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசத் தொடங்கினார்.