ஹைதராபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டியின் (CWC) இரண்டு நாள் கூட்டத்தில், பெரும்பாலும் டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், ஆம் ஆத்மி கட்சியுடன் (AAP) காங்கிரஸ் கட்சியின் சாத்தியமான கூட்டணி குறித்து கவலை தெரிவித்தனர். இதனையடுத்து மாநில பிரிவுகளுடன் கலந்தாலோசித்த பின்னரே இறுதி அழைப்பு விடுக்கப்படும் என தலைமை கூறியதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பில், இந்தி மையப்பகுதியைச் சேர்ந்த சில தலைவர்கள், கூட்டணியை தாக்குவதற்கு பா.ஜ.க பயன்படுத்திய சனாதன தர்ம சர்ச்சை குறித்து காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர். மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பா.ஜ.க.,வின் பொருத்தமற்ற பொறிகளில்” சிக்க வேண்டாம் என்று கட்சித் தலைவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
ஆங்கிலத்தில் படிக்க: At CWC meeting, what Congress top brass discussed: Concerns about tie-up with AAP, Sanatan Dharma row
ஆம் ஆத்மி உடனான சீட்-பகிர்வு ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் எழுப்பப்பட்ட கவலைகள், தேர்தல்களின் போது கூட்டணியின் உறுப்பினர்கள் தங்களுக்குள் தொகுதிகளை எவ்வாறு பிரித்துக் கொள்வது என்பதை தீர்மானிக்கும் செயல்முறையைத் தொடங்க இந்தியா கூட்டணி முடிவு செய்த சில நாட்களுக்குப் பிறகு வந்துள்ளது. தொகுதிப் பங்கீடு குறித்து உறுப்புக் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி, “விரைவில் முடிவெடுக்க வேண்டும்” என்று கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது.
பஞ்சாப் எதிர்க்கட்சித் தலைவர் பர்தாப் சிங் பஜ்வா மற்றும் டெல்லி காங்கிரஸ் தலைவர்களான அஜய் மக்கன் மற்றும் அல்கா லம்பா ஆகியோர் ஆம் ஆத்மி கட்சியுடன் தேர்தல் கூட்டணி குறித்து கவலை தெரிவித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியுடன் எந்த புரிந்துணர்வுக்கும் எதிராக பஞ்சாப் கட்சி தொண்டர்களின் உணர்வு இருப்பதாக பர்தாப் சிங் பாஜ்வா சுட்டிக்காட்டிய நிலையில், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரசுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை நிறுத்துவதாக அஜய் மக்கன் கூறினார். சத்தீஸ்கரில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஸ்கிரீனிங் கமிட்டியின் தலைவர் அஜய் மக்கன் ஆவார். பஞ்சாபில் ஆளும் கட்சியும் பிரதான எதிர்க்கட்சியும் கைகோர்த்தால், அது பா.ஜ.க மற்றும் சிரோமணி அகாலி தளத்திற்கு உதவும் என்றும் பர்தாப் சிங் பாஜ்வா காங்கிரஸ் காரிய கமிட்டியிடம் கூறினார்.
சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் ஆம் ஆத்மியின் தாக்குதல் காங்கிரஸுக்கு எதிரானது என்றும் பா.ஜ.க.,வுக்கு எதிரானது அல்ல என்றும் தலைவர்கள் வாதிட்டனர். கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, கூட்டணிகள் மற்றும் தொகுதிப் பங்கீடுகள் குறித்து பின்னர் விவாதிக்கப்படும் என்று காங்கிரஸ் காரிய கமிட்டியிடம் தெரிவித்ததாகவும், ஆனால் மாநில பிரிவுகளுடன் கலந்தாலோசித்த பிறகே அத்தகைய முடிவுகள் எடுக்கப்படும் என்று குழுவுக்கு உறுதியளித்ததாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன. டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி, சற்று சமரசமான அணுகுமுறையைக் கடைப்பிடித்தார்.
மல்லிகார்ஜூன் கார்கே தனது உரையில் ஒற்றுமை மற்றும் ஒழுக்கத்தைப் பேணுவதை வலியுறுத்தினார். கட்சித் தலைவர்கள் தங்களது தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு கட்சியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஜம்மு காஷ்மீரில் எப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். "இது நாம் ஓய்வெடுக்க வேண்டிய நேரம் அல்ல... நமது ஜனநாயகத்தை காப்பாற்ற இந்த சர்வாதிகார அரசாங்கத்தை நாம் ஒன்றுபட்டு தூக்கியெறிய வேண்டும். தனிப்பட்ட நலன்களை ஒதுக்கி வைத்து அயராது உழைக்க வேண்டும். தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு கட்சியின் வெற்றிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். காங்கிரஸின் நலன்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், சுயகட்டுப்பாட்டை கடைப்பிடித்து, நமது தலைவர்கள் அல்லது கட்சிக்கு எதிரான கருத்துக்களுடன் ஊடகங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்,” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கூறினார்.
ஒற்றுமை மற்றும் ஒழுக்கத்தை வலியுறுத்தி, “2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.,வை தோற்கடித்து, நாட்டில் மாற்று ஆட்சி அமைக்க முனைப்புடன் செயல்படுவதே நமது இலக்காக இருக்க வேண்டும்” என்று மல்லிகார்ஜூன் கார்கே கூறினார்.
சனாதன தர்ம சர்ச்சை
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலும் மூத்த தலைவர் திக்விஜய சிங்கும் சனாதன தர்ம சர்ச்சையில் இருந்து காங்கிரஸ் கட்சி முற்றிலும் விலகி இருக்க வேண்டும் என்று வாதிட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. ராகுல் காந்தி தனது பங்கில், கருத்தியல் தெளிவின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தினார்.
“நாங்கள் அனைவரும் காங்கிரஸ் காரிய கமிட்டி மண்டபத்திலிருந்து முழுமையான தெளிவுடன் கூடிய ஆழ்ந்த சிந்தனையுடன் வெளியில் வந்தோம். பா.ஜ.க.,வின் பொருத்தமற்ற வலைகளில் சிக்குவதற்கு எதிராக அவர் (ராகுல்) எங்களை எச்சரித்தார். இவை சாதாரண ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ அல்லது எங்களில் எவருக்கும் பிரச்சினை அல்ல,” என்று காங்கிரஸ் ஊடகத் துறைத் தலைவர் பவன் கேரா செய்தியாளர்களிடம் கூறினார்.
இரண்டு நாள் அமர்வின் முடிவில், காங்கிரஸ் காரிய கமிட்டி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது, “சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் விரைவில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மக்களின் தீர்க்கமான ஆணையைப் பெறும்”. (தேர்தலில் பெரும்பான்மையை பெறும்)
லோக்சபா தேர்தலை பொறுத்தவரை, போருக்கு காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது. “நமது நாட்டு மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்பதில் நம்பிக்கை உள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கு, சுதந்திரம், சமூக மற்றும் பொருளாதார நீதி, சமதர்ம மற்றும் சமத்துவம் பற்றிய அவர்களின் எதிர்பார்ப்புகளை நாங்கள் நிறைவேற்றுவோம்,” என்று இரண்டு பத்திகள் கொண்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.