/indian-express-tamil/media/media_files/2025/09/09/jaishankar-2025-09-09-08-20-52.jpg)
'வர்த்தகத்தில் அரசியல் வேண்டாம்'... வர்த்தகத் தடைகளை எதிர்த்து பிரிக்ஸ் மாநாட்டில் ஜெய்சங்கர் பேச்சு
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக, இந்தியா மீது கூடுதலாக 25% வரி விதித்த அமெரிக்காவின் முடிவுக்கு, இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் கவலை தெரிவித்துள்ளார். வர்த்தக நடவடிக்கை வர்த்தகமல்லாத விஷயங்களுடன் இணைக்கப்படுவதை அவர் கண்டித்தார். மேலும், வர்த்தகம் மற்றும் முதலீடுகளுக்கு "நிலையான மற்றும் கணிக்கக்கூடிய சூழல்" வேண்டும் என்றும், பொருளாதார நடைமுறைகள் "நியாயமான, வெளிப்படையான மற்றும் அனைவருக்கும் பயன் அளிப்பதாக" இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பிரிக்ஸ் மாநாட்டில் பேச்சு
பிரிட்டன், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான (BRICS) மாநாட்டில் ஆன்லைன் வழியாகப் பேசிய ஜெய்சங்கர், "உலகத்தின் இன்றைய நிலை கவலைக்குரியது. கடந்த சில ஆண்டுகளாக, கொரோனா பெருந்தொற்றின் பேரழிவு, உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு / மேற்கு ஆசியாவில் பெரும் மோதல்கள், வர்த்தகம்-முதலீட்டு ஓட்டத்தில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வு, தீவிர காலநிலை மாற்ற நிகழ்வுகள் மற்றும் நீடித்த வளர்ச்சி இலக்குகள் (SDG) திட்டத்தின் மந்தநிலை போன்றவற்றை உலகம் எதிர்கொண்டது. இந்த சவால்களுக்கு மத்தியில், சர்வதேச அமைப்பு தோல்வியடைவதுபோல் தெரிகிறது. பல கடுமையான பிரச்னைகள் கவனிக்கப்படாமல் இருப்பதால், உலக ஒழுங்கிற்கே பின்விளைவுகள் ஏற்படுகின்றன" என்று கூறினார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
அவர் மேலும் கூறுகையில், "வர்த்தக முறைகள் மற்றும் சந்தை அணுகல் ஆகியவை இன்று உலகப் பொருளாதார விவாதங்களில் முக்கியப் பிரச்னைகளாக உள்ளன. நிலையான வர்த்தகத்தை ஊக்குவிக்க, உலகம் ஆக்கபூர்வமான மற்றும் கூட்டு அணுகுமுறைகளை ஏற்க வேண்டும். வர்த்தகத் தடைகளை அதிகரிப்பதும், பரிவர்த்தனைகளை சிக்கலாக்குவதும் உதவாது. வர்த்தக நடவடிக்கைகளை வர்த்தகமல்லாத விஷயங்களுடன் இணைப்பதும் கூடாது. பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்குள் உள்ள வர்த்தக ஓட்டங்களை மறுபரிசீலனை செய்வதன் மூலம் ஒரு முன்மாதிரியாக இருக்கலாம். இந்தியாவைப் பொறுத்தவரை, எங்கள் மிகப்பெரிய வர்த்தக பற்றாக்குறைகளில் சில பிரிக்ஸ் கூட்டாளிகளுடன் உள்ளன. விரைவான தீர்வுகளுக்காக நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்" என்றார்.
அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட வரிகளுக்குப் பிறகு, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா இந்த மாநாட்டைக் கூட்டினார். இந்தியப் பிரதமர் மோடிக்கு பதிலாக ஜெய்சங்கர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டது, அமெரிக்காவுடன் இந்தியா மேற்கொள்ளும் இராஜதந்திர அணுகுமுறையின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் பிற நாடுகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர். இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய இரு நாடுகளுக்கும் அமெரிக்கா 50% வரி விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகப் பொருளாதாரத்தில் நிலையான சூழல் அவசியம்
"உலகம் ஒட்டுமொத்தமாக வர்த்தகம் மற்றும் முதலீடுகளுக்கு நிலையான மற்றும் கணிக்கக்கூடிய சூழலை நாடுகிறது. அதே நேரத்தில், பொருளாதார நடைமுறைகள் நியாயமானதாகவும், வெளிப்படையானதாகவும், அனைவருக்கும் நன்மை பயப்பதாகவும் இருக்க வேண்டும். பல தடைகள் ஏற்படும்போது, இதுபோன்ற அதிர்ச்சிகளைத் தாங்கும் வகையில் நாம் நம் அமைப்பை வலுப்படுத்த வேண்டும். அதாவது, அதிக மீள் திறன் கொண்ட, நம்பகமான, குறுகிய விநியோக சங்கிலிகளை உருவாக்க வேண்டும். மேலும், உற்பத்தி மற்றும் தயாரிப்பை நாம் மக்களிடையே பரவலாக்க வேண்டும். பல புவியியல் பகுதிகளில் அவற்றின் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும். இந்த வகையில் ஏற்படும் முன்னேற்றம் பிராந்திய தன்னிறைவுக்கு வழிவகுக்கும், மேலும் நிச்சயமற்ற காலங்களில் ஏற்படும் பதட்டங்களைக் குறைக்கும்" என்று ஜெய்சங்கர் கூறினார்.
சர்வதேச வர்த்தக அமைப்பு, திறந்த, நியாயமான, வெளிப்படையான, பாரபட்சமற்ற, உள்ளடக்கிய, சமமான மற்றும் விதிகள் அடிப்படையிலான அணுகுமுறைகளை அடிப்படையாகக் கொண்டது என்றும், வளரும் நாடுகளுக்கு சிறப்பு சலுகைகள் உண்டு என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த விதிகளை இந்தியா வலுவாக நம்புவதாகவும், அவை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இறுதியாக, "உலகம் இன்று நடக்கும் மோதல்களுக்கு அவசர தீர்வை நாடுகிறது. சர்வதேச தெற்கு நாடுகள் உணவு, எரிசக்தி மற்றும் உரப் பாதுகாப்பில் பின்னடைவை சந்தித்துள்ளன. கப்பல் போக்குவரத்து குறிவைக்கப்படும்போது, வர்த்தகம் மட்டுமல்ல, வாழ்வாதாரங்களும் பாதிக்கப்படுகின்றன. ஒரு பகுதி பாதுகாப்பு மட்டும் உலகளாவிய தீர்வாக இருக்காது. எதிர்ப்புகளுக்கு விரைவில் ஒரு முடிவுகட்டுவதும், உறுதியான தீர்வை உறுதி செய்ய இராஜதந்திரத்தை மேற்கொள்வதும் நமக்கு முன்னால் உள்ள வெளிப்படையான வழி" என்று அவர் தனது உரையை முடித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.