இமாச்சல் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டன. எனினும் குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படவில்லை.
இமாச்சலப் பிரதேசத்தில் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவ அடுத்த மாதம் (நவம்பர்) 12ஆம் தேதி நடைபெறுகிறது.
இமாச்சலப் பிரதேசத்துக்கான வேட்புமனு தாக்கல் அக்டோபர் 17ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த வேட்புமனு தாக்கல் அக்.25இல் நிறைவேறுகிறது.
தொடர்ந்து, வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்.27இல் நடக்கிறது. போட்டியாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை வாபஸ் பெற அக்.29 கடைசி நாளாகும்.
வாக்கு எண்ணிக்கை
இதையடுத்து நவ.12இல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந தேர்தலில் பதிவான வாக்குகள் டிச.8ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
எனினும் குஜராத் சட்டமன்ற தேர்தல் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. குஜராத் சட்டசபையின் பதவிக்காலம் பிப்ரவரி 18, 2023 அன்று முடிவடைகிறது.
182 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில், 111 பாஜக மற்றும் 62 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ளனர். இதற்கிடையில், ஹிமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் ஜனவரி 8, 2023 அன்று முடிவடைகிறது. பாஜகவுக்கு 45 எம்எல்ஏக்கள் உள்ளனர், காங்கிரஸுக்கு 20 பேர் உள்ளனர்.
முன்னதாக, தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே ஆகியோர் செப்டம்பர் மாதம் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்திற்கு சென்று தேர்தல் தயார்நிலையை ஆய்வு செய்தனர்.
குஜராத் தேர்தல் எப்போது?
இமாச்சலில் 55 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1.86 லட்சம் பேர் முதல்முறை வாக்காளர்கள் என்றும், 1.22 லட்சம் பேர் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் மொத்தம் 7,881 வாக்குச் சாவடிகள் உள்ளன, இதில் 142 பெண்களால் முழுமையாகவும், 37 மாற்றுத்திறனாளிகளால் நிர்வகிக்கப்படுகின்றன.
குஜராத் சட்டமன்ற தேர்தல் பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil